பொங்கல் கவிதைப் போட்டி - நடுவர் தீர்ப்பு - 07

வணக்கம் தோழர்களே...

பொங்கல் கவிதைப் போட்டியினை நெறியாள்கை செய்த சிறப்பு நடுவர்களின் அனுபவப் பகிர்வுடன் இணைந்துவரும் அறிவுரைகள் உங்களின் கவனத்திற்காக முன்வைக்கப் பட்டு வருகின்றன.

அந்தவகையில்... எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து சிறப்பு நடுவராக கடமையாற்றிய மதிப்பிற்குரிய பொள்ளாச்சி அபி அவர்களின் செய்தி கீழே இணைக்கப் பட்டிருக்கின்றது !

பொங்கல்விழாப் போட்டிகள்-2015-நடுவர் எண்ணம்.- பொள்ளாச்சி அபி
````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
“முதலில் அவனைக் கவிதை எழுதவிடுங்கள்..பிறகு அது எந்த வகைக் கவிதையென்று முடிவு செய்து கொள்ளலாம்..!”-இது பாப்லோ நெருடாவின் கவிதை மேற்கோளையொட்டி,தோழர் அகன் அவர்கள் அடிக்கடி சொல்வது..,

இந்தப் போட்டிகளைப் பொறுத்தவரை,எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அறிவிக்கப் பட்ட,குறித்த தலைப்புகளை தங்களுக்குத் தெரிந்தவரை,அனுபவத்தில் உணர்ந்தவரை உள்வாங்கிக் கொண்டு,எழுதத் தொடங்கிய படைப்பாளிகள் மிகவும் வரவேற்கப் படவேண்டியவர்கள்.!

ஒரு சமூக நோக்கத்திற்காக நடத்தப்படும் மாரத்தான் பந்தயத்தில்,வெற்றி, தோல்விகளைக் குறித்த கவலைகளற்று..அந்தப் போட்டியில் கலந்துகொள்ள முன்வருவதே,அந்த நோக்கத்தை மனதளவில் ஏற்று,ஆதரவு அளிப்பதின் வெளிப்படையான சாட்சியல்லவா..?

அந்த வகையில், 2015-பொங்கல் விழாப் போட்டிகளில் கலந்து கொண்டு, கொடுக்கப்பட்ட தலைப்புகள் அனைத்தின் கீழும்,தங்கள் கவிதைகளைப் படைத்த படைப்பாளிகள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு, எளிமையான பரிசுகளாக அன்பு நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!

உலகத்தின் ஆகப்பெரிய சிகரமான எவரெஸ்ட்டின் உச்சியைத் தொட்ட முதல் ஆண்,முதல் பெண்,முதல் மாற்றுத்திறனாளி என சிலரை நாம் நினைவில் வைத்திருப்போம்.அது “முதன் முதலாக..” என்பதால் நினைவில் இருக்கிறது. அவ்வளவுதான்.ஆனால்,அதற்குப்பின் ஐந்தாவதாக,பத்தாவதாக,நூறாவதாக..,அந்த சிகரத்தைத் தொட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் ஏறிக் கொண்டுதான் இருக்கிறது.அதற்காக,இவர்களின் முயற்சியையும்,உழைப்பையும் வெகு சாதாரணமாக மதிப்பிட்டுவிட முடியாதே..! சிகரத்தை எப்போதேனும் தொட்டுவிட வேண்டும்..அவ்வளவுதான்.!

தங்களுக்கு முன்னால் சென்று சிகரம் தொட்டு விட்டார்களே என்று சோர்வுறாமல், அந்த சாதனை முயற்சியில் ஓயாது ஈடுபட்டுக் கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் நினைத்து இந்த உலகம் பெருமைப் பட்டுக்கொள்ளும்
நாள்,வரிசைகட்டிக் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மிகவுறுதியாக உங்களுக்கு நான் சொல்லிவிடமுடியும்.

