வெள்ளந்தி மனிதர்கள் 7 ருக்கு எ ருக்மணி

நான் கடந்து வந்த பாதையில் என்னைச் செதுக்கிய சிற்பிகளையும் மகனாகப் பார்த்த உறவுகளையும் பற்றிப் பகிர்ந்து வரும் வெள்ளந்தி மனிதர்களில் இன்று அம்மாவைப் பற்றிப் பார்ப்போம். அம்மா பெயர் ருக்மணி, எல்லாரும் அழைப்பது ருக்கு. எனது நண்பன் முருகனின் அம்மா... எனக்குந்தான்.

அம்மா.... கிராமத்தில் பிறந்து கிராமத்தில் வாக்கப்பட்டு நகரத்தில் வாழ்பவர். படித்தவர் அல்ல ஆனால் பாசக்காரர். கல்லூரியில் படிக்கும் போது ஆரம்பத்தில் முருகனின் வீட்டில்தான் பெரும்பாலான பொழுதுகள் கழியும். பின்னர் ஐயா வீடு அதை விட்டால் முருகனின் வீடு என ஆனது. அங்கு போகும் போதெல்லாம் வாஞ்சையுடன் பேசும் வெள்ளந்தியான மனுசி. எப்பவும்... இப்பவும் 'குமார் குட்டி.... நல்லாயிருக்கியாம்மா...' என்று முகத்தில் கையால் வழித்து முத்திடமிடுவார். அந்த பாசத்துக்கு நிகர் ஏதும் இல்லை.

முருகன் எப்பவும் எங்காவது பறந்து கொண்டே இருப்பவன்.... இப்பவும் அப்படித்தான் இருக்கிறான். இந்தா வருகிறேன் என்று சொன்னால் போக வேண்டிய இடத்துக்கு நாம் போய் திரும்பினாலும் அவன் வரமாட்டான். இதனாலே ஐயாவுக்கு முருகன் மீது கோபம் வரும். அப்படித்தான் வீட்டுக்கு வாடா என்று சொல்லி விட்டு நான் போவதற்குள் சைக்கிளை எடுத்துக் கொண்டு எங்காவது கிளம்பிவிடுவான். அவசர அவசரமாக வீட்டுக்குப் போனால் அம்மாதான் இருப்பார். 'என்னம்மா... தம்பி வரச்சொன்னுச்சா? இப்பத்தாம்மா அந்த டீச்சரு வீட்டு வரைக்கும் பொயிட்டு வாறேன்னு சொன்னுச்சு... டிவி பாத்துக்கிட்டு இருங்கடி... இப்ப வந்துரும்...' என்று சொல்லி இருக்க வைப்பார். காத்துக் கொண்டிருக்கும் நேரம் கடந்தாலும் அவன் வரமாட்டான் என்பது வேறு விஷயம். 'அம்மா... அவனைக் காணோம்... நான் கிளம்புறேன்... வந்தாச் சொல்லுங்கன்னு' கிளம்பும் போதும், 'சொல்லிட்டுத்தாம்மா போச்சு... இரு... இப்ப வந்துரும்' என்பார்.

நாங்கள் இருவரும் எதாவது பேசிக் கொண்டிருக்கும் போது, 'அம்மா காபி போட்டுக் கொடுங்கம்மா... குமார் வந்திருக்கானுல்ல...' என்றதும் வேகவேகமாக காபி போட்டுக் கொண்டு வருவார்., 'இதென்ன காபியா... ஏம்மா புகை வாசம் வீசுது... இதை எப்படி அவன் குடிப்பான்... வேண்டாம்...' என்று கத்துவான். உடனே 'விடுடா...' என்றால் 'எப்பவும் இப்படித்தாம்மா... எல்லாத்துக்கும் கோபப்படுறான்... காபி நல்லாயில்லையாம்மா' என்று கேட்பார். 'நல்லா இருக்கும்மா' என்று சொன்னதும் 'எம்புள்ளையே சொல்லிருச்சு... அப்புறம் என்ன...' என்று முருகனைத் திட்டிவிட்டுச் செல்வார்.

வீட்டுக்குப் போனால் சாப்பிட வேண்டும், காபி குடிக்க வேண்டும் என்பதை விரும்புவார். எதாவது சாப்பிடாமல் கிளம்பினால் 'என்ன குமார்க்குட்டி... வந்துட்டு ஒண்ணும் சாப்பிடாமப் போறியேன்னு சொல்லுவார். எல்லா விவரங்களையும் கேட்டுக் கொள்வார். இருவரும் எப்படிப் படிக்கிறோம் என்பதை மட்டும் கேட்கவே மாட்டார். எங்கள் இருவரின் மீதும் அவ்வளவு நம்பிக்கை. படிப்பு விஷயத்தில் எனது பெற்றோரும் என்ன படிக்கிறேன்... எப்படிப் படிக்கிறேன்... என்று கேட்டதில்லை என்பதே சந்தோஷம் என்றாலும் அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது அல்லவா? வீட்டில் புத்தகத்தை எடுத்துப் படிடா... என அம்மா ஒருநாள் ஒரு பொழுது சொன்னதில்லை... ரேடியோ கேட்டுக் கொண்டோ, பாட்டுக் கேட்டுக் கொண்டே படித்தால்தான் நமக்கு ஏறும் என்பதால் அப்படிச் செய்தாலும் அவன் படிச்சிருவான்னு இப்ப எதுக்கு பாட்டுன்னு திட்டமாட்டார்கள். அதேபோல்தான் முருகனின் அம்மாவும்...

