என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி

மண் பயனுற வேண்டும் என்பதற்காக மழைத்துளி ஒரு காமுகன், கடவுள்,குழந்தை,விவசாயி,புத்தகப்புழு என ஐந்து பரிணாமங்களில் மாறி மாறி விழும்போது என்ன சொல்கிறது என்று நீங்களே கேளுங்களேன்.!! ;)


காமுகன்:


கலவிகொள்ளும்
மோக மேகத்தின்
உச்சம் நான்..
விதைகளுக்கு உயிரூட்டும் விந்து நான்..
பெற்றவள் தொடாததையும்
உற்று, உள் சென்று, உரசி,
உருண்டு,உலர்ந்து உடலை தழுவும்
உணர்ச்சிப் பித்தன்..நான்..
உலகம் ஒரு விலைமாது
விறைப்புள்ள விருந்தாளி நான்..
நான் காமம்கொண்டால்
மழைக்காலம்..
என் காமம் தீர்ந்தால்
அதுவே கோடைகாலம்..



கடவுள்:


பலனை கேட்காத பரம்பொருள் நான்…
வாழ்த்தினாலும் வைதாலும் பெய்வேன்..
சமதர்மம் என் சமயம்..
வராதே என்றாலும்
வா.. என்றாலும்..
வருவதென்றால்..
வந்தே தீருவேன்..
நான் விழுவதே..
எழுவதற்குத்தான்…
நானே யோகம்
ஒன்றிலே ஒன்றி உருமாறி உய்ப்பேன்…
நானே அணு
மாறுவேன்.. மறைவேன்…
இருப்பேன்..இறப்பதில்லை..
நானே மரம்.. நானே மலர்..
நானே நதி.. நானே கடல்..
நானே உடல் .. நானே உயிர்..
நானே வெள்ளம்..
நானே எல்லாம்..!! எல்லாம் நானே!!


குழந்தை:


நான் சிறு குழந்தைகளின்
சிரிப்பு வங்கி..
என் ஆலங்கட்டிகள்
வானில் தயாரான
ஜெம்ஸ் மிட்டாய்கள்…
தாய் தராத இடத்திலும்
முத்தமிடும் தவத்தாய் நான்..
பிஞ்சுக் கைகளில்
விழுந்தும் உடையும்
குட்டிக் குட்டி திரவ பலூன்கள் நான்..
காகிதக் கப்பல்களைக்
கவிழ்க்கும் இரட்டைச்சுழி
சிறுவன் நான்…
ஒரே சந்தத்தில் பாடியே
குழந்தைகளை உறங்கவைக்கும்
தெருப்பாடகன் நான்..
குழந்தைகளின் உடலில்
விழுந்து தெறிக்கையில் மட்டும்
சீனிச் சிதறல்கள் நான்..




விவசாயி:

அவன் விதை விதைப்பான்..
நான் துளி விதைப்பேன்..
நானே கொடுப்பேன்..
நானே கெடுப்பேன்..
நான் கேணி நிறைத்தால்..
அவன் கோணி நிறையும்..
வேண்டப்படுவதும் நானே..
வெறுக்கப்படுவதும் நானே..
குடிக்கத்தரும் நீரைச்
செடிக்கு விடும்
விவசாயிகளின் விசுவாசி நான்…
அவன் கணுக்கால் அளவு கேட்டால்
முட்டிவரை பெய்வேன்..
முட்டிவரை கேட்டால்
கால்நகம்வரை பெய்வேன்…
அவன் அழுக்கு வேட்டியை
அலச சிலநாளும் ..
ஆறுதலுக்காகச் சிலநாளும்
பெய்வேன்..
பெரும்பாலும் பொய்ப்பேன்..

புத்தகப்புழு:

கண்ணீர் போல்
வடிவம் கொண்டவனல்ல நான்..
கிடைமட்ட நீள் உருண்டையான
மாத்திரை வடிவமானவன்…
நொடியில்
ஒரு மில்லியன் லிட்டர்
மழைத்துளியை
உலகெங்கும் ஊற்றுவேன்..
நான் பிறக்கும்
ஒரு சிறிய கருவறை மேகம்
பத்து யானை கனம்..
என் பெரிய கருவறை
பத்தாயிரம் யானைக்குச் சமம்..
என் PH ஏழுக்குக்கீழ்
சென்றால் நானே அமில மழை..
அதி வேதிப்பொருள் கலந்தால்
நானே குருதிமழை..
அவசரமாக விழுந்தால்
நானே ஆலங்கட்டி மழை..
ஆம்.. நானே.. நானே.. நானே தான்.. எங்கும் நானே தான்..
மண்ணை மறைத்தது மாமத மழை..
மண்ணில் மறைந்தது மாமத மழை…

எழுதியவர் : இரா.சங்கர் (5-Feb-15, 7:11 pm)
சேர்த்தது : இராசங்கர்
பார்வை : 767

மேலே