இப்படியொரு தலைவன்
எதிர் வந்து நீ நின்று
என் காதல் நீயென்று
ஆனந்த அழுகையிலே
அழகாய்த்தான் சொல்வாயோ
பொங்கி வழியும் கண்ணீரை புடவையிலே
துடைக்கும் முன்னே உன்
பொன்விரல் கொண்டு
மெதுவாகத் துடைப்பாயோ
மலரும் சோர்ந்துவிடும், தேனும் தீர்ந்துவிடும்
மலர்வனம் வாடிய போது
வண்டுருவம் மாறி
வான்மழையாய் பொழிவாயோ
பணியிலும் பாதையிலும் படுத்தி எடுக்கும்
காம நாய்களால் நிலை
குலைந்த என்னை
நிமிர்த்திவிட வருவாயோ
உடைகளின் மாயத்தை, முகத்தின் சாயத்தை
முழுவதுமாய் மறந்து, மனம்
கண்டு மகிழ்வுடன்தான்
காதல் செய்வாயோ
இவனோ அவனோ என்று
இமைகளிரண்டும் தேடிய போது
இங்கேதான் உள்ளேன் என்று
இன்றே நீ வருவாயோ