நெஞ்சம் பொறுக்குதில்லையே
ஏய்த்துமே பிழைக்கும் கூட்டம்
எங்ஙனும் பெருகிப் போச்சு !
வாய்ப்பினைத் தவற விட்டு
வருந்தியே நிற்க லாச்சு !
தூய்மையும் நெஞ்சில் இல்லை !
தொழிலிலும் நேர்மை இல்லை !
வாய்மையும் மறைந்த தாலே
வளமையும் அற்ற தாமோ !
அடுத்தவர் நலனை என்றும்
அணுவினும் நினைத்துப் பாரார் !
கொடுப்பவர் தம்மைக் கூடக்
குறைத்துமே பேசு வார்கள்
கெடுப்பதே வழக்க மாகிக்
கீழான செயல்கள் செய்யும்
கொடுமையர் இருப்ப தாலே
குற்றமும் பெருத்த தாமோ !
இன்முகம் காட்ட மாட்டார் !
இனிமையாய்ப் பேச மாட்டார் !
இன்னலைச் செய்வ தொன்றே
இன்பமாய்க் கருதி வாழ்வார் !
பெண்மையை இழிவு செய்வார் !
பித்தளை போலி ளிப்பார் !
நெஞ்சமோ பொறுக்கு தில்லை
நிலைதனைக் கண்டு தானே!