===+++சில்லென்று ஒரு அதிகாலை+++===

வணக்கம்...! இது கதையா, கட்டுரையா என்று எனக்கேத் தெரியவில்லை, இதை வாசிப்பதற்கு தங்கள் நேரத்தை செலவிட துணிந்தவர்களுக்கு என் முதற்கண் நன்றிகள்.
========
அதிகாலை நேரம், சூரியனை காணவில்லை, எங்கு பார்த்தாலும் ஒரே பனிமூட்டம், 10 மீட்டர்க்கு அந்தபக்கம் என்ன இருக்கிறதென்றே கண்ணுக்கு புலப்படவில்லை. எங்கு பார்த்தாலும் வெண்புகை மண்டலமாய் காட்சியளித்தது. வாகனவாசிகள் விளக்குகளை ஒளிரவிட்டவாறே சாலைகளில் ஊர்ந்துகொண்டு இருந்தார்கள்.
மெட்ரோ ரயிலை பிடிப்பதற்கு நானும் எனது நண்பனும் நடுங்கும் குளிரில் வேகமாக சென்றுகொண்டு இருந்தோம். குளிர் தாக்காமல் இருப்பதற்கு அவன் சொட்டர் போட்டு இருந்தான். நான் சொட்டர் போடவில்லை. உள்ளே பனியனும், அரைக்கை சட்டையும் போட்டு டக்இன் செய்து இருந்தேன், ஆகையினால் குளிர் என்னை அதிகமாகவே தாக்கியது. ஐசை குடித்துவிட்டு வந்த அமைதியான காற்று கையிலுள்ள மயிர்க்கண்களை துளைத்து உடலை நடுங்கச் செய்தது.
எனது உடல் நடுக்கத்தை கண்டதும், மச்சான் ஒரு தம் போடுறியா என்றான் எனது நண்பன்.
வேண்டாம் மச்சான், அத மறந்து ஏழு வருசம் ஆச்சி.
பரவால்லடா குளிருகாகத்தானே ஒன்னே ஒன்னு அடி, என்று ஒரு சிகரட்டை என்பக்கம் நீட்டினான்.
ஹேய்... வேண்டானு சொல்றேன் இல்ல, விடு மச்சான், என்று அவனை முறைத்தேன்.
சரிடா நானே அடிச்சிகிறேன் என்று, சிகரட்டை வாயில் வைத்து லைட்டரால் அதன் மூஞ்சை பொசுக்கினான்.
மச்சான் ஏழு வருசத்துக்கு முன்ன சிகரட் அடிச்சி இருக்கியா ?
ம்ம்... நிறைய அடிச்சி இருக்கேன் மச்சான் சினிமாவுல வேலை செய்யும்போது.
அது சரி,,, இப்பவும் ஒன்னும் கேடு இல்ல மச்சான் எப்பவாச்சும் ஒரு தடவ அடிக்கலாம் தப்பில்ல.
ஒன் உபதேசத்துக்கு ரொம்ப நன்றிடா, ஆனா அதுக்கு என் மனசு விரும்பனும்.
இப்படியே பேசிக்கொண்டு நடந்த பத்தாவது நிமிடம் கழிந்தபோது, நாங்கள் டனுப் மெட்ரோ ஸ்டேசன் வாயிலை அடைந்தோம். சட்டைப்பையில் இருந்த மெட்ரோ கார்டை எடுத்து மின்னணு இயந்திரத்தில் உரசி பஞ்ச்சிங் செய்துவிட்டு உள்ளே நுழைந்து, மின்சார படிக்கட்டில் ஏறி நிற்க அது பால்கனியில் கொண்டு போய் எங்களை சேர்த்தது.
நாங்கள் நின்றுகொண்டு இருந்த மூன்றாவது நிமிடம், வெள்ளையும், ஊதாவும், கருப்பும் கலந்த வண்ணத்தில் மெட்ரோ ரயில் வந்து நிற்க, நாங்கள் ஏறிகொண்ட ஐந்தாவது நிமிடத்தில் ரயில் புறப்பட்டது.
நம்ம மனுசங்க எவ்ளோ தெரமசாலியா இருக்கானுவு பாரு மச்சான், ஆளே இல்லாம ரயில் போகுது, ஸ்டேசன் வந்தா அதாவே நிக்கிது, தானேவே கதவு தெறக்குது, தானாவே கதவு மூடுது, அதுவா கெளம்பி போகுது. விஞ்ஞானம் எந்த அளவுக்கு வளந்துடுசி பாருடா என்றான் எனது நண்பன்.
