நேற்று -அறிவியல் புனைவுச் சிறுகதை- பகுதி 2

ஞாயிறு காலை, ரகுநந்தன் தனது முதல் காலப்பயணத்தை மேற்கொள்ள கதிர்வேலனின் ஆய்வுகூடத்தை நோக்கித் தயக்கமும் உற்சாகமும் கலந்த மனநிலையில் சென்றுகொண்டிருந்தார். உண்மையிலேயே காலப்பயணம் செய்யப்போகிறோம் என்கிற உற்சாகம், காலப்பயணம் செய்யப்போவது உண்மைதானா என்கிற தயக்கம்!

இடையில் வந்து அந்தச் சிறுவன் கொடுத்த துண்டுக் காகிதத்தை அவர் மதிக்கவில்லை, ‘பார்க் போகாதே’ என்றால்? அவர்தான் நேற்றே பார்குக்குப் போய்விட்டாரே, ‘கதி—’ கதிர்வேலன்? ‘கதிர்வேலனைச் சந்திக்காதே’ என்று எழுத நினைத்திருப்பானோ? ஏன் முடிக்கவில்லை? கதிர்வேலனைத்தான் சந்தித்தாகிவிட்டதே! கதிர்வேலன் சந்திப்பு என்றதும் அவருக்கு மீண்டும் அந்த உற்சாகம் + தயக்கம் கலந்த பரபரப்பு தோன்றிவிட, அந்தத் துண்டுக் காகிதத்தைக் கசக்கி சாலையோரத்தில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு நடையைத் தொடர்ந்தார்.

”டைம் மெஷின்” தனது ஆய்வுக்கூடத்தில் கண்கள் அகல நின்றிருந்த ரகுநந்தனிடம் கதிர்வேலன் காட்டிய அந்தக் ‘காலப்பயண இயந்திரத்தை’ உங்களுக்கு விவரிக்க நான் அதிகம் முயலப்போவது இல்லை! நீங்கள் அப்படி ஒன்றை எப்போதும் எங்கேயும் (இந்தக் கதை எழுதப்பட்ட காலத்திற்கு உட்பட்ட ‘எப்போதும் எங்கேயும்’) பார்த்திருக்கமாட்டீர்கள்! ஒரு கார் அளவு பெரிய உலோகக் கோழிமுட்டையைச் சுற்றி ஒன்றுக்கொன்று செங்குத்தான அச்சில் சுழலக்கூடியதாக மூன்று வளையங்கள் என்பது அந்த இயந்திரத்தின் முக்கிய அமைப்பு. அந்தக்கோழிமுட்டையும், வளையங்களும் வெவ்வேறு வண்ண ஒளிகளைப் புகை போல ஒழுகவிட்டுக்கொண்டிருந்தன. ‘இது எப்படி வேலை செய்கிறது’ என்று கேட்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்துடன் நின்று அதை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தார் ரகுநந்தன்.

“எப்படி இருக்கு?” புதிதாய் வாங்கிய காரை நண்பனுக்குக் காட்டுபவரைப் போலக் கேட்டார் கதிர்வேலன், ரகுநந்தனிடமிருந்து பதிலை எதிர்ப்பார்க்காதவராய் தானே தொடர்ந்தார்,

“நண்பா, காலத்தைப் பற்றி நீ நேற்று எழுதிக்கொண்டிருந்தாய் அல்லவா, அது ஏறத்தாழ உண்மையே! ந்யூட்டன் அறிந்த காலம், ஐன்ஸ்டைன் அறிந்த காலம் என்றாய், நீ அறிந்த காலத்தைப் பற்றி எனக்குத் தெரியாது, நான் அறிந்த காலத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேட்டுக்கொள்...” கதிர்வேலன் நாடக ஒத்திகை போல பேசினார்,

“காலம் நதியா சாலையா என்றாய், அது இரண்டுமே! அது ஒரு நதி ஓடும் சாலை, சாலையில் நானும் நீயும் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால் காலத்தில் நான் நடப்பது உன்னையும் சேர்த்து இழுக்கும், நமக்கு குறுக்கே காலத்தின் புலம், Time Field, என்கிற நதியும் ஓடுகிறது, என் அசைவுகளின் அலைகள் உன்னைத் தள்ளும் உன் அசைவுகளின் அலைகள் என்னைத் தள்ளும்... நம்மைச் சுற்றி நமக்கான என்ட்ரோபி புலம் ஒன்று...” சற்று நிறுத்தி ரகுநந்தனை உற்றுப் பார்த்தார், “புரிகிறதா?”

