நேற்று -அறிவியல் புனைவுச் சிறுகதை- பகுதி 1

ரகுநந்தன் நடக்கப்போவதை எண்ணி உற்சாகமும் தயக்கமும் கலந்த ஒரு பரபரப்பில் இருந்தார். அவ்வப்பொழுது விறுவிறுவென்று விரைந்து நடப்பதும் அவ்வப்பொழுது தயங்கி நிற்பதுமாய் அவரது உற்சாகம் + தயக்கத்தின் குழப்பம் அவரைச் செலுத்திக்கொண்டிருந்தது. ‘காலப்பயணம் போவது என்றால் சும்மாவா?’

”மாமா...” குறுக்கே ஓடிவந்து அவரை அழைத்த அந்தச் சிறுவன் தற்காலிகமாய் அவரது சிந்தனையோட்டத்தைத் தடுத்து நிறுத்தினான், ‘யாரடா நீ?’ என்பதைப் போல அவனைப் பார்த்த ரகுநந்தன் ‘என்ன விஷயம்’ என்று கேட்பதற்கு முன்னால் அவனாகவே முந்திக்கொண்டு,

“இதை உங்ககிட்டத் தரச்சொல்லி அந்த மாமா கொடுத்தாரு” என்று இடது கையையும் அதன் ஆள்காட்டி விரலையும் சாலையைக் கடந்து எதிர்பக்கம் இருந்த இருளான ஒரு வளைவை நோக்கி நீட்டியபடி, வலது கையில் இருந்த காகிதத்துண்டை ரகுநந்தன் முன் நீட்டினான் அவன்.

”எந்த மாமாடா?” என்றபடி அந்தக் காகிதத் துண்டைக் கையில் வாங்கினார் ரகுநந்தன், “பத்து ரூபா கொடுத்தாரே அந்த மாமா!” என்று ஆவலாய் நிஜார் பையில் கைவிட்டு ஒரு பத்து ரூபாய்த் தாளை வெளியே எடுத்துக் காட்டினான், இரண்டொரு நொடி அதை உற்றுப் பார்த்த ரகுநந்தன் பலமாய்ச் சிரித்து “இது செல்லாத நோட்டுடா பையா!” என்று அவன் தோளில் ஆறுதலாய் கைவைத்தார், காந்தி சிரிக்க வேண்டிய இடத்தில் யாரோ ஒரு தலைப்பாகை இளைஞன் சிரித்துக் கொண்டிருந்தான் அந்தத் தாளில், சிறுவனின் முகம் வாடத் தொடங்கியது, அழலாமா வேண்டாமா என்று யோசிப்பவன் போல காணப்பட்டான்.

அதைப் பொறுக்கமாட்டாத ரகுநந்தன் தன்னிடமிருந்து ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்து அவனைத் தேற்றினார், ‘சின்னப் பையனை ஏமாற்றியிருக்கானே, காலிப்பய!’ என்று மனதிற்குள் ‘அந்த மாமா’வை திட்டிக்கொண்டே!

இந்த முறை எச்சரிக்கையுடன் ஐந்து ரூபாய் நாணயத்தை (தனக்குத் தெரிந்த அளவில்) சோதித்துச் ‘செல்லும்’ என்று அறிந்துகொண்ட பின்னரே சிறுவனின் முகத்தில் பழைய உற்சாகம் பரவத் தொடங்கியது, அந்த உற்சாகத்தில் தன்னிடமிருந்த செல்லாத பத்து ரூபாயையும் ரகுநந்தன் கையில் திணித்துவிட்டு அவன் தன் போக்கில் ஓட்டம் பிடித்தான்.

கீழே குப்பை போடும் வழக்கமில்லாத ரகுநந்தன் அந்தச் செல்லாத ரூபாயைத் தன் பைஜாமாவின் இடது பையில் திணித்துக்கொண்டு தான் செல்ல வேண்டிய இடத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினார், ஒரு முறை மணி பார்த்துக்கொண்டு. கொஞ்சம் தொலைவு நடந்தவுடந்தான் அந்தச் சிறுவன் கொடுத்த துண்டுக்காகிதம் நினைவுக்கு வந்தது, செல்லாத ரூபாயுடன் அதுவும் பைக்குள் போயிருந்தது, அதை எடுத்துப் பிரித்தார்,

’கதை எழுதாதே! பார்க் செல்லாதே! கதி—’ என்று அவசரத்தில் கிறுக்கியது போல அதில் எழுதியிருந்தது, தன் கையெழுத்துதான் கிறுக்கல் என்று நினைத்திருந்த ரகுநந்தன் தன்னைவிட கிறுக்கலாய் ஒருவன் எழுதியிருக்கிறானே, கிறுக்கன்! என்று எண்ணி நகைத்துக்கொண்டார். எழுதப்பட்ட செய்தியும் அரைகுறைதான்!

