பாடலோடு பறவையானேன் - 3 -சந்தோஷ்

அப்போது.. அந்த நாளில்.. எனக்கு கவிதை எழுதுவது என்பது எப்படி என்று கூட அறியாத பருவம். திரைப்படங்களில் வரும் பாடல்களில் சில வரிகள் என் நெஞ்சில் பதிந்து எதாவது ஒன்றை எழுத தூண்டிக்கொண்டே இருக்கும்.
பாசமலர் படத்தில் நடிகர் திலகம் பாடும் பாசத்தின் உச்சம் “ மலர்ந்தும் மலராத ” பாடலில் வரும் வரிகள் என்னை உணர்ச்சிவயப்பட செய்துக்கொண்டே இருக்கும். ரஜினிகாந்தின் படத்தில் வரும் ”மனிதன் மனிதன் எவன் தான் மனிதன் “ எனும் பாடலின் வரிகள் என்னை எதுவோ ஆக்கி கோவப்படவைக்கும். கமலின் “ இளமை இதோ இதோ “ பாடல் வரிகள் என்னில் கிளர்ச்சியை தூண்ட வைக்கும்.
இப்படியாக பல பாடல்களின் வரிகளில் வரும் வீரியத்திற்கும் குணத்திற்கும் ஏற்ப என் மனதில் ஒரு பாதிப்பு ஏற்படுத்திக்கொண்டே என் முகத்திலும் பாவனைகளை மாற்ற செய்யும். பாடலின் வரிகள் .. அதன் ஆளுமை.. அதுப்போல என்னால் ஏன் எழுத முடியாது என்கிற கேள்விதான் பின்னொரு நாட்களில் என்னை கவிதை என்று எழுத வைத்தது என்றே சொல்லலாம்.
இந்த வகையில் என்னை பெரிதும் பாதிக்கவைத்த பாடல்....
1988 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு படம். சமீபத்தில் மறைந்த இயக்குர் சிகரம் கே.பாலசந்தரின் அற்புதமான இயக்கத்திலும்.. காதல் மன்னன் ஜெமினி கணேசன் மற்றும் காதல் இளவரசன் கமலஹாசன் அவர்களின் அருமையான நடிப்பிலும் உருவான “ உன்னால் முடியும் தம்பி “ திரைப்படத்தில் வரும் ஒரு பாடல்.. இன்றளவும் நான் எழுதும் எழுதக்கூடிய கவிதைகளுக்கான வேர் , மூலம் . இந்த பாடலை கேட்கும் போதெல்லாம்... நிச்சயம் கவிப்பேரரசு வைரமுத்துதான் எழுதியிருப்பார் என தவறாக கணித்திருந்தேன்.
ஆனால் இந்த கட்டுரை எழுதுவதற்காக இணையதளங்களில் சில செய்திகளை சேகரிக்கும் போதுதான் தெரிந்தது. இந்த கம்யூனிச சித்தாந்த கொள்கையை ஏந்திய அற்புதமான .. அதி அற்புதமான பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர் “ புலமைப்பித்தன் “ என்று.
அந்த பாடல்..
எஸ் .பி .பாலசுப்ரமணியம் அவர்களின் வசீகர குரலில்
--தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா தானா
--தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா
என ஜதி மெட்டு போட்டு தொடங்கும் .....
“ புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே”
ஆரம்ப வரிகளே ஆதங்கம்.... ஆனால் பாடலின் தன்மை மென்மையாய்...மெலோடியாய் பயணிக்கும். அதுதான் இளையராஜா...! எப்படி அடிச்சு எப்படி பாமரனுக்கு உணர்த்த வைக்க வேண்டும் எனும் மந்திரம் தெரிந்த மாயவன். இது இளையராஜாவினால் மட்டும் அல்ல. இந்த படம் பாலச்சந்தரின் படம். பொதுவாகவே பாலசந்தர் அவர்களின் படத்தில் வரும் பாடல்கள் சங்கீதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே இருக்கும். அவரின் எல்லா படங்களிலும் சங்கீதத்தின் பெருமை சொல்லும் ஒரு பாடலாவது இல்லாமல் இருக்காது. அது மேற்கத்திய இசையாக இருந்தாலும் கூட...
இவ்வாறு இருக்க, உன்னால் முடியும் தம்பி எனும் இந்த படமோ.... சங்கீத குடும்பத்திலிருக்கும் ஒர் இளைஞனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். சங்கீத ஜாலங்கள் இல்லாமல் இருக்குமா என்ன ?
சரி பாடலின் வரிகளுக்கு வருவோம்.
/// புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
--பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
--பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே
--வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
--நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே - சனம்
--நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே - இது
--நாடா இல்லே வெறும் காடா? - இதெக்
--கேக்க யாரும் இல்லை தோழா - இது
--நாடா இல்லே வெறும் காடா? இதெக்
--கேக்க யாரும் இல்லை தோழா ///
என்ன வளம் இல்லை இத்திருநாட்டில் ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில் என்று எம்.ஜி.ஆர் பாடல் ஒன்று உண்டு... அந்த பாடலையும் மிஞ்சி ஒரு கேள்வியை கோபத்தை தாங்கி வருகிறது இந்த பாடல்... “எல்லாம் உண்டு... சண்டையும் உண்டு.. பஞ்சமும் உண்டு சாதிகள் உண்டு, கட்சிகள் உண்டு.. பசித்தவன் வயிற்றுக்கு நீதி சொல்ல எவனும் வருவது இல்லை. நிம்மதியா வாழ ஒரு வழியும் இல்ல.. இது என்ன நாடா... வெறும் காடா............ இதை கேட்க எவனும் இல்லையா....... தோழா . “ ஒரு சாமானியனின் கோபம்... இந்த பாடலின் முதல் பல்லவியிலேயே தெறிக்கிறது பாருங்கள். கவிஞர் புலமைபித்தன். எந்த அளவிற்கு கோபமடைந்து எழுதியிருப்பார் என்று நம்மால் உணர முடிகிறது.
தோழா..........! இந்த பாடலில் வரும் இந்த வார்த்தையே போதும். கம்யூனிசம்.... பேசும் புரட்சி வரிகள் என்று.
இன்று கம்யூனிசம் என்றாலே சினிமாவில் இட்லியை வைத்து பேசும் கேலிக்கூத்து வசனம் என்றளவிற்கு சென்று விட்டது. இந்த பாடல் முழுக்க கம்யூனிசம் தான்.. கம்யூனிசம் எது என்று வருங்காலத்தில் ஏன் இந்த காலத்திலே யாரேனும் கேட்டால் இந்த பாடலை கேட்க வைத்து.. இதுதான் டா கம்யூனிசம் என புரியவைக்கலாம்.
( பல்லவி வரிகளில் ஆரம்பிக்கும் போது டிரம்ஸ் இசை உச்ச ஒலியிலும் தபேலா தாள ஒலி மெலிதாகவும் கூடவே கீபோர்டும் வாசிக்கப்படுவதாக பிண்ணனி இசையை அமைத்து இருப்பார் இசைஞானி.. அடுத்த வரி சரணமாக வரும் போது டிரம்ஸ் வாசிப்பது நின்றுவிடும் .. ஒர் அழகிய புல்லாங்குழல் இசையுடன் தொடங்கி தபேலா தாளம் மட்டும் வாசிக்கப்படும் .. இடை இடையே கிட்டார் ஒலியை சிணுங்க வைத்திருப்பார் பாருங்க. யப்ப்பா யப்பா.. ரசனை இருந்தால் நம் ஆன்மாவை நாம் உணரலாம். )
--வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
--யரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
--ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
--வீடின்றி வாசலின்றித் தவிக்குது
--எத்தனை காலம் இப்படிப் போகும்?
--என்றொரு கேள்வி நாளை வரும்
--உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
--என்றிங்கு மாறும் வேளை வரும்
//
தொழிலாளி தொழிலாளியாகவே மடிகிறான்.. வசதியாக வாழ ஒரு வீடு கூட இல்லாமல் ஏங்குகிறான். ஆனால் இவன் உழைப்பில் உருவான மாளிகையில் வாழ்வது முதலாளி/பணக்கார வர்க்கம். இந்த நிலை ஏன் மாறக்கூடாது. மனநிலை என்று மாறும் . இருப்பதை பகிர்ந்து சமத்துவம் காணும் காலம் வரும் என்று எழுதிய கவிஞர்... இதெல்லாம் நடக்க என்ன செய்ய வேண்டும் எனவும் சொல்கிறார் .. படியுங்கள்
--ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
--நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
--வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு////
இதுதான் கம்யூனிசம். .. இதுதான் தோழா என்ற வார்த்தையின் பலம்.. ஆயிரம் கைகள் ஒன்றுக்கூடி போராடினால் , நம்பிக்கையோடு போராடினால் நிச்சயம் உண்டு வெற்றி.. ஒற்றுமை, மன பலம், போராட்டம் இதுதான் கம்யூனிசத்தின் கோட்பாடுகளில் ஒன்று .. இவை இன்று நம்மிடம் இருக்கிறதா என்றொரு கேள்வி எனக்கு இப்போது எழுகிறது. எந்த அக்கிரமத்தையாவது கேட்க துணிகிறோமா ?
