இப்படி நாம் காதலிப்போம்“பொங்கல் கவிதைப்போட்டி 2015”
காற்றும் மூச்சும் போல்
கவிதையும் வீச்சும் போல்
சேற்றில் செந்நெல் போல் - ஒரு
சொந்தம் வளர்ப்போமா?
காட்டுப் புறாக்களைப் போல் - நெஞ்சம்
கூடி சிலிர்ப்போமா?
நேற்றின் நினைவுகளை -எந்த
நாளும் விதைப்போமா?
சுற்றம் மதிப்போமா? -அதில்
சேர்ந்து கரைவோமா?
வெற்றுக் கிண்ணங்கள் நாம் - மதுவாய்
வாழ்க்கையை நிறைப்போமா?
விழியிருந் தென்ன பயன் -நல்
விழிப்புகள் இல்லையென்றால்?- தாய்
மொழியினைச் சாக விட்டு - இதழ்
முத்தங்கள் இனிப்பதில்லை!
நேசத்தின் நூலிழையில் - கொஞ்சம்
தேசத்தைக் கோர்ப்போமா?
அன்பின் சிகரங்களில் - குளிர்
அருவியாய் வீழ்வோமா?
காதல் திருச்சபையில் - வேத
வரிகளாய் இருப்போமா ?- கால
காலங்கள் கடப்போமா?- ஆயிரம்
பிறவிகள் எடுப்போமா?

