உறவுகளில் செம்பருத்தி

“உறவுகளில் செம்பருத்தி”

புல்லிவட்ட பெண்ணொருத்தி
பூத்தாளென் செம்பருத்தி
உலகத்தோடு வொட்டொழுகி
உடைமாற்றி நிற்கின்றாள்..!

சிவந்தவண்ண சிந்தனையால்
சிரித்தபடி சொல்கின்றாள்
சிவப்புவெள்ளை மேனியிலே
சிருங்காரம் சுமந்தவளாய்...!

கலப்புவண்ண திருமணத்தில்
கலந்தவரின் உறவுகளால்
அள்ளித்தந்த அறிவைசுமந்து
அழகுயென பிறந்துவிட்டாள்..!

பார்க்குமொரு தருணமெலாம்
பள்ளிக்கூட நினைவலைகள்
கரும்பலகை தூய்மையுற
கசக்கியெடுத்த இவளுயிரு..!

ஆரோக்கிய மருத்துவத்தில்
ஆணிவேராய் செம்பருத்தி
இதயமதின் அழுத்தமெல்லாம்
இதமாக்கும் இதழ்ச்சாறு..!

இருமனதின் ஊடலுக்குபின்
ஈருடலும் உறவுகொள்ளும்
ஆண்மைக்கு மருந்தென்னும்
ஆகாரம் இவளன்றோ ..!

இளிச்சவாயன் என்றாலும்
இவள்காதல் தோற்காமல்
வீரமவனில் புகுத்திவிட
வீழ்ந்திடுவாள் காலடியில்..!

தாம்பத்யம் குறையென்று
தள்ளிபோகும் உறவுகளை
தனையுண்ண உயிர்தரிக்கும்
தாரகமும் இவளன்றோ ...!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜே (7-Feb-15, 10:59 am)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 499

மேலே