தங்கத் தண்டு ----பாகம் 14 ----------- மர்மத் தொடர்

லாவண்யாவின் வீடு

வீட்டைத் தலைகீழாய்ப் புரட்டிக் கொண்டிருந்த விக்டர் மார்ஷலுக்கு அவன் தேடியது கிடைத்தது! தலை சுற்றி ஒளி வட்டத்தோடு நோவாவின் மரப்பாச்சி பொம்மை! அப்போதுதான் அவன் சொந்தக்காரனிடமிருந்து ஃபோனும் வந்தது!

என்னது? விக்டர் மார்ஷலின் அத்தனை சட்ட விரோதச் செயல்களும் கொலைகளும் ரத்தத்தில் எழுதப்பட்ட மரண வாக்குமூலமாக வெளி வந்து விட்டதா? அது “பல்ஸ்” பத்திரிக்கையில் கவர் ஸ்டோரியாகப் பிரசுரமாகப் போகிறதா? அதெப்படி?

“பல்ஸ்” பத்திரிக்கை நெட்டிலும் வருமே? உலகம் முழுக்க அதற்கு வாசகர்கள் உண்டே; பல்ஸ் பத்திரிக்கைச் செய்தியை மனுவாகவும் ஆதாரமாகவும் எடுத்து அதன் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்ட வரலாறு இருக்கிறதே? ஒருவரின் மரண வாக்குமூலம் லேசுபட்ட ஆதாரமல்லவே?

இதன் விளைவு? இங்கிலாந்து தூதரக அதிகாரிக்குப் பதவி போகும். தனது அரசாங்கம் தன்னைக் காப்பாற்றாது. இவ்வளவு நடந்த பிறகு இந்திய அரசாங்கம் சும்மா இருக்காது. தனக்குத் தூக்குத் தண்டனை உறுதி!

இனி விக்டர் மார்ஷல் இந்தியாவை விட்டு ஓடியாக வேண்டும்!



சிறுத்தைக்கு பயந்து நல்லமுத்து தனகிரியிலிருந்து குறுக்கு வழியில் இறங்கி ஓடி வந்த போது விக்டர் மார்ஷலின் கார் நின்றிருப்பதைக் கண்டான். கார் டிக்கியைத் திறந்து அதனுள் மறைந்து கொண்டான். கார் ஊரை நோக்கிப் பயணித்தது. அதே சமயம் அவன் கைபேசி அதிர்ந்தது. ரிப்போர்ட்டர் நாராயண்தான்.

சிறுத்தைகள் சண்டை போட்டு கை, கால், தலை என்று பிய்த்து எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலைக்குப் போய் விட்டனவாம். இப்போதுதான் குகைக்குள் நுழைந்திருக்கிறானாம். இறந்து போன தீரமான பெண் தன் ரத்தத்தால் எழுதி வைத்திருக்கிறாளாம். அவள் லாவண்யா என்கிற சித்தா டாக்டராம்....

அவன் மேற்கொண்டு சொல்லச் சொல்ல நடு மண்டையில் மின்னல் தாக்கியதைப் போல் அதிர்ந்தான் நல்லமுத்து! “மனைவிக்கும், மகளுக்கும் என்ன நேரிட்டிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் கஞ்சா செடி தேடி வந்த இழிந்த பிறவி நான். மகளை சிறுத்தை தூக்கிக் கொண்டு போயிருக்கிறது; எவனோ ஒருவன் உயிரைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போயிருக்கிறான்; நான் ஒளிந்து கொண்டிருக்கிறேன்...தூ !”

கடைசியாக நாராயண் ஒன்று சொன்னான்:

“விக்டர் மார்ஷல் இந்தியாவை விட்டு ஓட முயற்சிப்பான்; தடுத்து நிறுத்து!”

ஊர் வந்து விட்டது. கார் டிக்கியைத் திறந்து, ஓடுகிற காரிலிருந்து அப்படியே குதித்து, மயிரிழையில் உயிர் தப்பி புதருக்குள் உருண்டான் நல்லமுத்து.

பிறகு....

