29 இளந்தலை முறையே இளந்தலை முறையே
இளந்தலை முறையே! இளந்தலை முறையே!
என்னதான் உமக்குள் இருக்குது குறையே?
எழுந்ததும் படுக்கை சுருட்டவும் மாட்டீர்!
சுழலும்காற் றாடி நிறுத்தவும் மாட்டீர்!
அருகினில் நிற்கும் அன்னையும் காணீர்!
கணினிமுன் ஓடி அதில்முகம் விழிப்பீர்!
அழைத்திடின் திரும்பி 'ஆங்'கவும் மாட்டீர்!
பசக்கெனப் பிதுக்கிப் பற்களைத் தேய்ப்பீர்!
ஆடியில் தெறித்துப் பரவிடும் எச்சில்
துடைக்கவும் மாட்டீர்! துப்புவ தற்குக்
குனியவும் மாட்டீர்! குளிப்பறை தன்னில்
துவாரங்கள் அடைக்கும் துண்டுத்தாள் நீக்கீர்!
துவட்டிய துண்டை வெய்யிலில் போடீர்!
தலைக்கெண்ணெய் வையீர்! விபூதியும் பூசீர்!
இட்டிலி தோசை எதனைவைத் தாலும்
இளப்பமாயப் பார்ப்பீர்! இருவிரல் தொட்டு
இரண்டுவாய் வைப்பீர்! எழுந்துசென் றிடுவீர்!
அவனிவன் என்பீர்! அவளிவள் என்பீர்!
அவரிவர் என்று யாரையும் பேசீர்!
அமர்வதில் கூட அடக்கத்தைக் காட்டீர்!
வெடுக்கெனப் பேசிப் படக்கெனச் செய்வீர்!
எடுத்த இடத்தில் எதனையும் வையீர்!
தேடியும் கத்தி ஓடியும் களைப்பீர்!
கேக்குகள் சாக்லேட் விருப்பமாய் உண்பீர்!
பிரித்திட்ட தாளைக் குப்பையில் போடீர்!
சுண்டலைத் தந்தால் கிண்டலைச் செய்வீர்!
புரிந்திடா மொழியில் படங்களைப் பார்ப்பீர்!
பொழுதிற்கும் காதில் சொருகுவீர் ஒன்றை!
இல்லையேல் கையில் நோண்டுவீர் ஒன்றை!
வேலையொன் றுரைத்தால் வெறுப்புடன் செய்வீர்!
மீண்டுமொன் றுரைத்தால் எரிச்சல டைவீர்!
செய்தித்தாள் படித்தால் சேர்த்ததை வையீர்!
போட்ட விளக்கை அணைக்கவும் மாட்டீர்!
மூடிய குழாயும் சொட்டிட வைப்பீர்!
அரைகுறை வேலை! அரைகுறைப் பாடம்!
அரைகுறை உணவு! அரைகுறைப் பேச்சு!
அரைகுறை உறவு! அரைகுறை வாழ்க்கை!`
இளந்தலை முறையே! இளந்தலை முறையே!
என்னதான் உமக்குள் இருக்குது குறையே?
*****************************************************************************
பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர் காட்டும்
அசிரத் தையே அதற்குக் காரணம்!
வசதியைக் கொடுத்தால் வளரும் தானே
என்ற நினைப்பில்தான் இன்றைய பெற்றோர்!
கூடவே இருந்து கொஞ்சி, அவர்கள்
ஒவ்வொரு செயலும் ஊன்றிப் பார்த்துத்
தவறெனில் அவ்வப் போதே திருத்தினால்
செம்மையாய் வளரும்! தேசமும் வாழும்!
இதற்கெலாம் நேரம் இல்லை என்று
பறக்கும் பெற்றோர்க்குப் பிறக்கும் பிள்ளையே
பாரமாய்ப் போகும் பூமிக்கும் நெஞ்சுக்கும்