‘ஆமாம்’ ‘இல்லை’ இரண்டையும் கலந்து தலையை அசைத்தார் ரகுநந்தன்,

”சாரி... என் நண்பா, நான் விஞ்ஞானிதான், ஆசிரியன் இல்லை...” என்றார் கதிர்வேலன்,

“பரவால்ல சார்! கொஞ்சம் கொஞ்சம் புரியுது!”

“ம்ம்ம்... நன்று! இப்படி ஒட்டுமொத்தமா இயங்குற இந்த என்ட்ரோபி-டைம் பீல்டுலேர்ந்து ஒருத்தனை நாம விடுவிச்சு நிறுத்தி வெச்சா அவனை மட்டும் விட்டுட்டு மத்தவங்க எல்லாரும், அதாவது மொத்த யுனிவெர்ஸே, காலத்துல போவாங்க, கொஞ்சம் கழிச்சு இவனை விட்டா அவன் அவங்களின் எதிர்காலத்துல இருப்பான்...”

ரகுநந்தனுக்கு உண்மையிலேயே இப்பொழுது கொஞ்சம் புரிந்தது, “ஆனா?”

”என்ன? கேளு... ம்ம்ம்...” கதிர்வேலன் உற்சாகமானார்,

“ஆனா, ஒருத்தனைக் கால ஓட்டத்துல நகராம பிடிச்சு வெச்சு அப்புறம் விட்டா அவன் பின்னால, அதாவது இறந்தகாலத்துலதான இருப்பான்? எப்படி எதிர்காலத்துல?...”

கதிர்வேலன் வாய்விட்டுச் சிரித்தார், “நண்பா, அந்த நதி உருவகம் உன்னோடது, நான் சொன்னதில்ல, நீ அதை வெச்சே திங்க் பண்ற, ஆனா அது அப்படியில்ல... ஆக்சுவலி...” என்று தொடர்ந்தவரை ரகுநந்தன் இடையிட்டு தடுத்தார், “இருக்கட்டுங்க, இன்னொரு நாள் சாவகாசமா பேசிக்கலாம்!”

“இன்னொரு நாள்! இன்னொரு நாள்!” கதிர்வேலனின் முகம் போனபோக்கைப் பார்க்க கொஞ்சம் அச்சமாகக் கூட இருந்தது ரகுநந்தனிற்கு, “இன்னொரு நாள்! இந்த வார்த்தைக்கு எத்தன பொருள் புரியுது எனக்கு இப்போது?” என்று தன் முகத்தை வெறித்துப் பார்த்த கதிர்வேலனைக் கண்டு தான் தவறான இடத்தில் இருக்கிறோம் என்று தோன்றியது ரகுநந்தனிற்கு.

“சார், நான் கிளம்பவா? கொஞ்சம் வேலை இருக்கு எனக்கு, என் வொய்ஃப்...”

“அட, பயந்துட்டியா நண்பா?” என்று இடைவெட்டிய கதிர்வேலன் பழையபடி சகஜநிலையில் தோன்றினார், “இங்க வா...”

ரகுநந்தனின் தோள்களில் நட்போடு கைபோட்டுக்கொண்டார் கதிர்வேலன், “லுக், இதில பயப்பட ஒன்னுமே இல்ல, ஃபிளைட்ல போயிருக்கியா?”

“இல்லங்க...”

“சரி விடு, லிஃப்ட்ல?” போயிருக்கிறேன் என்பது போல் தலையசைத்தார் ரகுநந்தன், “ம்ம்ம்... அது கிளம்புறப்ப ஒரு மாதிரி ஜிவ்வுனு வெயிட்லெஸ்ஸா இருக்கும்ல?” ரகுநந்தன் தலையசைக்க “அப்படித்தான் இருக்கும்!” என்று முடித்தார்.