சுதர்சனாவுக்கு ஃபோன் வந்தது. ஃபோனில் நெடு நேரம் பேசினாள். பலவித உணர்ச்சிகளை அவள் முகம் காட்டியது.............

“போலிசுக்குப் போகலியா?” என்றாள் ஃபோனிடம்.

“அம்மா, நான் திருடன்; கஞ்சா அடிக்கிறவன். நான் சொன்னா போலிஸ் நம்புமா? என் பொண்டாட்டியையும் மகளையும் நான்தான் கொலை பண்ணேன்னு கூட சொல்லுவாங்க! அந்தாளு வெள்ளைக்காரன். வெளிநாட்டுக்காரங்க இங்க வந்து தொண்டு பண்றதும், அவங்கள மரியாதையோட நடத்தறதும் வழக்கம் தானேம்மா? இதுல எம் பேச்சு எடுபடுமா? ”

“என் நம்பர் எப்படி கிடைச்சது? ”

மறுமுனை குலுங்கி அழுதது. “என் புத்திசாலிப் பொண்ணு உங்க பேரையும் நம்பரையும் ஒரு பேப்பர்ல எழுதி என் சட்டை பாக்கெட்டுல போட்டிருக்கா. மத்தபடி நீங்க யாருன்னே எனக்குத் தெரியாதும்மா? ”

சுதர்சனா சில கட்டளைகளை பிறப்பித்தாள்.

“அம்மா, அந்த ரிப்போர்ட்டர் குகையாண்டதான் நிக்கிறான். ஆதாரத்தை யாரும் அழிச்சிடக் கூடாதுன்னு காவலிருக்கான். சிறுத்தைங்க நடமாட்டமும் இருக்கு; அவனை காப்பாத்துங்கம்மா! ”

எதிர்முனை மௌனமானது. சுதர்சனாவிடம் பேசியது நல்லமுத்துதான்.

சுதர்சனா அந்தரீஸுக்கு ஃபோன் செய்தாள். மீட்டிங்கில் இருந்த அந்தரீஸ் ஃபோனை எடுக்கவில்லை.

வேண்டாம், வேண்டாம் என்றுதான் நினைத்தாள்; வேறு வழியில்லை; நரேனுக்கு உடனே ஃபோன் செய்தாள். நரேன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தாலும் அவர் உத்தரவுக்கு இன்னும் மதிப்பு இருந்தது. லாவண்யா என்று சொல்லாமல் விக்டர் மார்ஷலுக்கு எதிராக மிக வலுவான ஆதாரம் குகைக்குள் இருப்பதாகவும் அந்த ரிப்போர்ட்டருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் சொல்லி உதவி கேட்டாள்.

பிறகு அந்தரீஸுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். “உன் வீட்டுத் தங்கத்தண்டு எனக்குத் தேவைப்படுகிறது. அதை எடுத்துக் கொள்கிறேன்; பிறகு கொடுத்து விடுகிறேன்”



அமரேசன் வீடு

வீடு பூட்டியிருந்தது! ரோந்து வந்த கான்ஸ்டபிள் இப்போதுதான் போனாராம். அடுத்த கான்ஸ்டபிள் ஒரு மணி நேரம் கழித்துதான் வருவாராம். சுதர்சனா பூட்டை உடைத்தாள்; உள்ளே போனாள்.

நேரே பூஜையறைக்குள் நுழைந்தாள்...

இடக்கோடி எழுத்துக்கள் என்றானே அந்தரீஸ். நான்கு விரல்களை மட்டுமே அழுத்த வேண்டும்... அந்தரீஸ் பேச்சு வாக்கில் சொன்னது நினைவிலாடியது.

சரி, ஒவ்வொரு எழுத்தாய் முயற்சித்தால் போயிற்று! ...............

ஒவ்வொரு எழுத்தாய் அழுத்தினாள்.... கொஞ்சம் வேகமாய்..... இன்னும் கொஞ்சம் வேகம்... வியர்வை பிசுபிசுத்தது...................... !


ஒரு கட்டத்தில் தேவியின் தலை குனிந்து அவளைப் பார்த்து ஓங்காரமிட்டது! ஹூ.....ம்..


தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (21-Jan-15, 2:53 pm)
பார்வை : 158

மேலே