தலைகுனிந்தார்
தலைகுனிந்தார்
பாவலர் கருமலைத்தமிழாழன்
பேருந்து நிலையத்தில் நின்ற போது
பேசுதற்கே பக்கத்தில் ஒருவர் வந்தே
பாருங்கள் உங்களைநான் முன்னர் எங்கோ
பார்த்திட்ட நினைவானால் தெரிய வில்லை
ஊருக்குள் எங்கேநீர் இருக்கின் றீர்கள்
உறவினர்கள் இங்காரும் இருக்கின் றாரா
கூறுங்கள் என்றவர்தாம் கேட்கக் கேட்கக்
கூர்ந்தவரைப் பார்த்தவாறு நின்றி ருந்தேன் !
என்னையவர் விடுவதாகத் தெரிய வில்லை
ஏனுங்க முகநூலில் இருக்கின் றீரா
நன்றாக என்முகத்தைப் பார்த்துக் கேட்க
நானெந்த நூலிலுமே இல்லை என்றேன்
முன்பின்னும் தலைசொரிந்து சுட்டு ரையில்
முகந்தன்னைப் பார்த்தேனோ என்று கேட்க
என்நெஞ்சுள் வந்திட்ட சிரிப்ப டக்கி
எனக்கெந்த உரைநடையும் தெரியா தென்றேன் !
முகநூலில் சுட்டுரையில் இல்லை யென்றால்
முகந்தன்னைப் பார்த்ததெங்கே என்றே தம்மின்
முகந்தன்னைக் கோணலாக்கி வாயிற் குள்ளே
முணுமுணுத்தே கண்பிதுங்க மீண்டும் கேட்டார்
முகநூலில் சுட்டுரையில் தேடித் தேடி
முன்வீட்டில் குடியிருக்கும் எனைம றந்தீர்
அகநூலில் அடுத்துள்ளோர் முகம்ப தித்தே
அடுத்தநாட்டைப் பாரென்றேன் தலைகு னிந்தார் !