காதறுந்த ஊசியும்

கிழிந்து தொங்குமென் கோமணத்து
ஓட்டைகளைத் தைக்க...தேடினால்
"காதறுந்து கிடக்கின்றன ஊசிகளும் "
எம் வாழ்வைப் போல் ..?

எலிக்கறித் திண்ணும்
எம் வாழ்வாதாரம் மறந்து
எம் தேசத்து கனவுகளையெல்லாம்
எட்டிமிதித்து ...நாளும்
ஊமைவேசம் போடுகின்றன
அரசியல் நையாண்டிகள் ?

நாற்காலியின் நான்கு கால்களுக்கு
உரமாகப் பலியிட்ட
உயிர்களின் வலிமறந்து
வீராப்பு பேசுகின்றன
வீணர்க்கூட்டம் ...

வயல்களையும் ..வரப்புகளையும்
வெட்டிக் கூறுபோட்டு
சுட்டுச் சுடுகாடாக்கிவிட்டு
சுயநலமீசை முறுக்குகின்றன
தொழிற்கூடங்கள் ...

மொத்த தலைமுறைக்கும்
சொத்து சேர்த்தும்
கடைசிப் புறம்போக்கையும்
கரம்பற்றத் துடிக்கின்றன ..சில
புறம்போக்குகள் ...

நடப்பன ..பறப்பன
ஊர்வனவென....
உயிர்ப்பலி வாங்கியும்
இரத்தவெறி அடங்காது
நரமாமிசம் நாடி
அலைகிறது ...சில
அரக்கர் கூட்டம் ...

சமணர் படுகையெல்லாம்
சடுதியில் மாறி
குளங்களின் படிமங்களாகி
குத்தவைத்திருக்கின்றன
குறிப்பேடுகளில் ...புதுமையாய் ?

இலஞ்சப் பேய்களின் கோரநாக்குகள்
எம்மண்ணின் எல்லாவுயிரையும்
நக்கித் தீர்த்தும் ..தாகமடங்காது
நகர்கிறது ...மிச்சம் தேடி ?

சுயநலக் கூட்டத்தின்
சுவாசச் சூடுபட்டு ..மூச்சுத்திணறி
சுத்த மனிதசுவாசம் தேடி
எங்கெங்கு திரும்பினும்
எதுவும் கிட்டிடாமல்.....

ஈனஸ்வரத்தில் முனங்குகிறதென்
முப்பாட்டனின் மூச்சுக்குரல்....
"" காதறுந்த ஊசியும் வாராது காண்
....கடை வழிக்கே ?""
------------------------------------------------------------------------------------

தளத் தோழர்கள் தோழிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர்த்திருநாள்
வாழ்த்துக்கள்.

அன்புகளுடன்
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (16-Jan-15, 10:36 am)
பார்வை : 573

மேலே