சாதி ஒழி மதம் அழி சாதி
“பொங்கல் கவிதைப்போட்டி 2015”
இணையம் தான் இதயம் என்றாகி விட்ட சூழலில்
ஒரு நல்ல செய்தியை பரவ விட
படாத பாடு படவேண்டியிருக்கிறது
இரண்டாயிரம் ஆண்டு புரையோடிய சாதியும் மதமும்
புத்தம புது வேகத்துடன் மிக லாவகமாக
கொழுத்து திரிகிறது இணையத்திலும்
எழுத்துக்களில் நஞ்சேற்றி எண்ணத்தைக்
கடுங்கொலை செய்து குருதி குடிக்கிறது சாதி
அடித்த சாதி மீண்டும் அடிக்கவும்
அடிபட்ட சாதி பழீ தீர்க்கவும்
ஆடுகளை மோத விட்ட மதங்கள்
மெளன சிரிப்பு சிரிக்கவும்
பேயாட்டம் ஆடுகிறது இணையம்
சமூகம் வேறு சமூக வலைத்தளம் வேறல்ல
சமூகமே
சுதந்திரப்போராட்ட வீரர்களை எல்லாம்
சாதி அடையாளம் போட்டு கற்றுக்கொடுத்துவிட்டீர்கள்
அவர்களின் நிலையைப் பாருங்கள்
அந்தந்த சாதியின் கூலிப்படைத் தலைவர்களுடன்
சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் சுவரொட்டியில்!!
சாதி ஒழி !
மதம் அழி!
சாதி ! இன்னும் சாதி !
இளந்தென்றல் திரவியம்