நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம் “மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி”

உலகாள நாகரீகம் உதித்திட்ட வாசலிது
கலமேறிக் கடல்தாண்டும் கல்விசொன்ன பள்ளியிது
பலகால வரலாற்றைப் பாதுகாக்கும் பேழையிது
பலனீந்தே பலமான பாரதமென் தேசமிது !

...சகிப்போடு கருணையோடு சத்தியமும் நிலைகொள்ளும்
...சுகவாழ்வைக் கைகாட்டும் பெரியோர்கள் பூமியிது.
...சுகித்தாட சுதந்திரத்தைச் சொந்தமாக்கித் தந்து;பெரும்
...பகைமறக்க படித்துயர பாதைதரும் தேசமிது.

மண்ணூன்றி மரம்வளர்க்க மதிஞானம் அதுவுண்டு
விண்ணேறும் ஏவுகணை விஞ்ஞானம் மிகவுண்டு
கண்ணாக உயிர்மதிக்கும் கற்புநிலைக் கனிவுண்டு
அண்ணாந்து வான்தொடவே அச்சமற்ற துணிவுண்டு

...கலகநிரைக் கழகங்கள் கறையென்ற போதினிலும்
...விலக்கவொரு வழியுண்டு ‘வேற்றுமையில் ஒற்றுமையாம்’.
...நலங்கொடுக்கும் இயற்கையதை நசிப்போர்க்கு நல்லரிவாம்
...பலன்பற்றிப் பரிந்துரைக்கப் பசுமைவளம் பற்றிடுமாம்.

முத்தெடுப்போர் வழிவந்த மூதாதை வம்சமிது
எத்தனைதான் கடலாழம் என்றுகாணும் இளமையிது
வித்தைபல கற்றுவந்த வீரநிலக் கரிசலிது
சத்திருக்கும் விதையிருக்க சாதிப்ப தாபெரிது !

*மீ.மணிகண்டன்
*03-Feb-15

எழுதியவர் : மீ.மணிகண்டன் (3-Feb-15, 7:38 pm)
பார்வை : 148

மேலே