விரிசல்கள்

உறவுகள் இடையினில்
இடைவெளி பெருகிட
காரணம் எதுவென
தேடியே அலைந்திட
தேவையே இல்லையே
தன்முனைப்பு ஒன்றையே
தயக்கமும் இன்றியே
உள்ளமும் சொல்லுதே !

தன்முனைப்பு இன்றியே
தரணியில் எவருளர்
என்றதோர் உண்மையை
நோக்கிடில் விளங்குமே
தன்முனைப்பு தவறில்லை
உண்மைதான் ஆயினும்
கட்டுக்குள் வைத்திட
இக்கட்டுகள் குறையுமே !

என்னிடம் உள்ளதில்
உன்னிடம் உள்ளதில்
தன்முனைப்பு ஒன்றுதான்
பொதுவென இருப்பதால்
இருவரும் சமமேனும்
உண்மையை அறிந்திட
இடைவெளி குறுகுமே
பகைமையும் விலகுமே !

தன்முனைப்பும் தேவைதான்
இயங்குதற்கு விசையென
அளவுடன் அதுவுமே
இருந்திடல் நன்மையே
அளவது பெருகிட
அர்த்தமும் இன்றியே
விரிசல்கள் வளர்வது
பாரினில் இயற்கையே !

எழுதியவர் : கருணா (5-Feb-15, 2:00 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : virisalgal
பார்வை : 528

மேலே