ஆமாம் மச்சான், விஞ்ஞானம் ரொம்ப வளர்ந்துடுசி, அதுகூடவே ஆபத்தும் பல மடங்கு அதிகமாவே வளர்ந்துடுச்சி.
என்ன மச்சான் சொல்ற ஆபத்து அதிகமா வளந்துடுச்சா?
ஆமாண்டா, இந்த மாதிரி இயந்திரங்களை கண்டு புடிச்சி பயன்படுத்தியதால், இப்போ இயந்திரம் இல்லாம நாம வாழவே முடியாது என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திடுச்சி இந்த விஞ்ஞானம்.
அதோடில்ல, இயந்திர பயன்பாட்டால் இந்த பூமி மிகுந்த வெப்பமாகி போச்சி, அதனால காடுகளும் உயிரினங்களும் பெரும்வாரியாக அழிந்துபோய்விட்டன, மழையின் அளவு குறைந்துபோய்விட்டது, பூமியின் நீர்மட்டும் குறைந்து நன்னீரின் அளவும் ரொம்ப குறைந்துபோய்விட்டது, விஞ்ஞானம் இல்லாமல்கூட வாழ்ந்துவிடலாம் தண்ணீர் இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா என்று நீயே யோசித்துப் பாரேன்.
நீ சொல்றது புரியுது மச்சான், சோறு சாப்டாமகூட ரெண்டு நாள் இருக்கலாம் ஆனா தண்ணி குடிக்காம ஒருநாள்கூட இருக்க முடியாதுடா.
ஆமாம் மச்சான், பூமி ஒரு மித வெப்பமான நிலையில் இருந்தால்தான் இங்கே உயிரினங்கள் வாழ முடியும், மிதமிஞ்சிய குளிரோ, மிதமிஞ்சிய வெப்பமோ இருந்தா அங்கே உயிரினங்கள் வாழ முடியாது. நமது பூமியைப்போல பல கோள்கள் இருக்கின்றன, ஆனால் அங்கே எல்லாம் உயிரினங்கள் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. நமது பூமி மட்டும்தான் உயிரினங்கள் வசிக்கின்ற அளவிற்கு தட்பவெட்பநிலை பெற்று இருக்கிறது, அதனால்தான் இங்கே உயிரினங்களும் மனிதர்களும் வாழ முடிகிறது.
அப்படினா இந்த பூமி சூடு அதிகம் ஆக ஆக இந்த உலகம் அழிஞ்சிடும்னு சொல்ல வரியா மச்சான்.
ஆமாண்டா, அழிஞ்சிடும்மில்ல, இப்பவும் அழிஞ்சிகிட்டேதான் இருக்கிறது. அழிவுத்தொடங்கி ரொம்பநாள் ஆகிடுச்சி மச்சான்.
அப்போ நாம அழிஞ்சிகிட்டு இருக்கோம்னு சொல்லு.
அதிலென்ன சந்தேகம்? இதெற்கெல்லாம் காரணம் விஞ்ஞானம்தான்.
என்ன மச்சான் ஒரேடியா விஞானத்துமேல பழியைப் போட்டுட்ட?
வேற எது மேல போட சொல்ற?. மனிதன் தனக்குத்தானே ஆப்பு வசிகிட்டான் மச்சான். இயற்கையோட ஒன்றி அது இழுக்கின்ற இழுப்பிற்கு தலையசைத்து வாழ்ந்து இருந்தா இப்படி ஒரு நிலை வந்திருக்காதுடா. பூமியோட ஆயுள் கூடி பிற்கால தலைமுறைக்கு ஏதுவாகி இருந்திருக்கும்.
இதுக்கு இப்போ என்ன பண்றது மச்சான்?
இயந்திர உபயோகங்களையும், இயந்திர கண்டுபிடிப்புகளையும், அணுக்கதிர் உபயோகங்களையும், ரசாயன உற்பதிக்களையும் நிறுத்திவிட்டு, இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து இயற்கையின் தன்மையை உயர்த்தி இயற்கையை வளப்படுத்துவதற்கு உலக விஞ்ஞானம் உடனே முனைய வேண்டும்.
இது நடக்குற காரியமாடா?
கண்டிப்பா நடக்காது மச்சான். ஏசி இல்லனா இங்கே பல பேர் செத்தே போடுவானுங்க, மின்சாரம் இல்லனா எவனும் ஒருநாள் வாழமாட்டான். ஆனா உலக சமுதாயம் விழித்தெழுந்தால் எதுவும் சாத்தியம்தான், அதற்காகத்தான் பல தனிப்பட்ட மனிதர்களும், தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து குரல்கொடுத்துக்கொண்டு இருக்கின்றன.