*கதை எழுதாதே!* ’எந்தக் கதையைச் சொல்கிறான்?’

ரகுநந்தன் ’கதாசிரியர்’ அவதாரம் எடுத்து முழுதாய் இரண்டு மாதம் ஆகவில்லை இன்னும்! அவர் எழுதிய ஒரு கதையைப் பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு அது பிரசுரமாக பிரசவ அவஸ்தையுடன் காத்திருக்கிறார். அவர் ‘கதாசிரியன்’ என்பது பணியிடத்தில் அவருக்கு அருகில் அமரும் [நேற்றைக்கு முன்தினம் ரகுவின் மைத்துனி அவரை என்ன சொல்லித் திட்டினாள் என்பதைக் கூட அறிந்திருந்த] கோபாலனுக்கே இன்னும் தெரியாதே! அடுத்த கதைக்கு இப்பொழுதுதான் ’பொறி’ கிடைத்திருக்கிறது ரகுவிற்கு, அதற்குத்தான் கதிர்வேலனைக் காண இப்பொழுது சென்றுகொண்டிருக்கிறார்.

கதிர்வேலன் என்ற பெயர் ரகுநந்தனிற்கு முதலில் தெரியவந்தது ‘டைம் டிராவலிங்’ பற்றிய விக்கிப்பீடியா கட்டுரையின் ஒரு அடிக்குறிப்பில்தான் – ”நம்ம ஊர் பெயரா இருக்கே” என்று அதைக் கவனித்த ரகுவிற்குக் கதிர்வேலன் தமிழ்நாட்டில் இருந்துகொண்டே ’காலப்பயணம்’ பற்றி ஆராய்கிறார் என்பதில் பெருமையைவிட வியப்பு அதிகமாய் இருந்தது! “இங்க இருந்துட்டு என்ன முடியும்? அமெரிக்கா ஜெர்மணினு போனாத்தான ஏதாவது உருப்படும்!” என்று எண்ணிக்கொண்டிருப்பவருக்கு இந்த வியப்பு தோன்றியதில் என்ன வியப்பு?

ரகுநந்தன் ஒரு பள்ளியில் கணக்கு ஆசிரியர். கணக்கில் புலி - அதாவது, ஒன்பதாவது பத்தாவது வகுப்பு கணக்கில்! கடந்த பதினைந்து ஆண்டுகளாய் அரைத்த கணக்கையே அரைத்து அவருக்கு அல்ஜீப்ராவைத் தாண்டி எல்லாம் மறந்து போயிருந்தது, இப்பொழுது அவரிடம் போய் ‘கால்குலஸ்’ என்றால் கதிகலங்குவார்! தன் ’அபார மூளை’ இப்படி வீணாவதைத் தடுக்க விரும்பியே இரண்டு மாதங்களுக்கு முன் கதாசிரியர் அவதாரம் செய்திருந்தார் ரகுநந்தன். அவரது முதல் கதை மிகச் சிறப்பாய் அமைந்தது (அதாவது, அவர் படித்துப்பார்த்த வரையில்!) அது ஒரு ’சராசரி’ கணக்காசிரியரைப் பற்றிய ‘சராசரி அல்லாத’ கதை (நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பது எனக்கும் தெரிகிறது!) ஆனால், வீணாகும் தன் மூளை மீண்டும் பழைய பலம் பெற வேண்டுமானால் அதை இன்னும் கசக்கிப் பிழிய வேண்டும் என்று எண்ணிய ரகுநந்தன் அதற்கேற்ற ஒரு கதைக்கருவைத் தேடலானார் – அப்படி அவருக்குச் சிக்கிய கருதான் ‘காலப்பயணம்’!

’டைம் டிராவலிங்’ எனப்படும் காலப்பயணம் பற்றி ஒரு அறிவியல் புனைக்கதை எழுதலாம் என்று தீர்மானித்த பின்னர் ரகுநந்தன் அதைப்பற்றி அறியும் ஆய்வில் இறங்கினார் – இந்த ’ஆய்வி’ன் பெரும்பகுதி கூகிள் மற்றும் விக்கிபீடியாவிலேயே நடந்தது! இப்படியாக ஆய்வில் இறங்கி கதிர்வேலன் என்ற தமிழக விஞ்ஞானியின் பெயரை அறிந்து வைத்திருந்த ரகுநந்தனிற்கு அந்தப் பெயரை அறிந்துகொண்ட இரண்டாவது நாளே அந்தக் கதிர்வேலனையே சந்திக்கும் வாய்ப்பு எதேச்சையாய் கிடைத்ததை என்னவென்று சொல்ல!

