அறை எண் 99 - சந்தோஷ்

சென்னை-ஆவடி இரயில்நிலையம்.
ஓர் இளம்பெண், நவநாகரீக தோற்றம்,சேலையுடுத்திய உயிருள்ள சிலையழகு. பொதுவாகவே பெண்களுக்கு விழிகள் அழகு. இளம்பெண் இவளுக்கோ விழிகள் சிப்பி வடிவ அழகு. முழிகள் சிப்பிக்குள்ளிருக்கும் வசீகர.. வெள்ளிமணி முத்தழகு.

என் முன் சென்ற அந்த விழியழகு தேவதையை

"எக்ஸ்கியூஸ் மீ மேடம் " என்று கவனத்தை ஈர்த்தேன்.

அவள் அவளின் பதுமையழகு வட்ட முகத்தை திருப்பி " சொல்லுங்க" என்றாள்.
ஒரு நொடியில் அவள் விழியழகில் ரசனையோடு செத்துபிழைத்து " இந்த புக் உங்க பேக்ல இருந்து கீழே விழிந்திடுச்சி இந்தாங்க "

தவறிவிட்ட அந்த புத்தகத்தை வாங்கியவாறே தவறாமல்
" மிக்க நன்றிங்க தோழா" என்று சொல்லிய அவள் விழியையும்.. அழகு தமிழ் கொஞ்சிய அவள் இதழையும் மீண்டும் ரசனையோடு ஆராதனை செய்தவனாய் நானிருக்க....

என்னிலிருந்து விலகி விறுவிறுவென்று கொஞ்சம் .. 10 அடி தூரத்தில் நடந்துசெல்கிறாள். கையில் அலைப்பேசி.. அலைப்பேசி அவள் செவியோடு..... யாரோடனோ பேசிக்கொண்டே.... இரயில் வரும் என எச்சரித்த பச்சை விளக்கு சமிக்கையை கவனிக்க தவறியவளாய்.. இருப்பு பாதையில் அவள் பாதம் பதிய பதிய .. என்னிதயம் வேகமெடுத்து துடிதுடிக்க.. என் கால்கள் பறக்க.. அவளின் கரம் பற்றி இழுக்க நினைத்து..... பெண் என்பதால் ஒருவித அச்சத்தோடு என் மனதின் ஆலோசனையில் நான் புத்தி தடுமாற.........

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்..... அவளை வாரி சுருட்டி.. இழுத்து ... கிழித்து... வீசிவிட்டு சென்றது .

அருகில்...எனக்கு மிக அருகில்.. ஒரு பெண் கண்டதுண்டமாய்......
என் மனசாட்சி என் இதயத்தை குத்தி கிழிக்கும் வினோத ஒசையில்... நான் பைத்தியம் பிடித்த நிலையில்..
சில நிமிடங்கள் கழித்து... அவளின் உடலிலிருந்து வெட்டப்பட்ட் அந்த கையில்... நான் எடுத்த புத்தகம் ---- பாரதியார் கவிதைகள்---- சில இரத்த துளிகளோடு....
அருகில் சென்று கையில் எடுத்து, அவளின் கைப்பை தேடியெடுத்து. தொடர்பு எண்ணை கண்டறிந்து பேசினேன்.

" ஹலோ மேம்.. மனச திடப்படுத்திக்கோங்க.... உங்க பொண்ணு. டிரெயின்ல அடிப்பட்டு செத்துட்டாங்க,ஆவடி ரயில்வே ஸ்டேஷனுக்கு சீக்கிரம் வாங்க." குற்ற உணர்ச்சியில் என் குரல் வலுவிழந்து சொன்ன நொடியில் எதிர்முனையில்..
" அய்யோ தமிழு......எங்கள விட்டு போயிட்டீயா ......"

அந்த கதறல்.. அந்த அழுகை.. அந்த அந்த.. குரல்.... என்னை என்னவோ செய்து.. என் செவியில் ரீங்காரமிட்டுக்கொண்டும்.. என் விழியில் அந்த விழியழகி இரயிலில் கிழிக்கப்பட்டதும்.. மீண்டும் மீண்டும் .. ஒலி .. ஒளியாக........

நான் தங்கும் விடுதிக்கு வந்துவிட்டேன். எனது அறை எண் 99... நான் மட்டும் தான் தனியாக இருக்கிறேன். இப்போது இரவு 12 மணி 32 நிமிடம்.உறக்கம் வராமல்.. செய்ய தவறிய அந்த நொடிப்பொழுது உதவியை நினைத்து நினைத்து... தவித்துக்கொண்டிருக்கிறேன். .." ச்சே... காப்பாத்தி இருக்கலாம்..."