எனர்ஜி நிறுத்தத்தையும், இபன் பட்டட்டோ நிறுத்தத்தையும் கடந்து, ரயில் சென்றுகொண்டு இருந்தது.
மச்சான் அங்க பாரு மச்சான், செம பிகருடா,,,. இவளுங்க எல்லாம் என்னாதான் சாப்டுவாளுங்க இவ்ளோ அழகா இருக்காளுங்க.
ஹேய்... ஏண்டா தேவ இல்லாம?. நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சி.
மச்சான் நீயே பாரு மச்சான். இப்படிப்பட்ட பிகர வாழ்க்கையில பாக்கவே முடியாடா.
வேண்டாம் மச்சான், அப்படியெல்லாம் செய்யகூடாது.
டேய்... பாக்குறதெல்லாம் ஒரு தப்பும் இல்ல மச்சான், சும்மா பாருடா என்று எனது தாவாமீது விரல் வைத்து தலையை அந்த பக்கம் திருப்பிவிட்டான். அவன் சொன்னது உண்மைதான். காரிருளை எடுத்து போர்த்தி கொண்டு முகத்தை மட்டும் காட்டுன்கின்ற பௌர்ணமி நிலவைப்போல், அவளது வட்டமுகம் அழகாய் தெரிந்தது. கருப்பு நிற பர்தா போட்டு உடல் முழுவதையும் மறைத்துவிட்டு, முகத்தை மட்டும் மூடாமல் திறந்து வைத்திருந்தாள். அந்த முகத்தில் ஒளிபொருந்திய குளிர்ச்சி பிரசவமகிகொண்டு இருந்தன. மச்சான் உனக்குள்ளவும்கூட ஒரு பயங்கரமான கலாரசிகன் இருக்கிறானாடா என்றேன், அவனுக்கு ஒரே சந்தோசமாகிவிட்டது.
ஹேய் மச்சான், உனக்கு பிடிச்சி இருக்கா செம பிகருடா இல்ல?
ம்ம்... பிடிச்சி இருக்கு மச்சான், அந்த பிகர இல்லை, அதுக்கு பக்கத்துல துருதுருனு மேயுற ரெண்டு கண்ணு வச்சிக்கிட்டு, எல்லோரையும் பார்த்து கள்ளமில்லா சிரிச்சி கையசைக்கிறதே அந்த குழந்தையை ரொம்ப பிடிச்சிருக்கு என்றேன்.
நெனச்சேன் மச்சான் நீ எதாச்சும் வில்லங்கமாத்தான் பேசுவனு, என்றவாறே தனது மூஞ்சை தொங்கப்போட்டுக் கொண்டான் எனது நண்பன்.
த நெக்ஸ்ட் ஸ்டேசன் ஈஸ் ஜுமேரியா லேக் டவர்ஸ், என்று ஒலிப்பெருக்கி முழங்க தண்டவாளத்தில் உருண்டுகொண்டு இருந்த இரும்புச் சக்கரம் சன்னமாகச் சென்று தனது சுழற்சியை நிறுத்தியது. இறங்குகிறவர்கள் இறங்கிக்கொள்ள, ஏறுகிறவர்களும் ஏறிக்கொள்ள ஐந்தாவது நிமிடத்தில் மீண்டும் நகரத்தொடங்கியது மெட்ரோ ரயில்.
சற்று நேரம் இருவரும் அமைதியாக சென்றுகொண்டு இருந்தோம், ரயிலில் பயனித்துகொண்டு இருந்தவர்களை, அவனது கண்கள் மேய்ந்துகொண்டு இருந்தன. வெள்ளைக்காரர்கள், அரேபியர்கள், இந்தியர்கள், பங்களாதேசர்கள் , பாகிஸ்தானியர்கள், ஆப்பரிக்கர்கள், சைனர்கள், என பல நாட்டவர்களையும் தனது வயிற்ருக்குள் விழுங்கிகொண்டு, ஒரு உலகமகா சமத்துவ வாகனமாக அந்த ரயில் பாம்பு நகர்ந்துகொண்டு இருந்தது.
டமாக் நிறுத்தத்தை தாண்டி, நகீர் நிறுத்தத்தையும் தாண்டி, துபாய் இன்டர்நெட் சிட்டி நிறுத்தத்தை கடந்துகொண்டு இருந்தது ரயில் பாம்பு. என்ன மச்சான் அமைதியாயிட்ட என்று அவன் கவனத்தை என் பக்கம் திருப்பினேன்.
ஒண்ணுமில்ல மச்சான் என்றான்.
எதாச்சும் பேசுடா என்றேன்.