பிறகும் நீண்ட நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர், அவ்வப்போது தைரியம் வந்தும் அவ்வப்போது பயம் வந்தும் ‘இவருடன் போகலாமா வேண்டாமா’ என்பதில் ஊசலாடிக் கொண்டிருந்தார் ரகுநந்தன். இறுதியாய் ‘சரி ய்யா, இன்னிக்கு வேண்டாம்’ என்று புள்ளிவைத்த கதிர்வேலன் ரகுநந்தனை இருந்து தன்னோடு சாப்பிட்டுவிட்டுப் போகுமாறு வற்புறுத்தினார். இருவரும் கொஞ்சம் சாப்பிட்டனர், உணவு சிலது கதிர்வேலனால் சமைக்கப்பட்டதும் சிலது உணவகத்தில் வாங்கப்பட்டதுமாய் இருந்தது. உணவு முடிந்து கொஞ்சம் மதுவையும் இருவரும் ருசித்தனர். ’காலத்தின் துளி’ (Droplets of Time) என்று கதிர்வேலனால் கண்டுபிடிக்கப்பட்டு(!) கதிர்வேலனாலேயே பெயரிடப்பட்டிருந்த மதுக்கலவை (Cocktail) அது! கொஞ்சம் கொஞ்சமாய் கொஞ்சம் என்பது அதிகம் ஆனது. “ஃப்யூச்சர் ஆஃப் பாஸ்ட்’னு இன்னொரு காக்டெயில் கூட கண்டுபிடிச்சிருக்கேன் அதையும்...” கலந்து கொடுத்தார் கதிர்வேலன்.

போதையில் இருந்த ரகுநந்தனை பேச்சின் இடையில் ’கோழை’ என்று கதிர்வேலன் உசுப்ப, ரகுநந்தனின் ‘ரியாக்‌ஷன்’ பலமாய் இருந்தது. ஒரு கட்டத்தில் ‘இப்பவே கிளம்பிக் காலப் பயணம் போகலாம்’ என்று பிடிவாதம் பிடிக்கத் தொடங்கிவிட்டார் ரகுநந்தன். போதையில் இருப்பதால் வேண்டாம் என்ற கதிர்வேலனைக் ‘கோழை’ ‘ஏமாற்றுக்காரன்’ என்று ரகுநந்தன் உசுப்ப இருவரும் அப்போதே காலப்பயணம் மேற்கொள்வது என்று உறுதி பூண்டார்கள்.

அந்தக் கோழிமுட்டை இயந்திரத்தில் ஒரு கதவைத் திறந்து ரகுவை உள்ளே ஏற்றிவிட்டுத் தானும் ஏறிக்கொண்ட கதிர்வேலன், இருவருக்கும் தானே ‘சீட் பெல்ட்டை’ அணிவித்துவிட்டு, இயந்திரத்தின் விசைகளை வரிசையாய் இயக்கத் தொடங்கினார். அதன் உள்ளும் வெளியிலும் ’பீப்’ ‘டிக்’ ‘க்ளின்’ ‘க்ரக்’ என்று பலவித ஓசைகளும் மாறி மாறிக் கேட்டன, எல்.சி.டி. திரைகளும் எல்.ஈ.டி. விளக்குகளும் உயிர்பெற்று ஒளிர்ந்தன. கதிர்வேலன் போதையில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இன்றி மிகத் தெளிவாகவே இயந்திரத்தை இயக்கத் தொடங்கியிருந்தார். அவர் போதையிலேயே இல்லை!

இராட்டினத்தில் சுழல்வது போன்ற உணர்வில் கொஞ்சம் கொஞ்சமாய் போதை தெளிந்து வந்த ரகுநந்தன் தன்னைச் சுற்றி நடப்பதை மெல்ல புரிந்துகொள்ளத் தொடங்கினார், கதிர்வேலனையும் அந்த இயந்திரத்தையும் அடையாளம் கண்டுகொண்டார். அதற்கு வெளியில் தெரிந்த எதுவும் அவராலோ என்னாலோ வருணிக்க இயலாததாய் இருந்தன!

“என்ன டா முழிச்சுட்டியா?” என்று கேட்ட கதிர்வேலனின் அலட்சியத்தில் ரொம்பவே அதிர்ந்து போனார் ரகுநந்தன். அவர் ஏதும் கேட்பதற்கு முன் மேலும் அதிர்சியாக அவர் கண்ணில் பட்டது அந்தக் கோப்பு! உள்ளிருப்பதை வெளிக்காட்டிய அந்தக் கோப்பில் இருந்த முதல் தாளில் ரகுநந்தனின் புகைப்படத்துடன் கூடிய அடிப்படை விவரங்கள் அடங்கி இருந்தன. டாஸியர் பைல்!

கதிர்வேலனுடனான தனது சந்திப்பு தான் எண்ணுவதைப் போல் அத்தனை எதேச்சையானது அல்ல என்பதை அவர் உணர்ந்துகொண்டு எழ முற்பட்ட பொழுது, தான் பிணைக்கப்பட்டிருந்த ’சீட் பெல்ட்டும்’ எத்தகையது என்பதை உணர்ந்துகொண்டார். கதிர்வேலன் ரகுநந்தனைப் பார்த்துச் சிரித்த சிரிப்பில் கலப்படமில்லாத குரோதம் இருந்தது.