"ஐயோ.. தமிழ்......என்னை விட்டு போறீயா....!!. "

எதோ ஒரு புதிய குரல்.. எனது அறையில்.. பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது.

சில நொடிகளுக்கு பிறகு..,

" தமிழ் என்னை விட்டு போறீயா..? "

மீண்டும் அதே குரல்... ஆனால் கம்பீரம்.
" ஆமா.. போன்ல அந்த அம்மா... ' அய்யோ தமிழு என்னை விட்டு போயிட்டீயான்னு' தானே கத்தினாங்க.. இப்போ ' போறியா' ந்னு தான் கேட்குது. " பயம்.. என்னிதயத்தின் துடிப்பில் பய நொடிகள்.. கவிஜியின் அமானுஷ்ய கதையில் வருவது போல இது என்ன புதுசா ஒரு மாயை. " இனிமே அந்த ஆள் கதையை படிக்க கூடாது பா.. பயமா இருக்கு "

--தமிழ்..! என்னை விட்டு போறீயா-- இம்முறை நன்றாகவே கவனித்தேன். இது ஓர் ஆண்குரல். கம்பீரமாய்.... கர்ஜிக்கிறது...

"அய்யோ அம்மா... யோவ் யாருய்யா அது ..? இந்த நேரத்தில மிமிக்கிரி பண்ணி பயப்படுத்துவது....? " நானாக பயப்புலம்பலில்...

"மகனே... இளங்கோ................" இப்போதும் அதே குரல்...

" டா டா டாடி............" பயத்தில் உடல் நடுநடுங்குகிறது.

" ஏன் .. தந்தையே என்று விளிக்க தெரியாதா. ? " அந்த அமானுஷ்ய குரல்தான். அவ்வ்வ்வ்வ்

".... யோவ் நீ யாருய்யா...? " பயந்துக்கொண்டே ரூம் லைட் ஸ்விட்ச்சை தேடுகிறேன்.

"நீர் தமிழன் தானடா ? " மிரட்டுகிறது அந்த குரல்...

" நீர் .. நீர்ன்னா வாட்டர் தானே டாடி ..... ?"

" காளி...... இந்த அற்பமானிடனை கொன்று பொசுக்கினால்தான் என்ன? அக்னி கொண்டு எழுதியும் எவனும் இன்னும் மாறவில்லையே.. காளி ? "

" ஓ அக்னி ராக்கெட்டை சொல்லுறீங்களா.....? டாடி ?? "

" ம்ம்ம்ம்ம்ம்ம் " ம் ஆக்ரோஷ ம்ம்ம்மாக............ கொந்தளிக்கிறது அக்குரல்...

இப்போது ..தட் தட் தட்..... கதவு தட்டப்படுகிறது...

" இந்த நேரத்தில யாருடா....? பக்கத்து ரூம்காரன் தண்ணியடிச்சு கலாட்டா பண்ணுறானா... ?

மின் விளக்கு பொத்தானை தொட்டேன்,. அறையில் வெளிச்சம் பரவியது.. என் நெஞ்சத்தில் அச்சம் ஏறியது...

ஆமாங்க அந்த டிரெயின்ல செத்துப்போன பொண்ணு கையில இருந்த பாரதியார் கவிதைகள் ,,நான் எடுத்துட்டு வந்தேன்ல.... அது அதுதான் என் டேபிள்ல நிமிர்ந்து நிக்குது...... அப்படியே அதுல பாரதியார் என்னையே முறைக்கிறார்.

"மகனே..... இளங்கோ. பயப்படாதே.. அருகில் வா.. "

"ப் ப் ப்பா பா பாரதியார் டாடி.. என்னையா.. கூப்பிடுறீங்க ? "

" அடேய்.. அற்பனே. 'தந்தையே ' என்று அழகு தமிழில் சொல்லடா... மானிடா. " பாரதியார் டென்ஷன் ஆகிட்டார் போல.

"சாரி... பாரதி சார்.. " ..

“மன்னியுங்கள் என்று தமிழில் சொல்லுடா " செம கடுப்புல இருக்கிறார் போலிருக்கே..

-- தட்.. தட்.. தட்... -- கதவு தட்டப்படுகிறது..

" யெஸ் கம் இன்.." என்று சொல்லியவனாக .. " ஓ ஓ.. டோர் லாக் ஆகியிருக்கே.... "

" மகனே.. கதவு தாழிடப்பட்டிருக்கிறது என சொல்ல தெரியாதா.?. "

"மிஸ்டர் பாரதியார்.! எனக்கு இவ்வளவுதான் தெரியும்.. இதுதான் நாகரீக தமிழ்... இருங்க யாருன்னு பார்த்துட்டு வரேன். "

கதவு திறந்தேன்.

