எழுத்து தள தோழமைகளே

தள தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்,

தம்பி கலை அவர்களின் அர்ப்பணிப்பினால் பொங்கல் கவிதைப்போட்டி சிறப்பாக நடந்து முடிந்து இருக்கிறது, வருடம்தோறும் நமது எழுத்து தளத்தில், தமிழரின் அறுவடை திருநாளை முன்னிட்டு கவிதை போட்டி நடத்துவது வழக்கம் ஆகும், இதை தளத்தில் இணைத்து இருக்கும் நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே.

அவரவர்களும் வாழ்க்கையைத்தேடி இயந்திரமாய் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள், அப்படி இருக்கையில், சிறிது நேரம் தமிழ்ப்பணியாற்றி, தமிழன்னையின் ஆசீர்வாதங்களை பெறுவது என்பது அத்தனை சாதாரணமான விடயமல்ல.

நிலங்களில் வியர்வை சிந்தி ஓயாமல் உழைத்து, விளைந்த தானியங்களை அறுவடை செய்து வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்த பிறகு, அடுத்த பருவமழை வரும்வரை உழவன் சற்று ஓய்வு எடுக்கிறான். அந்த நேரங்களில் ஒரு விழா கொண்டாடி அனைவரும் தங்களது அன்புகளை பகிர்ந்துகொண்டு உறவுகளோடு உண்டு மகிழ்ந்து ஓரிரு தினங்கள் இருக்கிறார்கள், அந்த தினங்களில் தங்களது பண்பாட்டு கலைகளை வெளிபடுத்தி அதை ரசித்து இன்பம் காணுகின்றார்கள். இந்த சந்தோசமான தினங்கள்தான் அறுவடை திருநாளாக நாம் கூறுகின்றோம்.

இப்படிப்பட்ட தருணத்தில் நாமும் தளத்தில் பொங்கல்விழா கொண்டாடினோம், கவிதை போட்டி வைத்து சந்தோசமாக இருந்தோம், இதற்காக எங்கள் நேரங்களை நாங்கள் ஒதுக்கி இதை செய்து இருக்கிறோம். மிகுந்த பணிச்சுமைகளுக்கு இடையிலும் திறமையாக தம்பி கலை இந்த போட்டியினை நடத்தி முடித்து இருக்கிறார், ஆகையினால் அனைவரும் அவரை பாராட்ட வேண்டிய நேரமிது என்பதை நான் கூறிக்கொள்கிறேன்.

இந்த போட்டி சுயநலத்திற்காகவோ, புகழுக்காகவோ, பணத்திற்காகவோ நடத்தப்படவில்லை. எங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்துதான் நாங்கள் இந்த தமிழ்ப்பணியை முன்னேடுத்துகொண்டு இருக்கிறோம். எங்கள் தாய் தமிழுக்காக நாங்கள் இதை செய்வதில் பெருமை கொள்கிறோம். நாம் அனைவரும் சந்தோசமாக இணைந்து பொங்கல் விழாவை கொண்டாட வேண்டும், சிறப்பான படைப்பாளிகளை இனம் காட்டி அனைவருக்கும் உறவு பூன வேண்டும், சிறு சிறு படைப்பாளிகள் மேலும் வளர்ச்சியடைய இந்த போட்டி ஒரு ஊக்க மருந்தாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த போட்டி நடத்தப்படுகிறதே தவிர, வேறு எந்த சுயகாரியத்திர்காகவும் இல்லை. அதோடு மட்டுமில்லை இப்படிப்பட்ட போட்டிகள் நடத்தப்படுவதால் தமிழ மேலும் சிறிதாவது செம்மையடையும் என்ற நம்பிக்கையிலும் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முடிவுகள் சிலருக்கு திருப்தியளிப்பதாக இருக்காமல் இருக்கலாம், அது ஒன்றும் தவறில்லை, ஏனென்றால்... எல்லோரையும் திருப்திபடுத்துவதென்பது நிச்சயமாக இயலாத காரியம் ஆகும், இந்த விடயத்தில் மட்டுமல்ல எந்த ஒரு செயலையும் பொதுவாக செய்யும்பொழுது இந்த நிலை நீடிப்பது வழமையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தோழர் அருண் வாலியைப்போல் சிலர் வெளிப்படையாகவே கேட்கிறார்கள், சிலர் உள்ளுக்குள்ளவே மறைத்துவிடுகின்றனர், சிலர் மறைமுகமாக கேட்கின்றனர். அந்தவகையில் பார்க்கையில் தனது மனதில் எழுந்த எண்ணங்களை பகிரங்கமாகவே வெளிபடுத்திய தோழர் அருண் வாலி அவர்களுக்கு எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தளம் பொதுவானது, அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு, அந்த வகையில் நீங்கள் உங்கள் மனதில் எழும் எண்ணங்களை தாராளமாக வெளிபடுத்தலாம். போட்டி முடிவுகள் திருப்தி அளிக்கவில்லை எனில் சரியான திறனாய்வின் மூலம் பொங்கல் கவிதைப்போட்டி என்ற கணக்கிற்கு விடுகை அனுப்புங்கள், அது நடுவர்களின் மேற்பார்வைக்கு கொண்டுச் செல்லப்படும், இனிவரும் காலங்களில் திருப்தியான தீர்ப்புகள் வழங்க மேலும் கடுமையான முயற்சிகளை விழாக்குழு மேற்கொள்ளும் என்பதை நான் கூறிக்கொள்கிறேன்.