எதுவும் செய்யச் சக்தியற்று இருந்த ரகுநந்தன் கதிர்வேலன் அந்த இயந்திரத்தை இயக்குவதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். எவ்வளவு நேரம் அப்படிக் கடந்ததோ தெரியாது (இந்தக் கதையைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கலான வாக்கியம்!) இயந்திரம் மெல்ல மெல்ல இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. ’பம்’ என்று தரையிறங்கும் உணர்வு ஏற்பட்டது. விளக்குகள் ஒலிகள் எல்லாம் அடங்கும் வரை காத்திருந்த கதிர்வேலன், தன்னை சீட்-பெல்ட்டில் இருந்து விடுவித்துக்கொண்டு, ரகுநந்தனின் ’கட்டுகளை’ச் சரிபார்த்தார், பிறகு எங்கிருந்தோ ஒரு மாஸ்கிங் டேப்பை எடுத்து ரகுநந்தனின் வாயைச் சுற்றி இறுக்க ஒட்டினார், ஒன்றுமே சொல்லாமல் ரகுநந்தனைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு கதவைத் திறந்து இறங்கி வெளியேறி மீண்டும் கதவைச் சாற்றினார்.

’ஆபத்து’ என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்திருந்த ரகுநந்தன், என்ன ஏன் யார் எப்படி என்றெல்லாம் ஆராய அவகாசமின்றி தப்பிக்கும் வழியை யோசித்தார். இருக்கையின் பிணைப்பிற்கு உட்பட்டு அப்படியும் இப்படியும் அசைந்து ஆடினார். இயந்திரமே குலுங்கும் படி அவர் அடிய ஆட்டத்தில் ’டப்’ என்று அவருக்கு வழி பிறந்தது, எங்கோ ஒரு பலவீனமான ‘ஸ்ட்ராப்’ அறுந்துகொண்டு ரகுநந்தனின் கட்டு கொஞ்சம் இளகியது, அதைப் பயன்படுத்திக்கொண்டு அப்படியும் இப்படியும் அசைந்து நெளிந்து கட்டிலிருந்து முழுவதுமாகவே தன்னை விடுவித்துக்கொண்டார் ரகுநந்தன்.

இயந்திரத்தின் கதவைத் திறந்து வெளியில் வந்தவருக்கு ஒரு புத்தம் புதிய உலகம் காத்திருந்தது. அந்த இரவில் அவருக்குத் தெரிந்ததெல்லாம் ஒளித்துணுக்குகள்தான். தொலைவில், வெவ்வேறு அளவில், வெவ்வேறு உயரத்தில், வெவ்வேறு வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த ஒளித்துணுக்குகள்! பெரியதாய் நகர்ந்தவை கட்டிடங்கள் என்பதும், சிறியதாய் நகர்ந்தவை வாகனங்கள் என்பதும் அவருக்கு மெல்ல புரியலாயிற்று, ரகுநந்தனின் கைகளும் தொடைகளும் குளிரில் நடுங்குவதைப் போல லேசாய் நடுங்கின... முதுகில் ஐஸ்கட்டி வைத்ததைப் போல ஒரு சில்லிப்பு பரவியது... ’உண்மையாகவே எதிர்காலத்தில் நின்று கொண்டிருக்கின்றோம்’ என்ற உணர்வு கொடுத்த பரிசுகள் அவை!

மெல்ல ரகுநந்தனின் மூளை அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கியது, ஆனால் அதற்கு ஒன்றும் புரியவில்லை. எந்த காலத்தில் இருக்கிறோம் என்றே தெரியாமல் ஒரு ஆபத்தில் இருக்கிறோம், இங்கே யார் நண்பன் யார் எதிரி என்று எப்படித் தெரிந்துகொள்வது? ரகுநந்தன் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டார் அவருக்கு அங்கே அறிமுகமானதாய் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான் – காலப்பயண இயந்திரம்!

