உழவர் திருநாள்
உழவர் திருநாளாம் பொங்கல் நாளில்,
வசிப்பிடம்: கிராமம்
மகனின் வயது: ஐந்து
மகன் அம்மாவிடம் கேட்கிறான்.
"நானும் அப்பாவுடன் வயலுக்கு போறேன், அம்மா"
அம்மாவின் பதில்,
"இல்லடா கண்ணு, அங்க மாடு இருக்கும். நீ பயப்படுவ, நீ அம்மா கூட வீட்டிலேயே இரு, ரேடியோல நல்ல நல்ல நிகழ்ச்சி இருக்கு.நம்ம கேக்கலாம்".
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வசிப்பிடம்: சிறு நகரம்
மகனின் வயது: பத்து
மகன் அம்மாவிடம் கேட்கிறான்.
"அம்மா, நம்ம கிராமத்துக்கு போய் ரொம்ப நாளா ஆகியிருச்சு அம்மா, இந்த பொங்கலுக்காவது நம்ம போகலாமா?"
அம்மாவின் பதில்,
"இல்ல தம்பி, அப்பாவுக்கு கடைல லீவ் ஒரு நாள் தான் தருவாங்க, ஒரு நாள்ல எப்படி போக முடியும்? அடுத்த வருஷம் கண்டிப்பா போகலாம்".
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வசிப்பிடம்: சிறு நகரம்
மகனின் வயது: பதினைந்து
மகன் அம்மாவிடம் கேட்கிறான்.
"அம்மா, இந்த வருஷம் தான் அப்பா சொந்தமா கடை வச்சுட்டாரே, நம்ம ஊருக்கு பொங்கலுக்கு போகலாமா?"
அம்மாவின் பதில்,
"இல்ல தம்பி, நீ பத்தாவது படிக்கிற, இன்னும் பரிட்சைக்கு மூணு மாசம் தான் இருக்கு, இந்த நேரத்துல கிராமத்துக்கு போனா உனக்கு படிக்கிற எண்ணமே போயிரும். அடுத்த வருஷம் பாக்கலாம்".
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வசிப்பிடம்: கல்லூரி விடுதி, சென்னை
மகனின் வயது: இருபது
மகன் தொலைபேசியில் அம்மாவிடம் ஏக்கத்துடன் பேசுகிறான்.
"அம்மா, இந்த வருஷம் செமஸ்டர் பரீட்சை தள்ளி போயிருச்சு அம்மா. லீவ் போட முடியாது. நீங்க எல்லாரும் கிராமத்துக்கு போயிட்டு வாங்க. நான் எல்லாரையும் கேட்டேன்னு சொல்லுங்க அம்மா".
அம்மாவின் பதில்,
"சரி தம்பி. நீ நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகணும், அதுக்கப்புறம் நீ எப்போ நினைச்சாலும் கிராமத்துக்கு போகலாம்.".
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வசிப்பிடம்: அமெரிக்கா
மகனின் வயது: இருபத்தைந்து
அம்மா மகனிடம் தொலைபேசியில் ஏக்கத்துடன் கேட்கிறாள்.
"தம்பி, இந்த வருஷமாவது லீவு கிடைக்குமா, இங்க நம்ம கிராமத்துல எல்லாரும் உன்ன பார்க்கனும்னு சொல்றாங்க.."
மகனின் பதில்,
"இல்ல மா, இந்தியால ஐந்து நாள் லீவாம். அதனால இங்க இருக்கவங்களுக்கு லீவ் தர மாட்டாங்க. நான் ரெண்டு மாசம் கழிச்சு கண்டிப்பா வர்றேன்".
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எத்தனையோ தடவை கிராமத்துக்கு போறோம், நம்ம வயலுக்கு போறோம், தோட்டத்துக்கு போறோம், ஆனா பொங்கலப்போ மொத்த குடும்பத்தோட நம்ம பண்ணைல வேலை செய்ற ராக்கு, முத்து, பேச்சியம்மா, கருப்பாயி, இன்னும் பத்து பதினஞ்சு பேர் கூட சேர்ந்து பயந்துட்டே அப்பாவையும், மாமாவையும் மாடுங்களை பிடிச்சுக்க சொல்லிட்டு அந்த மாட்டுக்கு பொங்கலை ஊட்டி விட்டு, எல்லார்கூடயும் களத்து மேட்டுல உக்காந்து சாப்பிடற சந்தோசம் இனிமே எப்போ கிடைக்கும்??????
--ஏக்கத்துடன் தன் டைரியில் எழுதி விட்டு கணினியில் தன் அலுவலக வேலையை தொடங்குகிறான் அந்த இருபத்தைந்து வயது இளைஞன்.
.