தீர்ப்பு திருப்தியில்லை என்று மொட்டையாக சொல்லிவிட்டுப் போகாமல் எந்த வகையில் திருப்தியில்லை, என்று படைப்புகளை முறையாக திறனாய்வு செய்து கூறுவீர்களேயானால் அது எங்களுக்கு நீங்கள் செய்யும் உதவியாகவே கருதப்படும். மேலும் நடுவர்கள் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு நீங்கள், திருப்தி இல்லை என்று சொல்வது உங்கள் தனிப்பட்ட கருத்தாகவே கருதப்படும், ஏனென்றால்,, நடுவர்களினே தீர்ப்பே இறுதியானது, அதை திருத்தவோ மாற்றியமைக்கவோ எவருக்கும் உரிமை இல்லை, ஏன் விழக்குழுவே கூட நடுவர்களின் தீர்ப்பில் தலையிடுவதில்லை என்பதுதான் உண்மை. தவிர்க்க முடியாத அவசியம் வந்தால் மட்டுமே, தீர்ப்புகள் பற்றிய ஆலோசனை நடத்தப்படும்.

இந்த மாதிரி ஒரு ஒரு போட்டியிலும் யாராவது ஒருவர் குறுக்கு விலா ஓட்டுவதை வழமையாக திருவிழாக்குழு சந்தித்து வரும் ஒரு நிகழ்வாகும். அதனால் இந்த மாதிரியான விடயங்கள் விழாக்குழு எதிர்பார்த்த ஒன்றுதான், இதில் அதிசயமில்லை, இப்படி ஒரு நிகழ்வுகள் நடக்காமல் இருந்தால் மட்டுமே அது அதிசயமாகும்.

இனி வரும் போட்டிகளில் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகு 12 மணி நேரம் உங்களுக்காக அவகாசம் ஒதுக்கப்படும், தீர்ப்பில் திருப்தி இல்லை என்று உணருகின்றவர்கள், பரிசிற்கான படைப்புகளை ஆராய்ந்து முறையான திறனாய்வு செய்து 12 மணி நேரத்திற்குள் உங்கள் திறனாய்வு கருத்துக்களை விழாக் குழுவின் மேற்பார்வைக்கு கொண்டு வருவீர்களேயானால், உங்கள் திறனாய்வினை கொண்டு படைப்புகளை சோதித்து அவசியபட்டால், மேலும் சிறப்பு நடுவர்களை கொண்டு தீர்ப்பை மீளாய்வு செய்து, மீண்டும் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதை இப்பொழுது இந்த போட்டியை உருவாக்கியவன் என்ற முறையிலும், இந்த விழக்குழுவினை இயக்குகின்றவன் என்ற முறையிலும் உறுதி கூறுகிறேன்.

தோழர் ரோஷன், அய்யா கருமலைத்தமிழாழன், போன்றவர்களின் படைப்புகள் முதல் பரிசிற்கு வராதது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் நடுவரின் தீர்ப்பில் தலையிட முடியாது. நாடுவார்கள் மிக திறமையானவர்கள், இந்திய அரசின் சகாத்திய அகேதெமி விருதை பெற்றவர், முனைவர், பாடலாசிரியர் என்று திறமையானவர்கள் ஒரு ஒரு சொல்லையும் வரியையும், இலக்கண இலக்கியங்களையும் ஆராந்து இருக்காமல் விட்டு இருக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்த போட்டியானது பரிசை மையாப்படுத்தி நடத்தப்படவில்லை, தமிழ சேவையாற்ற வேண்டும், அதே வேளையில் தளத்தில் உள்ள சிறப்பான படைப்பாளிகளை அடையாளம் காட்ட வேண்டும் என்பதுதான் உண்மையான நோக்கமாகும். அந்த வகையில் இந்த ஆண்டு 19 படைப்பாளிகளை அடையாளம் காட்டி இருக்கின்றோம். இதுதான் இந்த போட்டியின் உண்மையான தீர்ப்பு, இதற்கு பிறகுதான் பண பரிசுகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் தமிழுக்கு சேவை செய்கிறோம், நாங்கள் சிறந்த படைப்பாளிகளை அடையாளம் காட்டப் போகிறோம் நீங்கள் கவிதை எழுதுங்கள் என்று சொன்னால் யாரும் கவிதை எழுத முன் வரமாட்டார்கள், அதனால்தான் பரிசு போட்டி என்ற ஒன்றை அறிவிக்க வேண்டி இருக்கிறது. அதோடுமட்டுமல்ல பரிசு என்று அறிவித்தால் படைப்பாளிகளிடம் ஒரு உற்சாகம் இருக்கும் அல்லவா.