எனக்கென்ன தெரியும், நீ சொல்லு நான் கேட்குறேன் என்றான் அவன்.
என்னடா இப்படி சொல்லிட்ட, எப்பவும் பட படன்னு எதாச்சும் உளறிகிட்டே இருப்ப, இப்போ பேசமாட்டேங்குற.
ஆமாம் மச்சான், நான் பேசுறதெல்லாம் உண்மையிலேயே ஒளரல்தான்டா. ஒன்ன மாதிரி படிச்சிருந்தா கருத்துள்ள விடயமா பேசலாம், என்னயத்தான் எங்க அப்பன்அஞ்சாவதோட நிறுத்தி பண்ணையார் வீட்டுக்கு மாடு மேய்க்க அனுப்பிட்டானே என்றான் வேதனையோடு.
என்னா மச்சான் இதுக்குபோய் கவலைப்படுற, காமராசர், எம்ஜியார் எல்லாம் படிச்சிபுட்டா முதலமைச்சர் ஆனாங்க. ஒழுக்கமும் பகுத்தறிவும் இருந்தா போதும்டா. சரி சரி, நானே பேசுறேன் உனக்கு எதபத்தி பேசணுமோ அதபத்தி எதாச்சும் கேளு என்றேன்.
சரி மச்சான். இந்த இறையாண்மை இறையான்மைன்னு சொல்றாங்களே அப்படினா என்னா மச்சான்? இந்தியாவோட இறையாண்மை என்னான்னு சொல்லுடா.
அடப்பாவிப் பயலே, கேட்டதும் கேட்ட இப்படி சரியான கேள்வியா கேட்டுபுட்டியே...
ஏன் மச்சான் அப்படி சொல்ற, தப்பா எதுவும் கேட்டுடேனா?.
இல்ல மச்சான், நீ சரியாதான் கேட்டா, ஆனா இந்த இறையாண்மையை பத்தி எனக்கும் ஒரு மண்ணும் தெரியாது.
என்னா மச்சான் சொல்ற நீ....?
ஆமாம் மச்சான், மெய்யாவே எனக்கு தெரியாதுடா. எல்லோரும் இறையாண்மை இறையாண்மைனு வாய்கிழிய பேசுறானுங்க. ஆனா இறையாண்மைனா என்னான்னு எவனும் இதுவரை தெளிவா சொல்லவே இல்ல மச்சான். இறையாண்மைனா ஒழுக்கமுள்ள தூய சிந்தனையாகவும், ஈகையும் இரக்கமும் நிறைந்த செயலாகவும், கருணையும் அன்பும் கலந்த உணர்வாகவும்தான் இருக்க முடியுமென்று நான் கருதுகிறேன்.
நீ சொல்றது சரியாத்தான் இருக்கும் மச்சான். ஆனா இலங்கையில ரெண்டு லட்சம்பேரை கொன்னானுவுளே அது என்னா இறையாண்மையாம்?.
சத்தியமா அது இறையாண்மையே இல்ல மச்சான், இறையாண்மைக்கு எதிரான செயல்.
ஒரு ஒரு நாட்டுக்கும் ஒரு இறையாண்மை இருக்குமா மச்சான்?
கண்டிப்பா இருக்கும் மச்சான். ஒரு ஒரு இனத்துக்குமேகூட ஒரு இறையாண்மை இருக்குமென்றுதான் நான் நினைக்கிறேன்.
அப்படினா தமிழனுக்கு என்று ஒரு இறையாண்மை இருக்குமாடா?
ம்ம் .. இருக்கும் மச்சான்.
அது உனக்கு தெரியுமா...? தெரிஞ்சா சொல்லேன்.
தெரியாது மச்சான், ஆனா எனக்கு தெரிஞ்சத குத்துமதிப்பா சொல்றேன் கேளு...
சரிடா சொல்லு.
பொதுவா இறையாண்மைனு சொன்னா, அங்கே உண்மை, நேர்மை, அன்பு, கருணை, அடக்கம், நற்சிந்தனை, பகுத்தறிவு, ஒழுக்கம், எல்லா உயிரினங்களையும் நேசித்தல். மானுட நெறிமுறைகளில் வழுவாத தன்மை, இப்படி பன்முக உன்னதங்களையும் உள்ளடக்கிய ஒரு தூய்மைத் தன்மையினையே இறையாண்மையாக நான் பார்கிறேன். அந்த வகையில் தமிழனின் உன்னதங்கள் சொல்லச் சொல்லத் தீராதவைகளாகும், ஆனாலும் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.
ம்ம் ...சொல்லுடா.