’காலம்! அது ஒரு நதியா? சாலையா? அது ஓடுகிறதா? அல்லது நாம் அதில் ஓடுகிறோமா? அல்லது, இரண்டுமேவா? காலம் நதியானால் அது நிற்காது, பின்னால் ஓடாது, அதுவே காலம் சாலையானால்? அதில் ஓடுபவர்கள் நாம்தான் என்றால்? அதில் நாம் எப்படி வேண்டுமானாலும் ஓடலாம்தானே? ஓடலாமா? ந்யூட்டன் அறிந்த காலம் ஒரு நதி, ஐன்ஸ்டைன் அறிந்த காலம் ஒரு சாலை, நான் அறிந்த காலம் என்ன?...’

”என்ன?” என்ற குரல் கேட்டு எழுதுவதை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தார் ரகுநந்தன், ’நல்லா ஃப்ளோ வரப்பத்தான் எவனாச்சு வந்து கெடுப்பான்’ என்று மனத்திற்குள் திட்டிக்கொண்டே,

”சொல்லுப்பா, நீ அறிந்த காலம் என்ன?” என்று ரகுநந்தன் எழுதிக்கொண்டிருந்த தாளிலிருந்து பார்வையை ரகுநந்தனை நோக்கித் திருப்பியபடி கேட்டார் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அந்த நபர்.

அவருக்கு சுமார் ஐம்பது வயதிருக்கும், சிக்கனமாய் வெட்டப்பட்டிருந்த தலைமுடியிலும், இரண்டுநாள் முள்தாடியிலும் கலந்திருந்த நரை அதை உறுதி செய்தது, ஆனால் வயதுக்கு தொடர்பின்றி கொஞ்சம் தொள தொள டீ-சட்டையும், தொள தொள காற்சட்டையும் அணிந்திருந்தார், கால்களில் ‘சாண்டல்’கள், கழுத்தில் இருந்த டாலர் கொஞ்சம் வித்தியாசமாய் காட்சியளித்தது, அது ஒரு பெண்-டிரைவ் என்று ரகுநந்தனிற்குத் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு! அவர் ரகுவையே ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தார், சொல்லப்போகும் பதிலுக்காக...

“என்ன சார் இது? பாக்க டீசெண்டா இருக்கீங்க! நிம்மதியா எழுதலாம்னு பார்க்குக்கு வந்தா இப்படி வந்து தொல்ல பண்ணுறீங்களே? நா எழுதுறத எட்டிப்பார்த்துப் படிக்குற உரிமைய உங்களுக்கு யார் கொடுத்தா?” படப்படவெனப் பொறியத் தொடங்கின ரகுநந்தனின் உள்ளத்தில் இடைஞ்சல் ஏற்பட்டதன் அவஸ்தையைவிட தன் ’கதை’ திருடப்பட்டுவிட்டது என்ற எண்ணத்தின் அச்சம்தான் அதிகம் இருந்தது!

”ஓ! என்னை மன்னிக்கனும்! ஐம் வெரி வெரி சாரி...” தாயின் முன் நிற்கும் குறும்பு செய்த குழந்தையின் முகத்துடன் தொடர்ந்தார் அவர் “நீங்க காலம் பத்தி எதையோ எழுதுறீங்கன்னு கவனிச்சதும் என்னையும் அறியாமலே எட்டிப் பார்த்துட்டேன்... ரொம்ப சாரி... ரொம்ப... யு சீ, நான் ஒரு இயற்பியல் விஞ்ஞானி, காலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்றவன், அதான் இவ்ளோ ஆர்வம்!” லேசாய் அசடுவழிந்து சிரித்து “ஆர்வக்கோளாறு!” என்று முடித்தார். ரகுநந்தனைவிட்டுக் கொஞ்சம் தள்ளி அமர்ந்துகொண்டார்.

தான் கதை எழுதுவதை இவரிடம் சொல்லலாமா வேண்டாவா என்ற தயக்கத்துடன் அவரை நோக்கிய ரகுநந்தன் “சரி சரி பரவால்ல சார், இனிமே இப்படிலாம் பண்ணாதீங்க!” என்றுவிட்டு மீண்டும் எழுதத் தொடங்கினார், தேர்வு அறையில் ’காப்பி’ அடிக்க முயலும் பக்கத்து மாணவனுக்குத் தெரியாத வண்ணம் மறைத்துக்கொள்ளும் மாணவனைப் போல அவருக்குத் தன் முதுகைக் காட்டி அமர்ந்துகொண்டார்.