முருகனின் அப்பா பங்குனி உத்திரத்துக்கு குன்றக்குடியில் வேல் போட்டு பால்குடம் எடுப்பார்கள். அதற்கு நான் வரவேண்டும் என்று நிற்பார். அதேபோல் அவருக்கு சாமி வந்ததும் எல்லாம் விழுந்து விழுந்து கேள்வி கேட்டு தங்கள் நிலையைத் தெரிந்து கொள்வார்கள். பெரும்பாலும் நான் இதில் இருந்து விலகியே நிற்பேன். அம்மாவும் எதுவும் சொல்லமாட்டார்கள். மலையைச் சுற்றி வந்து படியேறப் போகும் போது என்னை அவருக்கு முன்னே இழுத்து விட்டு 'தம்பிக்கு சொல்லிட்டுப் போங்கன்னு' சொல்லி அவர் வாயால் நல்ல வார்த்தை சொல்லவைத்து திருநீறு பூசச் செய்வார்.

இதேபோல்தான் அருணகிரிப்பட்டினம் மாரியம்மனுக்கு முருகன் வேல் போட்டு பால்குடம் எடுக்கும் போது நான் அருகில் இருக்க வேண்டும் என்று நினைப்பான். என்னைப் பொறுத்தவரை சாமி கும்பிடுவது, பால்குடம் எடுப்பதெல்லாம் எனக்கும் விருப்பமே.. ஆனால் சாமி வேல் போடச் சொன்னுச்சாடா என அவனுடன் சண்டையெல்லாம் போட்டிருக்கிறேன். இருந்தாலும் அவனின் விருப்பத்திற்கான அவனுடன் நடந்தே வருவேன். வேல் போடும் போது மட்டும் அந்த இடத்தில் இருக்கவே மாட்டேன். அங்கிருந்து கிளம்பும் போது அவனுடன் இணைந்து கொள்வேன். அங்கு எல்லோருக்கும் திருநீறு போடுபவன் என்னை மட்டும் எல்லைக்கு வாப்பா என்று சொல்லிவிடுவான். கோவிலுக்கு அருகே போனதும் 'குமார்குட்டி நீ தம்பிக்கிட்ட துணூறு வாங்கிக்க...' என்று முன்னே இழுத்து விடுவார்.

அப்பொதெல்லாம் ஒரு நாள் வீட்டுப் பக்கம் போகவில்லை என்றாலும் 'ஏம்ப்பா நேற்று வரவில்லை... தம்பி ஏதாச்சும் சொன்னானா?" என்று கேட்பார். திருமணத்திற்குப் பிறகு வீட்டிற்குச் செல்வது குறைய ஆரம்பித்தாலும் என் மீதான பாசம் குறையவில்லை. இடையில் சில காலங்கள் எனக்கும் முருகனுக்கும் ஏற்பட்ட சின்ன மனஸ்தாபம் தெருவில் சந்திக்கும் போது 'எப்படியிருக்கே?' என்பதோடு நின்று போக சுத்தமாக வீட்டுப்ப்பக்கம் போகவில்லை. அப்போதெல்லாம் 'இந்தக் குமாரு நம்மளை எல்லாம் மறந்துருச்சு... இங்கிட்டு வருதேயில்லை...' என்று சொல்லியிருக்கிறார். எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை இப்போது தீர்ந்து மீண்டும் பழைய அன்போடு நாங்கள் இன்னும் இறுக்கமாக பயணிக்க ஆரம்பித்து விட்டாலும் எங்களுக்குள் எரிந்து அணைந்த அந்தப் பிரச்சினை இதுவரை அவருக்குத் தெரியாது. தெரியவும் வேண்டாம்.

இப்பவும் என் மனைவி முருகன் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் குமார் எப்படியிருக்கு? நல்லாயிருக்கா? என்று கேட்பாராம். அந்தப் பாசத்துக்கு இணையான பாசத்தை இன்னும் சில அம்மாக்களிடமும் பெற்றிருக்கிறேன். நகரத்துக்குள் வசித்தாலும் ஆடு, மாடு, கோழி, வீட்டுக்கு கொஞ்ச தூரத்தில் இருக்கும் தோட்டத்தில் விவசாயம் என கிராமத்து மனுசியாக வாழும் அம்மா நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

வெள்ளந்தி மனிதர்கள் தொடர்வார்கள்...

-பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (6-Feb-15, 4:04 pm)
பார்வை : 169

மேலே