மரம், செடி, கொடிகளை தமிழன் தன் உயிர்போல் நேசித்தான் என்பதற்கு, பாரிவள்ளல் ஒரு பெரும் எடுத்துக்காட்டு மச்சான்.
அப்படியா?
ம்ம் ஆமாண்டா. புலவர் கபிலரின் நெருங்கிய நண்பரான பாரி, முன்னூறு கிராமங்களை உள்ளடக்கிய நாடான பரம்புநாட்டை ஆண்டு வந்தான். செழித்த காட்டிலே பசுமை கொழித்து நின்ற பறம்பு மலையை சுற்றிப்பார்ப்பதற்காக ஒருநாள் சென்றான். தேரில் அமர்ந்தவாறே மரம் செடி கொடிகளையும் அருவிகளையும், நறுமணத்தை சுமந்து வந்த மூலிகை தென்றலையும் ரசித்துகொண்டே சென்றான்.
அப்பொழுது அந்த காட்டிலே ஒரு சிறு முல்லைக்கொடி தனியாக வளர்ந்து இருந்தது. அது பற்றி படந்துகொள்ள எந்த ஒரு பிடிமானமும் அங்கே இல்லாமல் இருப்பதை பாரி கண்டான். அது காற்றில் தள்ளாடிக்கொண்டு இருந்தது, எப்பொழுது ஒடிந்து விழுமோ என்று அச்சம் அந்த கொடிக்கு இருந்திருக்க வேண்டும். அந்த கொடியின் நிலையை பாரி உணர்ந்தான். வருகிறோர்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கும் வள்ளலே எனக்கு என்ன செய்ய போகிறாய் என்று அந்த கொடி அவனை பார்த்து கேட்பதாகவே அவனுக்குத் தோன்றியது. உடனே அந்த கொடியின் அருகில் தேரினை நிறுத்தி, அந்த கொடியை தேரின் மீது படரவிட்டான்.
ஒரு சிறு முல்லைக்கொடிக்காக ஒரு தேரை தருவானா எந்த முட்டாளாவது, என்று யாருக்காவது கேட்கத்தோன்றலாம், ஆனால் அதையும் தாண்டி அதிலிருக்கும் உன்னதத்தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழன் செடிகொடிகளையும் உயிருள்ள உன்னதங்களாகவே மதித்து இருக்கிறான். இயற்கையோடு தன்னை முழுக்க இணைத்து வாழ்ந்து இருக்கின்றான். ஒரு சிறு செடிகளைக்கூட அவன் அழிக்க நினைத்ததில்லை என்ற உன்னத இறையாண்மை இதில் இருப்பதாக நான் பார்கின்றேன். இப்படிப்பட்ட உன்னத விடயம் வேறு எங்கே இருக்கிறது, இந்த உன்னதம் இந்த உலகத்தில் எங்கேயும் இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன். இன்று மழைக்காக மரம் வளர்க்க வேண்டும் என்று விளம்பரம் செய்கிறார்கள், வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம் என்று சொல்கிறார்கள், ஆனால் அன்றே நம் முன்னோர்கள் மரம்செடி கொடிகள் இருந்தால்தான் மனிதன் உன்னதமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை யாரும் சொல்லாமல் தானே உணர்ந்து இருக்கிறான் என்பதுமட்டும் நிச்சயம் உண்மை.
சபாஷ்.... மச்சான், எப்புடிடா இப்படி எல்லாம் பேசுற....?
ஹேய்... கலாய்க்காத, அடுத்த விடயத்துக்கு வா.
அடுத்து என்னான்னு சொல்லுடா.
பேகன் கேள்விப்பட்டு இருக்கியா மச்சான்.
யாரு, இந்த மயிலுக்கு குளிருதுன்னு போர்வை போர்த்திவிட்டானே அவனையா சொல்ற?
ம்ம்... அவனேதாண்டா.
அதுல என்னா மச்சான் உன்னதம் சொல்லப்போற.