அவமானத்தாலோ அல்லது வேறு அலுவல் காரணமாகவோ அங்கிருந்து புறப்பட எழுந்த அந்த நபர் கிளம்பும் முன் நின்று ரகுநந்தனை நோக்கிக் கை நீட்டி “தொந்திரவு பண்ணதுக்கு மன்னிக்கனும், நான் வரேன்...” என்றார், அவர் கையைப் பிடித்துக் குலுக்கிய ரகுநந்தன் பழக்கதோஷத்தில் “ரகுநந்தன்” என்று சுயஅறிமுகம் செய்து கொண்டார், அவரும் லேசாய் புன்னகைத்துவிட்டு தன் பெயரைச் சொன்னார் “கதிர்வேலன்”.

’கதிர்வேலன்’ பெயரைக் கேட்டதும் குலுக்கிய கையை இறுக்கமாய் பிடித்துக் கொண்டார் ரகுநந்தன்,

“சார்... சார்... நீங்கதான் கதிர்வேலனா? நிசமா? டைம் ட்ராவலிங் ஆராய்ச்சி...”

”சாக்ஷாத் நானே கதிர்வேலன்!” அவரது புன்னகை வளர்ந்துகொண்டே போனது. கிளம்பியவரை மீண்டும் உட்கார வைத்து தன்னைப் பற்றியும் தான் எழுதப்போகும் கதையைப் பற்றியும் விளக்கமாக சொன்னார் ரகு, கதிர்வேலன் அத்தனையையும் பொறுமையாக்க் கேட்டுக்கொண்டிருந்தது ஆச்சரியமே!

”சும்மா ரெண்டு வெப்சைட்ல படிச்சுட்டு எழுதுறதுல என்ன இருக்கு மிஸ்டர் நந்தன்? அனுபவிச்சுட்டு எழுதனும்... அதான் நல்லா உண்மையா யதார்த்தமா இருக்கும்” என்றார்,

ஏதோ பொடிவைக்கிறார் என்பது புரிந்தது ரகுநந்தனிற்கு, என்ன என்பதுதான் புரியவில்லை, ரகுநந்தனிற்கு அதிக சிரமம் வைக்க விரும்பாதவராய் கதிர்வேலனே தொடர்ந்து, தனது குரலைக் கொஞ்சம் தாழ்த்திக்கொண்டு,

“ஏனோ உங்ககிட்ட சொல்ல எனக்கு எந்த தயக்கமும் ஏற்படல, ஆனா விஷயம் ரொம்ப பெரிசு, நீங்க லீக் பண்ணிடகூடாது...” தன் முகத்தைப் பலப்பல கேள்விகளுடன் ஆவலாய் பார்த்துக்கொண்டிருந்த ரகுநந்தனை மனோவசியம் செய்பவரைப் போல கண்ணோடு கண் உற்றுப் பார்த்தார்,

“என்கிட்டயே ஒரு டைம் மெஷின் இருக்கு... நானே வடிவமைச்சது...” முகத்தில் பெரிதாய் எந்தச் சலனமும் காட்டாமல் சொன்னார், இடது கன்னம் மட்டுமே லேசாய் துடித்தது.

”சார்...” என்று வாயெடுத்த ரகுநந்தனைக் கைகாட்டி நிறுத்தி, “இப்படி பப்ளிக்கா பார்க்ல வெச்சு விளக்கமா பேச முடியாது, நீங்க நாளைக்குக் காலைல என் லேப்க்கு வாங்க, அங்க பேசலாம்” மீண்டும் குரலைத் தாழ்த்தி “இறந்தகாலத்துக்கோ இல்ல எதிர்காலத்துக்கோ பயணிக்கலாம்” கண்களைச் சிமிட்டிவிட்டு புன்னகைத்தார்.

ரகுநந்தனிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, “நாளைக்கு ஆபிஸ் போகனுமே சார்” என்று இழுத்தார்,

“சன் டே-ல என்ன மேன் ஆபிஸ் உனக்கு?” கதிர்வேலனின் கேள்வி ரகுநந்தனைத் திகைக்க வைத்தது, “இன்னிக்குத் தான சன் டே?” என்றார் தயங்கி, “சில்லி!” என்றபடி தன் கைக்கடிகாரத்தை ரகுநந்தனிடம் காட்டினார், அதில் 04.30 PM / 12-APR-2014 / Saturday என்று பச்சையாய் ஒளிர்ந்தது!

ரகுநந்தனின் மனத்தில் அப்பொழுது அதிகமாய் குழப்பியது எது என்று சொல்வது அத்தனை எளிதன்று!

(தொடரும்...)

எழுதியவர் : விஜயநரசிம்மன் (21-Jan-15, 5:35 pm)
பார்வை : 523

மேலே