ஹம்ம்ம்ம் சரி, பாடலின் வரிக்கு செல்வோம்.
முதல் சரணம் முடியும் போது கிட்டார் வாசிப்பில் ஒரு சிணுங்கல் இருக்கும்.. கேட்க தவறாதீர்கள்
மீண்டும் பல்லவி வரி “ புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு” தொடங்கும் போது.. டிரம்ஸ் ஒலி மீண்டும் வரும். பாடலோடு பறவையானேன் என்றால் இப்படி விதப்படுத்தி அமையும் பாடலின் இசையினால் தான்.
(அடுத்த சரணத்திற்கு இடைப்பட்ட இசையில்
இப்போது பேஸ் கிட்டார் ஒலி.. குயில் பறவைகளின் ஒலியோடு , புல்லாங்குழல், டிரம்ஸ் வாசிப்பில் அழகான இயற்கை காட்சியை இசையின் மூலமே காட்டுவார் இளையராஜா...
எந்த வாசிப்புக்கருவி என்று தெரியவில்லை. கீபோர்டின் இசையா என்று கூட தெரியாது. அந்த கினிங் கினிங் கினிங் எனும் அற்புத ஒலிக்கு பிறகு,
மீண்டும் சரணம்.. மீண்டும் தபேலா ஒலி ...)
மாற்றம் வேண்டுமெனில் நம்பிக்கையோடு போராட சொன்ன கவிஞர் ... இந்த வரிகளில் எப்படி நம்பிக்கை வரவேண்டும் என்றும் எடுத்துக்கூறுகிறார்.
// ஆத்துக்குப் பாதை இன்று யாரு தந்தது?
--தானாகப் பாதை கண்டு நடக்குது
--காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது?
--தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது ///
நம்பிக்கை என்பதும் போராட்டம் என்பதும் இயல்பாய் சுய முயற்சியாய் உருவாக வேண்டும் என்று அழகாக உவமைப்படுத்தி இருக்கிறார் . இவ்வாறாக நம்பிக்கை கொண்டாலும் எப்படி அந்த நம்பிக்கையின் தன்மை இருக்க வேண்டும் என அடுத்த வரியில் சொல்கிறார்.
// எண்ணிய யாவும் கைகளில் சேரும்
--நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
--காலையில் தோன்றும் சூரியன் போலே
--பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே //
----
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா?
கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா? //
சாத்தியப்படுக்கூடிய விடயங்கள் தான் ஏன் சாத்தியப்படுவதில்லை.. இது மேற்கூறியவரியிலுள்ள ஆளுமையான பொருள்.
இதில்
நதிகள் இணைப்பு பற்றி 25 ஆண்டுகளுக்கு முன்னரே கவிஞர் கூறியிருக்கிறார் பாருங்கள்.
***கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?*** இப்போது இருக்கும் சூழ்நிலையில் கவிஞரின் ஏக்கம், ஆசை நிறைவேறுமா என்பதே கேள்விக்குறிதான் . ஆம் தெற்கே இருக்கும் காவேரியே தமிழகத்திற்கு வரவழைக்க பெரும்பாடாய் இருக்கிறது. ஆனாலும் கம்யூனிசத்தின் படி போராடுவோம். !
***பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா? **
மீண்டும் கம்யூனிச சித்தாந்த வரிகள்... பாடுபடும் தோழர்களுக்கு உரிய மரியாதை கிடைத்திட வேண்டும் என வலியுறுத்துகிறது இந்த வரி.
(மீண்டும் புஞ்சை உண்டு என்று ஆரம்பிக்கும் வரியில் டிரம்ஸ் ஒலி பிண்ணனியில் இசைக்க தொடங்கும்... )
இந்த படத்தில் கமலஹாசன் அவ்வளவு அழகு..! இந்த பாடலில் கமலஹாசனின் நடனம் , பாவனை கொள்ளையழகு.. சகலகலா வல்லவன் ஆயிற்றே...!
“ சுத்த தன்யாசி “ எனும் கர்நாடக ராகத்தில் அமைந்த இந்த பாடலில் கர்நாடக ராகத்தின் சாயல் தெரியாமல் இசை ஆளுமை செய்திருப்பார் இசைஞானி இளையராஜா. கர்நாடக இசையை ஜனரஞ்சகமாக மாற்றி புகுந்து விளையாடுவதில் கில்லாடி நம்ம இளையராஜா..!
ராஜா.. ராஜாதான்....!!
(மீண்டும் வேறொரு ரசனையோடு சந்திப்போம் )
-இரா.சந்தோஷ் குமார்