மனுசனுக்கு குளிரினாலே கண்டுகாத காலம் இது, ஆனா அந்த காலத்துலவே ஒரு மயில் பாவம் குளிருல நடுங்குதுன்னு தன்னோட போர்வையை எடுத்து அதுக்கு போத்திவிட்டவன் தமிழன். பிற உயிர்களை எந்த அளவிற்கு நம் முன்னோர்கள் நேசித்து இருக்கிறார்கள் என்று பார்த்தாயா? இப்படி ஒரு உன்னதத்தை தமிழனைத் தவிர வேறு எவன் செய்திருக்கின்றான் இந்த உலகத்தில்? நிச்சயம் எவனும் செய்திருக்கமாட்டான். உலகம் என்பது மனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, ஆடு மாடு, புலி எலி எல்லா விலங்கினங்களுக்கும், மரம்செடி கொடிகளுக்கும் சொந்தமானது, அவைகளையும் பாதுகாத்தால்தான் இந்த உலகம் நிலைக்கும் என்பதை அன்றே நம் தமிழன் புரிந்து வைத்திருந்தான் என்பதுதான் மிக அற்புதமான விடயமாகும். இப்படிப்பட்ட விடயங்களை நாம் நுனிப்புல்லை மேய்கின்ற மாடுகள் மாதிரி, வெறும் கதையாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அதில் உள்ள ஆழமான தொன்மைத் தன்மைகளை நாம் பார்ப்பதே இல்லை என்பதுதான் வருத்தமான விடயமாகும்.
அதுமட்டுமில்ல மச்சான், சிபி சக்கரவர்த்தியைப் பற்றி நப்பசலையார் கூறிவிட்டுச் சென்ற கருத்தை கேளேன்.
ம்ம், சொல்லுடா.
ஒரு புறா பருந்திடம் இருந்து தப்பித்து வந்து, சிபி சக்கரவர்த்தியின் வீட்டுக்குள் நுழதுகொண்டதாம். அது வழி தவறி தெரியாமல் வீட்டிற்குள் வந்துவிட்டதாக நினைத்தான் சிபி. ஆனால் அது ஒரு பருந்திடம் இருந்து உயிர் தப்பிவிடுவதற்காக அங்கு வந்ததென்று பிறகு உணர்ந்துகொள்கிறான், தன்னிடம் அடைக்கலம் கேட்டு வந்திருக்கும் இந்த புறாவை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று கருதிய சிபி சக்கரவர்த்தி, தனது சதையை அறுத்து அந்த பருந்திற்கு உண்ண கொடுத்துவிட்டு புறாவை காப்பாற்றினான். தன்னிடம் அடைக்கலம் கேட்டு மனிதன் மட்டுமல்ல வேறு எந்த உயிரினம் வந்தாலும் அதன் துயரத்தை போக்கவேண்டியது தங்களது உன்னத கடமையாக தமிழன் செய்துவந்து இருக்கின்றான்.
இதில்கூட பாரு மச்சான், அந்த பருந்தை விரட்டியடித்துவிட்டு புறாவை காப்பாற்றி இருக்கலாம், ஆனால் அந்த பருந்துக்கு பசி என்பதால்தானே புறாவைக் கொல்ல நினைக்கிறது, புறாவை காப்பாற்றியதைபோல் பருந்தின் பசியை தீர்க்க வேண்டியதும் அவசியம் என்று கருதி தன்னுடைய சதையை அறுத்து பருந்திற்கு இரையளித்திருக்கிறான். இதுதான் தமிழனின் இறையாண்மையாக இருக்க வேண்டும். இது முட்டாள்தனமான செயலாக பலருக்கும் தோன்றலாம் ஆனால் இதில் இருக்கின்ற இறையாண்மையையும் தூயக்கருணையையும் பார்த்தல் மனிதன் இந்த உலகத்தை காத்து நின்று, நற்பண்பேந்தி இயற்கையோடு ஒன்றிணைந்து வாழவேண்டும் என்ற உன்னதநிலை இங்கே வெளிபடுகிறது, அதுமட்டுமில்லை மற்ற உயிரினங்களை காப்பாற்றி அவைகளையும் சுதந்திரமாக வாழவிட வேண்டும் என்பது தமிழனின் தலையாய பண்பாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது. இப்படி ஒரு ஓங்கு பண்பு உலகின் வேறு எந்த இடத்தில் முளைத்திருக்கின்றது?.
நீ சொல்றத கேக்க கேக்க ஒடம்பு புல்லரிக்கிது மச்சான்.
உண்மையானத் தமிழனுக்கு புல்லரிக்கித்தான் செய்யும். பாண்டிய நெடுஞ்செழியனைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கியா மச்சான்.
யாரு இந்த ஒரு பொய் சொன்னதுக்காக உயிர்விட்டானே அவனா?
ஆமாண்டா,
அவனபத்தி என்னா மச்சான் சொல்லப்போற?.
என்ன மச்சான் இப்படி கேட்டுட்ட, அவனபத்தி சொல்ல எவ்வளவோ இருக்குடா,
ஒரே ஒரு பொய் சொன்னதுக்காக உயிரையே விட்டுட்டான், வேற என்னா இவனபத்தி சொல்லப்போற.
