மேகங்களின் விதவைக் கோலம்

எம் நாட்டு பெண்களில் மட்டுமல்ல
மேகம் கூட விதவைதான்
கருமேகம் சூழ்ந்தபோது
கும்மாளமிடும் நாங்கள்
வெண்மேகம் கண்டால் வெகுண்டிடுவோம்!

எங்கள் பெண்களுக்கு மட்டுமல்ல
உனக்கும் இக்கோலம் யாம் தந்த பரிசே!
பயிர் நிலங்கள் எல்லாம் பங்களாக்கள் ஆக்கினோம்.
மழை தரும் மரங்களை எல்லாம்
எம் தேவைக்காய் வெட்டினோம்!
மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படுமளவுக்கு
மின்சாதனத்துடனே வாழ்வியல் பயணம்!
கறிகாய் வாங்க கூட
காரிலே போனோம்!
தேவையே இல்லாத ப்ளாஸ்டிக்கே
கூடை கூடையாய்
மண்ணில் கொட்டி
மண்ணை மழுங்கடித்தோம்!
வேண்டாத மரங்களை
அழகுக்காய் வளர்த்தோமேயன்றி,
நீருக்காய் எதையும் செய்வதில்லை
இத்தனையும் செய்து
ஓசோன் லேயரையும்
ஓட்டையாக்கினோம்!
இவ்வளவும் நாங்கள் செய்தோம்
பழி மட்டும் உன் மேலே!
"வானம் பொய்த்துவிட்டது"
"மானம் பார்த்த பூமி"
நீ பொய்க்கவில்லை
பொழிய நாங்கள் விடவில்லை

இந்த விதவைக் கோலம் யாம் தந்ததே
என்ன செய்வது
எம் பெண்டிரையும்
இப்படித்தான் கூறுவோம்
யாமே விதவைக் கோலம் பூணச்செய்வோம்
பின்,
"அபசகுனம் "என்போம்
"கணவனை விழுங்கிய கிராதகி"
"மூதேவி" என்போம்
எங்கள் அறியாமை மாறுவதாய்
சரித்திரமுமில்லை! பூகோளத்திலுமில்லை
தரித்திரமின்றித் தான் வாழ ஆசை
அதற்கு நீ தான் மங்கலம் பூணவேண்டும்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (30-Jan-15, 2:44 pm)
பார்வை : 89

மேலே