மழை
திங்கள் தினம்
வான வளாகம்
சுட்டெரிக்கும் சூரியனின்
விடுமுறை விண்ணப்பத்தில்
கார்போர்த்திய மழைமேகமும்தன்
கைநாட்டை கரம்பிடித்திருந்தது...
இச்சையின்றி இதுவரையும்,
இளம் கழித்த
மரவிதழ்கள்,
பச்சைவண்ண புன்னகையில்
பல்லிளித்த மழைசொட்டின்
'இச்' முத்த இளஞ்சூட்டை
இலவசமாய் ருசிபார்க்க,
கற்பிழந்த கருவேலமும்
கண்ணீரை மண்பெய்தது...
சோரம் போன மரமகளை
மண்தாயும் மார்தளுவ,
ஏய்த்து போன மழைமகனின்
இழவுக்கு நாள்குறித்தே,
"மசமசக்கும் மண்வாசம்
மண்பிரியும் தருணமுன்னே
குளிர்காற்றின் கூர்முனையால்
குலையறுப்பேன் கருவாயா..." என
சூளுரையில் சூடேற்றி
சுதிமுழங்கியது சூறைக்காற்று...
இத்தனை காட்சிகளும்,
ரம்மியத்தின் ரசம்பூசி,
இயற்கை தியேட்டர்களில்,
BGM களுடன்
பயணம் இட,
ஏதும் உணராமல்,
கம்பிபூட்டிய ஜன்னலுக்குள்
கணினிகால கைதி ஒருவன்,
இயந்திரத்தின் திரைதொட்டு
எதுகைக்கு ஏதுவாய்
மோனைகளில் முரண்காட்டி,
முகப்புத்தகத்தின் முகத்திரையில்
சொடுக்குகிறான் STATUS ஒன்றை...
" Feeling Cool #Raining " -JK