மச்சான் நம்ம ஆளுங்களுக்கு, நம்மளோட பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம், இறையாண்மை, மனிதநேயம், இவைகளைப் பற்றி எல்லாம் தெரியாது மச்சான்.
இதே இந்த மாதிரி ஒரு காரியத்தை வெளிநாட்டுக்காரன் செய்திருந்தால், அவன் உலகமெங்கும் இந்த விடயத்தைப் பரப்பி இருப்பன், நாமளும் அதைப்பற்றி வாய்கிழிய பேசிக்கொண்டு கிடப்போம், இதுதான் இன்றைய சூழ்நிலை.
வாய்த் திறந்தாலே பொய்யும் புரட்டும் மலிந்துகிடக்கின்ற இந்த உலகத்தில். பாண்டிய நெடுஞ்செழியனைப்பற்றி யார் பேசப்போகிறார்கள்?. பொய்மைக்கூடாது என்பது தமிழனின் தாரகமந்திரமாக இருந்திருக்கிறது. ஒரு மன்னன் தவறியும்கூட அநீதி செய்துவிடக்கூடாது, தெரியாத்தனமாகக்கூட அநீதி இழைக்ககூடாது, அப்படி அநீதி இழைத்துவிட்டால், அது தனது பரம்பரைக்கு தாம் செய்த மாபெரும் கலங்கமாகிவிடும், இந்த கலங்கம் தமது பிற்கால தலைமுறைக்கும் அவப்பெயரை தந்துவிடும் என்பது தமிழனின் மிகப் புனிதமான தொலைநோக்குப் பார்வையாக இருக்கிறது. அப்படி என்றால் ஆதிகாலங்களில் தமிழன் பொய் சொல்லாமல் வாழ்ந்து இருக்க வேண்டும். அப்படி பொய் சொன்னாலும் அது மிகப்பெரும் தகாத செயலாகவே கருதி இருக்கின்றான். திருவள்ளுவரும் பொய்மைப் பற்றி தனது குறளில் பல இடங்களில் கூறி இருக்கிறார்.
சேக்ஸ்பியர் பற்றியும், ஷெல்லிப் பற்றியும், பாப்லோ நெருதாப் பற்றியும், வாய்கிழியப் பேசுகிற நாம், பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் எந்தப் படைப்பாளியும் தொட்டுப பார்க்காத ஒருவிடயத்தை நமது இளங்கோ கூறி இருக்கிறான், இவனைப்பற்றி உலகத்தாரிடம் யாராவது பேசுகிறார்களா?
தமிழன் நேர்மையையும், நீதியையும் தனது உயிருக்கும் மேலாக வைத்திருந்தான். இப்படியான உன்னத மரபு இந்த உலகம் நாகரீகம் அடைவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் உயர்பண்புகளோடு வாழ்ந்திருக்கின்றான் என்பதற்குச் சான்றாகும். இதுவும் தமிழனின் இறையாண்மையில் இணைக்கப்பட வேண்டிய விடயமாகவே நான் கருதுகிறேன்.
ஹேய்,,, என்னா மச்சான் இவ்ளோ வெறித்தனமா பேசுற?
இது வெறித்தனம் இல்லமச்சான் வேதனை. தமிழன் அடுத்தவர்களைப் பற்றி வாழிகிழியப் பேசி பேசி அவர்களை உயர்த்திக்கொண்டு இருக்கின்றான். ஆனால் அடுத்தவர்கள் தமிழனை ஒரு ஆளாகவே மதிப்பதில்லை, அன்னியர்களைப் பற்றி அறிந்து வைத்திருப்பதைப்போல, தமிழன் தன்னைப்பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை என்பதுதான் மிகுந்த வேதனை.
ரயில் ஷராப் டிஜி நிறுத்தத்தை கடந்து சென்றுகொண்டு இருந்தது.
மச்சான் நீ பேச பேச எனக்கே ஒரு மாதிரி இருக்குடா, நான் எவ்ளோ முட்டாளா இருக்கேன்னு எனக்கே இப்போதண்டா தெரியுது. ஆனா ஒன்னு மச்சான் இனிமே நான் முட்டாளாவே சாகமாட்டேண்டா. இனிமே எல்லா விடயத்தையும் தேடித் தேடி தெரிஞ்சிக்கப் போறேன். எனக்கு தெரிஞ்சதை மத்தவங்களுக்கும் சொல்லப்போறேன். ம்ம்... நீ மேல சொல்லு மச்சான் என்றான் எனது நண்பன்.
ரயில் நூர் இஸ்லாமிக் பாங்க் நிறுத்தத்தை நோக்கி விரைந்துகொண்டு இருந்தது.