நமக்கு முன்னால் சென்று சிகரம் தொட்டவர்களின் உழைப்பையும்,அனுபவத்தையும் நமக்குப் பாடமாக்கிக் கொள்வோம்.அதைப் போலவே என்பதன்றி,அதைவிட மேலானதாக நம்மை வெளிப்படுத்துவோம்.அதுபோலவே இந்தக் கவிதைப் போட்டியில் முதல் சில இடங்களைப் பிடித்தவர்கள் குறித்து,நாமும் அந்த மனநிலைக்கு வந்துவிடுவோம்.!

வெற்றியை நோக்கிய நமது பயணத்தில்

ஆங்காங்கே சில எழுத்துப் பிழைச் சறுக்கல்கள்,

துவங்கிய பயணவரிகள் முடிவதற்கான இடமறியாமல்,சென்று சேர்ந்த இருட் குகைகள்,

தூக்கிச் சுமந்த பயனற்ற பொருள்கள்,

காலநிலையொத்த தலைப்பைக் குறித்த தவறான கணிப்புகள்,

பலரும் சென்று தேய்ந்திருந்த,சற்றே அசந்தாலும் சறுக்கிவிடுகின்ற பழைய பாதைகள்,

சிறிய சிகரங்களைக் கூட,இதற்கு முன் எட்டிப் பிடித்துப் பார்க்காத உழைப்பின்மை,

சந்தக் காலடியை வைப்பதில் இருந்த கவனத்தில்,கவிப் பயணத்தின் திசை மறந்த கவனக் குறைவு,

சிகரம் தொட்டவர்களின் அனுபவ எழுத்துக்களைக் கண்டறியாமை..,என அனுபவக் குறைவினால் ஏற்பட்ட சில இடையூறுகளே,உங்கள் பயணத்தை கொஞ்சமே கொஞ்சம் தாமதப்படுத்தியுள்ளது.

அதனால் என்ன..? முன்னோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலவில் கால் பதித்ததோடு,இன்று செவ்வாயில் என்ன இருக்கிறதெனக் கண்டறியவும் துணிந்த நமக்கு,காலத்தை மாற்றும் கவிதை எழுதுவது என்பதுதானா பிரமாதம்..? நாம் எழுதுவோம்..! அதற்கு முன்னதாக நாம் அனைவரும் இணைந்து நமக்கு முன் செல்பவர்களை வாழ்த்துவோம்..!

உங்களின் பிரியத்திற்காக கவிதையொன்று,

-“மலைப் பயணம்”
----------------------------
பிரியங்களை செலவழிக்கத்
தெரியாத ஒருவன்,
மனதின் மிகஉயரத்திலிருந்து
ஒவ்வொரு பிரியத்தையும்
வீசிக் கொண்டிருந்தான்.

ஒன்றை மேலிருந்து கீழாகவும்,
இன்னொன்றை தன்திசையிலிருந்து
வலப்பக்கமாகவும்,
பிறிதொன்றை இடப்பக்கமாகவும்,
மற்றொன்றை மேல்நோக்கியும்

வீசவீசத் தீராத பிரியங்களை
இனியென்ன செய்வதென்றறியாது
திகைத்து இறுதியாய்
பிரியங்களுக்குள்
தன்னைத் திணித்து
உச்சியிலிருந்து குதித்தான்.! ------– க.அம்சப்பரியா-

எனது எண்ணங்களையும்,தேர்வு முறைகளையும் எப்போதும் அங்கீகரித்து,விழாக் குழுவில்,என்னையும் பங்கேற்கச் செய்யும் தோழர் நிலாசூரியன் அவர்களின் அன்புக்கும்,இம்முறை கடும் வேலைப்பளுவிற்கும் இடையில்,பொறுப்பையேற்ற பின்,அதனை சிறப்புற நடத்திவிடவேண்டும் என தன் ஆவலையும்,உழைப்பையும் நல்கிய தோழர் கே.எஸ்.கலை அவர்களுக்கும்,இப்போட்டியை சிறப்புற நடத்திட தங்கள் அருமையான ஆலோசனைகளையும்,நேரத்தையும் தந்து இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் செயலாற்றிக் கொண்டிருக்கும் நடுவர்களுக்கும் உங்கள் சார்பில்,எனது நன்றியையும்,அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.!

மீண்டும் பேசுவோம்..!

அன்புடன்
பொள்ளாச்சி அபி.!

எழுதியவர் : விழாக்குழு (28-Jan-15, 9:14 am)
பார்வை : 179

மேலே