மனிதன்

வேண்டாமல் வரும்
திங்கள் தின விடியலில்
மீண்டும் எந்திரமாகி
வாரக்கடைசி இரவு வரை
வாழ்வு மறந்து ஓடி இருப்பான்.

கணினித்திரை ஒளியில்
இறந்த இரவுகளுக்கு
கண்தானம் செய்து,
மூக்கு கண்ணாடியில்
வண்ணம் வகுத்தறிவன்
மழைக்கண்ட பயிர் போல
இவன் கண்டு மகிழும்
மதுபான நண்பர்கள் கொள்வான்

நாகரிகத்தின் பெயருக்காய்
நகைப்பைக்கூட மறைத்து வைப்பான்
வராத போதும் சிரிக்கும்
கலை கற்றுகொள்வான்
கடிகார முட்களையும் விட
முந்தி ஓடுவான்
எலியிடம் அகப்பட்ட
பொறியாவான்
சொல்லிய சொற்களுக்கும்
சொல்லாத செய்கைகளுக்கும்
அர்த்தம் தரும் உளவியல் கற்று
உலகம் வெல்லும் மமதை கொல்வான்

ஞாயிறு குடியில் கூத்தாடி கூத்தாடி
வாழ்ந்து விட்டதாய் தேற்றி கொள்வான்
முகவரி அட்டைக்காய்
முகமதனை அழித்து கொள்வான்

கணினித்திரை பட சேமிப்பில்
பறந்து கிடக்கும் பசுவெளிகாடுகளும்
செல்லுமிடப்பேசியில்
அழைப்படையாளமாய் வரும்
வானம்பாடியுமே
எஞ்சிய தடயங்கள்
இவன் முன்னதொரு காலத்தில்
மனிதன் என்று.

எழுதியவர் : சங்கீதா இளவரசன் (22-Jan-15, 1:13 am)
சேர்த்தது : இளவரசன்
Tanglish : manithan
பார்வை : 79

மேலே