மணநாள் ஏன் வந்ததோ------அஹமது அலி----

உள்ளுக்குள்
அழுகைச் சத்தம்
சில நாட்களாகவே இவளுக்குள்....
;;;;;
விழியோடு சேராத கண்ணீரை
உள்ளத்தில்
சேமிக்கத் தொடங்கியிருக்கிறாள்
நிச்சயதார்த்தம் நிகழ்ந்ததிலிருந்து............
;;;;;
தனியாக பேசிக் கொண்டிருக்கிறாள்
இவளுக்கு மட்டும்
கேட்கும் படியாக
தாய் வீட்டின்
ஒவ்வொரு பொருளோடும்
கடைசி நேர உரிமையோடு......
;;;;;
தாய்வீடே நிலைகொள்ள
வரம் கேட்டுக் கேட்டு
திரும்பப் பெறுகிறாள்
நிலைக் கண்ணாடியின் முன்
நீள்தவம் புரிந்து
யாரும் காணா பொழுதுகள்
தொழுது.....அழுது...
;;;;;
தலையணை புதைந்து
குடி பெயர்தலின்
குமுறல்களை
விசும்பல்களினூடே
குறியீடு செய்தவளாய்......
;;;;;
மின் குமிழொன்று
குறிப்பெடுத்துக் கொண்டது
குறையொளி உமிழ்ந்து
அறையின் கும்மிருட்டை
துடைத்துக் கொண்டே......
;;;;
வண்ணக் கனவுகளுடன்
கருப்பும் வெள்ளையும்
காட்சிக்கு வந்து போனது
விழித்தும் விழிக்காத நிலையில்.....
;;;;;
நினைவுகளால்
வீட்டைச் சுற்றியே
வலம் வருகிறாள்
ஓரிடத்தில் அமர்ந்து கொண்டே..
;;;;;
பூனைக்குட்டிக்கு
முத்தங்கள் கிடைக்கிறது
முன்னெப்போதும்
இல்லாத எண்ணிக்கையில்....
;;;;;
அண்ணனின் குழந்தை
ஆகிப் போனது
இடுப்பை விட்டும் இறங்காத
இனிய சுமையாக....
;;;;;
வெட்கம் தின்ற
உணர்வுகள் போக
மீதி வெந்து கொண்டிருந்தது
தோழிகளின்
கேலிப் பேச்சுக்களுக்கிடையே....
;;;;;;
அந்நியமாக
அடிமனது உணர்த்தியது
பிறந்த வீட்டையும்,
பிறந்த வீட்டு உறவுகளையும்.....

எழுதியவர் : அஹமது அலி (7-Feb-15, 11:03 am)
பார்வை : 165

மேலே