சுட்டுவிரல்
சுட்டுவிரல்
பாவலர் கருமலைத்தமிழாழன்
எட்டுதற்கும் முடியாத இலக்க ணத்தின்
ஏற்றத்தைப் பிறமொழியர் வியந்து பார்த்தும்
கொட்டிவைத்த இலக்கியங்கள் வளத்தைக் கண்டு
குவலயத்தார் போற்றுகின்ற புகழி னோடும்
வெட்டுமுக விழுப்புண்ணில் கடல்க டந்து
வெளிநாடு பலவென்ற வீரத் தோடும்
சுட்டுகின்ற விரலாலே சுட்டிக் காட்டும்
சுடர்விளக்காய்த் தமிழாநீ இருந்தாய் அன்று !
மூத்தமொழி முதன்மைமொழி என்றே ஞாலம்
முன்நிறுத்தும் தமிழ்மொழியை ஒதுக்கி விட்டே
ஏத்திவட ஆங்கிலத்தை முதுகி லேற்றி
ஏற்றத்தைத் தருமென்றே கூன னாகிக்
காத்திருந்த தன்மானம் இழந்தே எங்கும்
கல்வீசித் துரத்துகின்ற நாயா யாகிப்
பூத்திருந்த பெருமைவிற்ற கீழோ னாகப்
புவிசுட்டும் இனமாகத் தாழ்ந்தாய் இன்று !
மொழிமறந்தாய் பண்பாட்டைத் துறந்தாய் தொன்மை
மொழிகின்ற இனஅடையா ளத்தை விட்டாய்
விழிவிற்றுச் சித்திரத்தை வாங்கு கின்ற
வினைமுரணாய் அனைத்தையுமே இழந்து போனாய்
வழிமாறிப் போனஉன்றன் மனத்தை மாற்று
வாய்த்ததமிழ் காத்துலகில் உயர்வ தற்கும்
பழித்தவரே சுட்டுவிரல் காட்டி உன்னைப்
பாராட்டிப் புகழ்வதற்கும் உறுதி ஏற்பாய் !
( ஐதராபாத் நிறைதமிழ் இலக்கிய வட்டம் இந்திய அளவில் சுட்டுவிரல் என்ற தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை. 4-1-15 அன்று நடந்த விழாவில் பரிசு வழங்கப்பட்டது)