நடுவர்கள் யார் யார் என்பது நடுவர்களுக்கே தெரியாது, எழுதியவர்கள் யார் என்று கூட தெரியாத அளவிற்கு எழுதியவர் பெயர் இல்லாமலேயே படைப்புகளை மட்டுமே நடுவர்களுக்கு அனுப்புவது விழாக்குழுவின் வழக்கமாகும், அப்படிதான் இந்த இறுதி தேர்வுகள் கூட நடந்து இருக்கிறது என்பதை நான் கூறிக்கொள்கிறேன். இந்த போட்டி முழுக்க முழுக்க தம்பி கலையின் தலைமையிலேயே நடந்ததால் இதில் நடுவர்கள் யார், என்ன நடக்கின்றது, என்ன நடந்தது என்று எனக்கே கூட எதுவும் தெரியாது. எந்த ஒரு பணியிலும் யாரும் யாருக்கும் குறுக்கே செல்வது என்பது எங்கள் விழாக்குழுவில் எப்பொழுதும் இருந்ததில்லை.

தோழமைகளே நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும், கொள்கை ரீதியாக முரண்பாடு இருந்தாலும் நாம் தமிழர்கள்தான், என்னைப்போல் இப்படிப்பட்ட போட்டிகளை நீங்களும் நடத்த வேண்டும், இப்படி போட்டி நடத்துவது மிக கடினமான வேலை என்பது உண்மைதான், அதை நாங்கள் அனுபவித்து இருக்கிறோம், உங்களுக்கு நாங்கள் உதவுகின்றோம் நீங்கள் போட்டி நடத்துங்கள், நல்லது யார் செய்தாலும் விழாக்குழு அவர்களுக்கு துணையாக இருக்கும், இந்த பணியை நாம் நமது தமிழுக்காக செய்கிறோம் என்று நினைத்தால் மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். உள்ளே வாருங்கள் எங்களோடு சேருங்கள் அல்லது உங்களோடு எங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏன் வெளியே நிற்கின்றீர்கள்?. வெளியே நின்றுகொண்டு சொல்வதெல்லாம் முரணாக இருப்பதாகவே தோன்றலாம், வாருங்கள் அருகில் வந்து இணைந்துகொள்ளுங்கள் நாம் அனைவரும் தோழமைகள், தொப்புள்கொடி உறவுகள், வாருங்கள் ஒன்றுகூடி தேரிழுப்போம்.

இனிவரும் போட்டிகளில், கவிதை, கட்டுரை, சிறுகதை என பன்முகத்தன்மைகள் போட்டிகளில் உருவாக்கப்படும் என்பதை கூறிக்கொள்கின்றோம். இது நமக்கு பயிற்சி பட்டறைதான், முயற்சியையும் பயிற்சியையும் தொடருவோம், அடுத்து வரும் போட்டிகளில் வெற்றியினை எட்டுவோம், அதற்க்கு முன் வெற்றிபெற்ற தோழமைகளை மனதார வாழ்த்துங்கள்.

இந்த போட்டியில் நடுவர்களாக செயல்பட்டு, சிறப்பாக பணியாற்றிய தோழர்கள்

தோழர் - திரு.ஈஸ்வரன் ராஜாமணி
அய்யா - திரு.மெய்யன் நடராஜ்
தோழி - .புலமி அம்பிகா
தோழர் - திரு.சர்னா
தம்பி - திரு.வினோத் கண்ணன்
தோழி திருமதி.தாரகை
அய்யா - திரு.ஜோசப் ஜூலியஸ்
அண்ணன் - திரு.பொள்ளாச்சி அபி
அய்யா - அகன்

மேலும் புகழ்பெற்ற படைப்பாளிகளான,
அய்யா - ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கும்.
அய்யா - பா. ரவிக்குமார் அவர்களுக்கும்
அய்யா - யுகபாரதி அவர்களுக்கும் - எனது அன்பான நன்றிகள் உரித்தாக்குகின்றேன்.

பரிசுத் தொகையினை என்னோடு சேர்ந்து பகிர்ந்தளிக்க முன் வந்த அன்பிற்குரிய தோழர் ராம் வசந்த் அவர்களுக்கும் எனது முதற்கண் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருடம்தோறும் எங்களுக்கு களமமைத்து தருகின்ற எழுத்து தளத்திற்கு எனது நன்றி என்றென்றும் உரியதாகும்.

போட்டிகளில் வெற்றி பெற்ற தோழமைகள்.
தங்களது இல்ல முகவரி, மற்றும் அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி. போன்றவற்றினை, அய்யா அகன், மற்றும் பொள்ளாச்சி அபி ஆகியவர்களுக்கு விடுகையின் மூலம் அனுப்பும்படி கேட்டுகொள்கின்றோம். பொங்கல் கவிதை போட்டி என்ற கணக்கிற்கும் விடுகை அனுப்பவும்.


----------நன்றிகளுடன் - நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (1-Feb-15, 12:31 pm)
பார்வை : 148

மேலே