கடலோரக் காதல்
அலையோடு காற்று
கைகோர்த்து வர
நாம் கைகோர்த்து
நடந்ததை சொல்லவா?
கடலில் சூரியன்
கால் நனைக்க
கடற்கரையில்
நாம் கால் நனைத்ததை சொல்லவா?
சங்கும் சிப்பியும்
விட்டுச்சென்ற சுவடுகளுக்கு நடுவே
நாம் கால் சுவடுகள் பதித்ததை சொல்லவா?
ஓடி ஒளியும் நண்டை
நீ துரத்த
உன்னை நான் துரத்த
நீ வெட்கி ஓடியதை சொல்லவா?
கடலின் மடியில்
நான் உன் மடியில்
துயில் கொண்டதை சொல்லவா?
பாறையில் அலை
மோதி சிதற
உன் பார்வையில் மோதி
மனம் சிதறியதை சொல்லவா?
கடற்காற்று உரச
தென்னை தலை சாய
உன் கூந்தல் உரச
தோள் சாய்ந்ததை சொல்லவா?
கடல்மீது அவ்வபோது
மிதக்கும் மேகங்கள்
என் முகம் மீது அவ்வபோது
மிதந்த உன் சேலையை சொல்லவா?
கரை முழுக்க
கடல் காற்று வீச
என் காதோரத்தில்
உன் மூச்சுக்காற்று வீசியதை சொல்லவா?
கடல் அலை
கரைமண்ணை உரச
நம் கன்னம்
உரசியதை சொல்லவா?
விட்டு விட்டு
அலைகள் கரையை முத்தமிட
உன் தேனிதழ்
என்னை முத்தமிட்டதை சொல்லவா?
கடலில் விழுந்த
மலைதுளிபோல்
நான் உன்னுள் கலந்ததை சொல்லவா?
நினைவுகள் இன்னும்
ஆயிரமுண்டு
அத்தனையும் சொல்லவா?
பெண்ணே!!