நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி 2015

பச்சைப் பட்டுடுத்தி பாரதனை காப்பவளே- உன்
மஞ்சள் மேனிமீது மானிடர் செய்யும்
மடதனத்தை மன்னித்தருள்வாயோ?
கண்ணில் படும் அத்தனையும் கற்புடனே ஈன்றவள்-நீ
கோடிகோடி துளையாய் உன்னுடலை குடைந்த மானிடரை மன்னித்தருள்வாயோ?
ஆடியாடி வந்த உன்னை அணைகட்டி அடக்கிவிட்டோம்
ஆங்காரம் கொண்டு நீ அழித்து விடமாட்டாயோ?
ஆடி பாடி ஓடி வந்த உன்னை உள்ளாடை வரை உரித்துவிட்ட
மானங்கெட்ட மானிடரை மன்னித்தருள்வாயோ?
பாடி பரவசமாய் பரப்பி விட்ட உன்-கூந்தலை
மாடமாளிகைக்குள் மடக்கி விட்ட
மானிடரை மன்னித்தருள்வாயோ?
உன்னில் பிறந்த உயிர்களுக்கெல்லாம்-நீ
ஊதிவிட்ட மூச்சுக் காற்றை ஓடும் இயந்திரத்தால் ஓட்டை செய்த
மானிடரை மன்னித்தருள்வாயோ.?
காடுமலை கடல் வானம் என-உன்
கட்டழகு மேனிமிது கறையாத குப்(பை)யை துப்பிவிட்ட
மானிடரை மன்னித்தருள்வாயோ.?
கோடிமுறை கும்பிட்டாலும் கோலமகளுனக்கு மானிடர் செய்த பாவம் மாலாது என்றெண்ணி
வாடி நின்று வரம் கேட்கிறேன்-இந்த
மதிகெட்ட மானிடரை மன்னித்தருள்வாயாக.....

எழுதியவர் : ஆருபுருசாே்த்தமன். (7-Feb-15, 1:27 pm)
சேர்த்தது : ஆ புருசோத்தமன்
பார்வை : 60

மேலே