அவனுக்கு விடுமுறை இரண்டு நாட்கள்

அவனுக்கு
விடுமுறை
இரண்டு நாட்கள் !

புதிதாய்த்
திருமணமான
சக ஊழியன்
சனி ஞாயிறும் சேர்த்து
நான்கு நாட்களாக
விடுப்புக் கொண்டதில் ....

அவனுக்கு
விடுமுறை
இரண்டு நாட்கள் !

சொகுசுப் பேருந்து
அல்லாத
சாதாப் பேருந்தில்
அடித்துப் பிடித்து
ஏறியதில்
அவனுக்குக் கிடைத்தது
ஒருதுண்டு இடம் !

அவன் தாய்
அவனுக்குப் பிடித்த
பூந்தி லட்டு செய்து
அங்கே காத்திருக்கலாம் !

ஷேவ் செய்யப்படாத
அவனது
நான்கு நாள் தாடிக்காகச்
செல்லமாய்க்
கோபித்துக்கொள்ளக்கூடும்
அவன் தந்தை !

நடக்கப் பழகியிருக்கும்
தங்கையின் குழந்தை
அவனை
அடையாளம்
கண்டு கொள்ளுமா ?

வாங்கிச்செல்லும்
புதுத்துணி
மச்சானுக்குப்
பிடிக்குமா ?

மோகன் தியேட்டரில்
நண்பனோடு அவன்
படம் பார்த்து
நாளாயிற்று !

ஒரு நாள் மட்டும்
விடுமுறை கழித்து
மறுநாள்
காலையில்
வண்டி பிடித்தால்தான்
அடுத்தநாள்
ஆறு மணி ஷிப்ட்டுக்கு
அவன்
அட்டன்டன்ஸ்
வாங்க முடியும் !

டிக்கெட்
எடுத்துவிட்டு
மடி மீதிருக்கும்
பயணப்பையில்
பெருமூச்சுடன்
தலைசாய்க்கும் அவன்........
நன்றாக
உறங்கி விட்டு
ஊர்போய்ச் சேரட்டும் !

எழுதியவர் : குருச்சந்திரன் (14-Jan-15, 8:03 pm)
பார்வை : 88

மேலே