இயந்திரத்திற்குள் ஏறி கதவை அடைத்துக்கொண்ட ரகுநந்தன் உள்ளே எப்போதும் ஒளிர்ந்த ஒரு எல்.ஈ.டி-யின் வெளிச்சத்தில் அதை கொஞ்சம் ஆய்ந்து கவனிக்கலானார், அதிக சிரமமின்றி அதன் பிரதான விசையை அடையாளம் கண்டு தட்டிவிட்டார், இயந்திரம் உயிர்பெற்றது, ‘ட்ரிப் ச்சார்ட்டர்’ என்று ஒளிர்ந்த எல்.சி.டி திரையை இயக்குவது ஏ.டி.எம் இயந்திரத்தை இயக்குவது போல் எளிதாகவே தோன்றியது ரகுநந்தனிற்கு, அது அடுத்தடுத்து கேட்ட கேள்விகளுக்கு விரல் நுனியால் பதில்களைத் தொட்டுக்கொண்டே வந்தார், இறுதியாய் அது ‘என்கேஜ்?’ என்று கேட்டதற்கு அவர் ‘யெஸ்’ என்று தொட்டதுதான் தாமதம், இயந்திரம் தனது ’பீப்’ ‘டிக்’ ‘க்ளின்’ ‘க்ரக்’ குரலில் கிளம்பிவிட்டோம் என்று அறிவித்தது, ரகுநந்தன் அவசர அவசரமாய் தனது சீட்-பெல்டை அணிந்துகொண்டார்.

இயந்திரத்தை விட்டு இறங்கி (தனது பழைய) நிகழ்காலம்தான் என்று உறுதிபடுத்திக்கொண்டு நிம்மதி பெருமூச்சு விட இருந்த ரகுநந்தனிற்கு ஒரு பேரதிர்ச்சி கண்ணில் பட்டது, சாலையின் மறுமுனையில் ரகுநந்தன் நடந்து போய்கொண்டிருந்தார்!

‘படால்’ என யாரோ அறைந்ததைப் போல விஷயம் புரிந்தது ரகுநந்தனிற்கு, என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தவரை அந்தச் சிறுவன் கற்பனை ஸ்கூட்டரை ஓட்டியபடி கடந்த பொழுது ரகுநந்தனின் மூளை கடகடவென செயல்படத் தொடங்கியது, சட்டென அந்தச் சிறுவனை நிறுத்தி வைத்துக்கொண்டு, தன் பைஜாமா பையைத் துழாவி, ஒரு பேனாவையும் குறிப்பு நோட்டையும் எடுத்தார், அதில் ஒரு பக்கத்தில் கடகடவென எழுதியபடியே அந்தப் பையனிடம் “நான் கொடுக்குறத அதோ அங்க போற அந்த ஆள்கிட்ட கொடுத்துரு...” என்றார்,

“தந்தா எனக்கு என்ன தருவ?” என்று கேட்டான் பையன், ரகுநந்தனின் பேனா பாதியில் எழுதாமல் திக்கியது, அதை உதறி உதறி எழுதினார், பையன் குதிக்கத் தொடங்கினான், “தந்தா எனக்கு என்ன தருவ?” என்று அந்த வாக்கியத்தை மனப்பாடம் செய்கிறவன் போல மீண்டும் மீண்டும் கேட்க தொடங்கினான், ”அட இருடா...” என்று பேனாவின் மீது இருந்த வெறுப்பை அவன் மீது காட்டினார், அவன் “நான் போறேன் போ!” என்று கோவித்தான், அவனைப் பிடித்து இழுத்து, எழுதிய வரை போதும் என்று எண்ணியவராய் ரகுநந்தன் அந்தத் தாளைக் கிழித்து அவனிடம் கொடுத்து ”அவர்கிட்ட கொடு போ” என்று விரட்டினார், “எனக்கு?” என்று நகராமல் நின்றான் பையன், இரண்டு கைகளாலும் தன் பைஜாமாவின் பைகளைக் குடைந்த ரகுநந்தனின் இடதுகையில் ரூபாய் தாள் ஒன்று சிக்கியது, அதை பையனிடம் கொடுத்தார், “இந்தா! சீக்கிரம் போ!”

“ஐய்... பத்து ரூபா...” என்று தன் கற்பனை வண்டியில் கிளம்பி ஓடினான் சிறுவன், அவன் கையில் இருந்த அந்த ரூபாயில் காந்தி சிரிக்க வேண்டிய இடத்தில் யாரோ ஒரு தலைப்பாகை இளைஞன் சிரித்துக்கொண்டிருந்தான்!

[முற்றும்]

எழுதியவர் : விஜயநரசிம்மன் (21-Jan-15, 5:40 pm)
பார்வை : 444

மேலே