நடைமுறைக் காதல்
நினையாத நேரத்தில்..
நினைக்காத இடத்தில்....
அவளேதான்.
இதயத்தில்..
இருபது ஆண்டுகள்
நினைவுகளின் ஆழத்தில்
மூச்சோடு இருக்கும் அவள்தான்.
என் வாழ்வின் கேள்விக்கு
மோனப்பார்வையிலே பதில் சொல்லி
சமூகக்கேடால் ஊமையாகி
ஊரை காலிசெய்த அவளேதான்.
பழகிப் பிரிந்த கண்கள்- கணத்தில்
களிப்பில் மெய் கலக்க
நெஞ்சிலே மௌனமாய்
ஒரு எரிமலை.
இதயத்தில் தெரிந்தவளும்
எதிரில் தெரிபவளும்
அவளேதான்.
அவளின் வண்ணத்திலும்
வடிவத்திலும் புள்ளிகள்
ஏதுமின்றி வருடங்களிட்ட
கோலம்தான் வித்தியாசம்.
இன்று
கண்கள் சந்தித்த வேளையில்
நடக்க மறந்த அவள் கால்களிலும்..
வினாடிக்குள்
வியப்பையும் வேதனையையும்
கொட்டிய அவள் விழிகளில்
சுடரிட்டதும்..
அன்று ஊமையாய்
அவள் சொன்ன அதேக்
காதல்தான்..
கணத்தில் கனத்துப்போன
என் இதயமோ மௌனமாய்
அழுதது...
இன்னோரு பிறவி வேண்டும்...
உடனிருப்பவள் தாயாக
இடம் மாறிச் சென்றவள் தாரமாக.

