புணர்ந்து கலைந்திருந்த விடியல்-வித்யா

புணர்ந்து கலைந்திருந்த விடியல்-வித்யா

நேற்றைய மழைக்கு முளைத்தக் காளானாய் திரும்பியப் பக்கமெல்லாம் காதல். காதல் ஒன்றுதானென்றாலும் அதன் முகங்களும் விகிதாச்சாரங்களும் வேறு வேறு. ஊரறிய உறங்கிக்கொண்டு உள்ளூர விழித்துக் கொண்டிருப்பது காதல் மட்டுமல்ல காமமும்தான். காதலோடு உரசிவரும் காமம் சுகமானது....காமம் மட்டுமே உதிர்க்கும் காதல் குரோதமானது. இப்போது ஒரு காதல் அதன் கதையை சொல்கிறது......

மாலை 6 மணி. திருப்பூர் பேருந்து நிலையம். பழனிக்கு செல்லும் பேருந்தினை எதேர்ச்சையாக நோக்கும் அனிச்சையான திரும்பலில் அவளின் சந்திப்பு. அவளின் விழிகள் ஆயிரமாயிரம் கவிதைகள் பேசின. எவனெவனோ எழுதிய வரிகளிலெல்லாம் வாழ்ந்து தேய்ந்த கதை பேசின. அவளின் பார்வைகள் என்மீது விழுந்தன. ஏனோ என் கைகள் தானாக என் உடைகளை சரி செய்து கொண்டன....... வேரின் ஆழம் பார்த்தா பூக்கள் பறிக்கிறாய்..? என்று கேட்பது போன்றதொரு பளீச்சென்ற புன்னகை. அவள் அப்படியொன்றும் அழகில்லை........ஆயினும் அவள் அங்கங்கள் அழகில் குறைந்ததில்லை.

சிலரின் கண்களுக்குப் பசி எடுக்கும்போது நுனிப்புல் மேய்ந்துகொள்ள எதுவாக இருக்கும் இயற்கையான உடைவிலகல்களில் இருந்து சற்றே விலகித்தான் இருந்தது செயற்கையான அவளது மாராப்பும், தொப்புள் கீழ் மடிப்புகளும். ஏதோ பிரம்மை பிடித்தவள் போல எதையோ யோசித்துக் கொண்டிருக்கும் போதே இருக்கை பிடிக்கும் விரசம் எனைத்தொற்றிக்கொள்ள நினைவுகள் உதறி சன்னலோர இருக்கையில் எனை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

மீண்டும் நிதானித்து நிமிருவதற்குள் எனதிருக்கையில்...எனக்கு மிக அருகில் அவள். சற்றே நகர்ந்து சன்னலோரம் சாய்ந்துகொண்டேன். அவளும் என் பார்வையின் ஆழத்தைப் புரிந்துக்கொண்டவள் போல புன்னகைத்தாள். சன் மியூசிக் ரசிகர்கள் தொடர்பு கொள்வதைப்போல அவளுக்குத் தொடர்ச்சியான அழைப்புகள். எனக்கோ மனம் முழுதும் பதற்றம்....
கைப்பையிலிருந்து கந்தசஷ்டி கவசம் எடுத்து படித்துக் கொண்டிருந்தேன்......

தண்ணி இருக்கா.......???? எதிர் முனையில் அவள்..... இறுக்கமான முகத்துடன் இல்லையெனும் தலையசைத்தலில் நான். எதுக்கு என்ன இப்டி பாக்கற...?-அவள் ......ஒண்ணுமில்ல.....-இது நான்.....
ஏன் இப்படி இருக்கீங்க..?-இது நான்
எனக்கு புடிச்சிருக்கு...-அவள்..

ஏதோ கம்பளிப்பூச்சி ஊறுவது போலிருந்தது அவள் பதில்கள். பின் அவளாகவே ஆரம்பித்தாள்...... எனக்கு எய்ட்ஸ் இருக்கு. எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏதும் கேட்கத் தெரியாதவளாய் என் மௌனங்கள் பேசத் தொடங்கியிருந்தது. பனிக்காற்றில் என் உணர்வுகள் ஈரமாகவே உலர்ந்துக் கொண்டிருந்தது. பருவ வயது காதல்.... வழக்கமான எதிர்ப்பு.....அவசரத் திருமணம்.....வயோதிக வாலிபருடன். சுருக்கமாக விளக்கி இருந்தாள்.

எய்ட்ஸ்........??.......ம்ம்ம் ஹா ஹா வயோதிக வாலிபருக்கு வியாதிக்கூட முற்றிய நிலையில் இளமையாக இருந்திருக்கு போல. பாவம் சுகவாசி இரவு உலாவிற்கு புதுவரவாய் எனை பதிவு செய்திருக்கிறான். புணர்ந்து கலைந்திருந்த என் விடியல்கள் காதலை சபித்திருந்தன. மூன்றாம் சாமங்களில் மூடு பனி மூடிய நிலவானேன். முட்களால் பதியம்போட்ட ரோஜாக்களாய் என் கண்ணீர்த்துளிகள் பூத்துக் குலுங்கின.

வறுமையின் பிடிதளர்த்தி எனை நான் உள்வாங்கியபோது வைரஸ்கள் எனைப் பாதி செரித்திருந்தன. ஆழ்மனக் குமுறல் அறியா யார் யாரோ சிவந்த இதழ், பரந்த மார்பு ரசித்துச்செல்கிறார். தினம் ஒரு தலைப்புச்செய்தியாய் கற்பழிப்பு....... எப்படியும் போகத்தான் போகிறேன்........... ஏதாவது செய்துவிட்டுப் போகலாமென்று வேசியானேன்.........!!

விளக்கணைத்து மின் விசிறிகளின் கூர்நாக்குகள் என் வியர்வைகளைக் குடிக்கும்போதெல்லாம் என்னால் புறக்கணிக்கப்பட்ட ஆணுறைகள் ஆயிரம் வைரஸ்களை எவனோ ஒருவனின் விந்து நாளத்திற்குள் புகுத்திக் கொண்டிருக்கும். பெண்ணெனப் பிறந்ததின் பிறவிப்பயன் அடைந்ததாய் பெருமிதம் கொண்டு தினம் ஒரு தேவாலயத்தில் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்......!! (இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் சதவீதம் அதிகரித்திருக்கிறதாம்)

பாவமுடிச்சுகளை விந்துத்துளிகள் கொண்டு அண்டங்களில் அவிழ்க்காதீர்...... என சொல்ல எனக்கு இது சரியானதாகத் தோன்றியதென்றாள். அவள் சொல்லிச்சென்ற ஒரு வார்த்தை எனை மீண்டும் மீண்டும் அதை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது."நம் பலம் பலவீனம் இரண்டுமே நாம் பெண் என்பதுவே."

இன்றும் கந்தசஷ்டி கவசம் படிக்கிறேன்........அவளுக்காக....காக்க காக்க.........!!

எழுதியவர் : வித்யா (6-Jan-15, 12:41 am)
பார்வை : 319

மேலே