" அய்யோ அம்மா .. கண்ணகி... கண்ணகி ஆவி..!!. " நான் பயத்தோடு சொல்ல.. அந்த ஆவி

" பாவி பாவி... நான் கண்ணகியா.? . ஒழங்கா என் கையபிடிச்சி காப்பாத்தியிருந்தா.. நான் செத்திருக்க மாட்டேன்ல... " என சொல்லிக்கொண்டே அந்த ஆவி என் முதுகில பலமாக அடி கொடுக்கிறது. கூடவே பாரதியார் குரலும்

" அடி அடி அடிமா..... அற்பமானிடனை விடாதே.. அடி அடி.... தமிழ் பேச தெரியா தமிழன்... அடி அடி.. அடி.. "

" யோவ் பாரதி .. ஏன் இப்படி கொலவெறில இருக்கிங்க.. .?
.. போதும் போதும் நிறுத்துமா.. ஆவியே.. போதும்.. நீ யாரு.... ? "

" நான் தமிழ்ச்செல்வி. தமிழாசிரியர். என்னை நீ காப்பாத்தியிருக்கலாம்.. ஏன் காப்பாத்தல.....?.என் தமிழின் பெருமையை நான் இன்னும் முழுசா படிச்சி முடிக்கல தெரியுமா.. ? "

" அடப்போம்மா.. நீ பாட்டுக்கு செல்போன்ல பேசிட்டே ரயில்வே டிராக்ல கேர்லெஸ்ஸா போவ,.. நான் வந்து உன் கையப்பிடிச்சா.. எல்லாரும் காப்பாத்தவா கையை பிடிச்சேன்னு நினைப்பாங்க.. .?. இல்ல இல்ல . எதோ உன்னை தப்பா நினைச்சு இழுத்தேன்னு சொல்லுவாங்க.. ஏற்கனவே பொண்ணுங்கனாலே எனக்கு ஏழுரை சனி உச்சத்தில இருக்கு. இதுல இது வேறயான்னு தான் .... "

" மகளே.... !! " பாரதியார் குரல்.. அந்த ஆவியை கூப்பிடுகிறது..

" அன்பு தந்தையே.....! " அந்த ஆவி பாரதியாருக்கு பதில் சொல்லுது.


"ஓ... நீயும் அவருக்கு மகளா... ? அப்போ எனக்கு நீ சிஸ்டர்,.........,, அப்படினா காப்பாத்தி இருக்கலாம் ... சாரி சாரி சிஸ்டர் "

" மகனே.... தமிழில் பேசு... சிஸ்டருக்கு ' தங்கை' என்று அழகிய சொல் இருக்கிறதே..? "

" டாடி.. சாரி டாடி.. எனக்கு இவ்வளவுதான் தெரியும்.. "

" ஆஆ............!! இவனை அடிமா தமிழ்ச்செல்வி.... அடி அடி.... அடி

--நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
-- நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், " --- பாரதியார் செம மெர்சலாகி என்னை திட்டுகிறார்.... அந்த ஆவியும் என் பின் மண்டையில் நாலு சாத்து சாத்தி விட்டு....

'செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே// ' .......

என பாட்டுபாடிக்கொண்டே அந்த புத்தகத்தை எடுத்து செல்கிறது...

இந்த அமானுஷ்யா காட்சியோட்டத்தில் எப்போது நான் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றேன் என தெரியவில்லை. நடந்தவை யாவும் நிகழ்ந்தவையே என்பது மட்டும் என் நினைவில் பதிந்துவிட்டது.

------------------------------
மறுநாள் காலை..

மிகுந்த உடல்வலியுடன் எழுந்தேன். என்னருகில் நான் எடுத்த வந்த பாரதியார் புத்தகம் இல்லை. கதவு திறந்திருக்கிறது. ஆனால் என் புத்தி தெளிவாய்.. தமிழ் புத்தியாய்...

தங்கும் விடுதியின் வேலைக்கார சிறுவன் :

" அண்ணாத்தே... டீ காபி எதாவது வேணுமா...... "

" ஆம் சகோதரா ! ஒரு குவளையில் மிகசூடாக தேநீர் வேண்டும். கூடவே ஐந்து ஐந்து ஐந்து.. வெண்சுருட்டு ஒரு கட்டு வாங்கி வா. இந்தா நூறு ரூபாய். மீதமிருப்பதை நீயே நன்கொடையாய் வைத்துக்கொள். " தூய தமிழில் அழகாக பேசினேன்.

" மேனேஜர் சார்..!! . மேனேஜர்.. சார்..!! இந்த ஆளுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சி.. வாங்க சீக்கிரம் வாங்க.. " சிறுவன் வினோதமாக பார்க்கிறான் என்னை......!

(முற்றும்)

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (6-Jan-15, 12:00 pm)
பார்வை : 328

மேலே