ஆதலினால் காதல் செய்வீர் -மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி
![](https://eluthu.com/images/loading.gif)
மனிதனுக்கும் மனிதனுக்குமான காதலோடு
மனிதனுக்கும் இயற்கைக்குமான ஒரு காதலை
மனிதனுக்கும் மண்ணிற்குமான ஒரு காதலை
மனிதனுக்கும் விலங்களுக்குமான ஒரு காதலை
துரிதகதியில் புரிதலோடு காதலிப்போம் வாருங்கள்..!
மழைசிசுக்களின்றி மலட்டுத்தன்மையாகும் மேகமங்கையினை
மரம் செடிகொடியெனும் மருத்துவம் விதைத்து காதலிப்போம்.
தாபங்கொண்டு பொசுங்கி சுருங்கும் ஐநிலப்பெண்டிரை
நெகிழி கழிவுகளெனும் குரோதம் தவிர்த்து காதலிப்போம்.
வெப்பச்சூட்டில் வறண்டுத்தவிக்கும் விலங்கின ஜீவன்களை
அவசர அக்கறையெனும் காக்கும் கரங்கொடுத்து காதலிப்போம்.
கதிர்வீச்சில் கருவறுத்து துடிதுடிக்கும் பறவையின செல்லங்களை
மாற்று விஞ்ஞானமெனும் முத்தம் கொடுத்து காதலிப்போம்.
புரிதலில் எழும், புரட்சியும் மறுமலர்ச்சியும் காதல்தான்.
எழுதுங்கள் எழுத்தாளர்களே...! காதல் என்பதின் புனிதம்,
இம்மண்ணின் கர்ப்பபையில் பூக்கும் மகத்துவம் என்று.
மானிடம் செழிக்க வேண்டுமெனில், தோழர்களே..!
ஜாதி,இனம்,மதம்,நிறம் மறந்து காதலியுங்கள் !
காதலித்து மலரவைப்போம் புதியதோர் உலகை..!
மலரவைத்து செழிக்கவிடுவோம் இந்தப்புனித பூமியை..!
--------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.