மச்சான் மனுநீதிச்சோழன் பற்றி கேள்விப்பட்டு இருக்கியா?
இல்ல மச்சான் யார் அந்த மனுநீதிச்சோழன்?
அவன் சோழ மன்னர்களில் ஒருவன். திருவாரூரில் இருந்து அரசாண்டவன். இவன் ரொம்ப நேர்மையானவன் மச்சான், இவனைப்பற்றி சேக்கிழாரும், ம வேங்கடராமையாவும், வே. மகாதேவனும் நிறைய விடயங்களை சொல்லி இருக்காங்க.
இந்த மனுநீதிச்சோழன் அரசாண்ட காலங்களில், நாட்டு மக்களுக்கு எல்லோருக்கும் சமநீதி வழங்கப்பட்டு வந்ததாம். மக்கள் எந்த நேரமும் நேரடியாகச் சென்று மன்னரைக்காணும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தனவாம். இவனது அரண்மையின் முன்பு ஒரு பெரிய ஆராய்ச்சிமணி கட்டித் தொங்கவிடப்பட்டு இருக்குமாம். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இந்த ஆராய்ச்சி மணியை அடித்தால் உடனடியாக மன்னன் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவாராம். இந்த மனுநீதிச்சோழனின் மகன் பெயர் வீதிவிடுங்கன், இவனை பிரியவிருத்தன் என்றும் சொல்கிறார்கள். இந்த வீதிவிடுங்கன் தேரில் ஒருநாள் உலா சென்றுகொண்டு இருந்தானாம். அந்த நேரத்தில் ஒரு பசுவின் கன்றுகுட்டி தெரியாமல் வந்து தேர்சக்கரத்தில் சிக்கி உயிர்துறந்துவிட்டதாம். மன்னரின் மகன் என்பதால் இதை யாருமே கண்டுகொள்ளவில்லை, இதைக்கண்ட தாய்ப்பசு அழுது கண்ணீர் வடித்து கத்திக் கதறிக்கொண்டு ஓடி ஆராய்ச்சி மணியை அடித்ததாம். அந்த பசுவின் நிலையறிந்த மன்னன், அந்த பசு தன் கன்றை இழந்ததைப்போல் தானும் தன் மகனை இழக்க வேண்டும் என்று கூறி, அதே தேர் சக்கரத்தில் தான் பெற்ற மகனையே வைத்து கொன்று அந்த தாய்ப்பசுவிற்கு நீதி வழங்கினானாம்.
இது எல்லோரும் கேட்டுக் கேட்டுப் புளிச்சிப்போன கதையாக இருக்கலாம், ஆனால் இதில் நாம் உணரவேண்டிய விடயம் நிறைய இருக்கிறது. இப்பொழுதெல்லாம் சட்டமன்ற உறுப்பினரையேகூட பார்க்க முடியவில்லை, முதலமைச்சரை எங்கே பார்ப்பது. ஆனால் அந்த காலத்தில் யாவரும் மன்னரை பார்த்து நியாயம்கோர முடியுமென்ற நிலை இருந்தது.
தமிழன் மற்ற உயிரினைங்களையும் தனக்கு சமமாக மதித்து இருக்கின்றான். விலங்கினங்களையும் காடுகளையும் அழித்து தனது பரிணாமத்தை விரிவுபடுத்திகொண்ட மனித இனத்தில். காடுகளை நேசித்து, விலங்குகளுக்கும் தனக்கு நிகரான மதிப்பளித்து அன்றையத் தமிழன் தனது இறையாண்மையை எவ்வளவு உயர்ந்த பண்பில் உண்டாக்கி இருக்கிறான் என்பதை உலகம் படிக்க வேண்டிய விடயமாகும். ஒரு பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே கொன்றவன் தமிழனைத்தவிர இந்த உலகத்தில் வேறு எவனாவது இருந்து இருக்க முடியுமா?.
பிற உயிரினங்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்றுதான் வையகத்தில் உள்ள அனைத்து இறையாண்மைகளும் கூறுகின்றன. ஆனால் பிற உயிரினங்களையும் தங்களுக்கு இணையாக மதித்து அவைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அவைகளின் துயரை தீர்க்கும் தூயமான்பினை தமிழன் கற்று கரை கடந்தவனாக இருந்து இருக்கிறான் என்றால் அது மிகையாகாது. இப்படி இருந்த தமிழன் மாமிச பிராணியாக மாற்றப்பட்டதுதான் இன்றும் வருந்தக்கூடிய விடயமாக இருக்கிறது.
உன்மதான் மச்சான் இன்னிக்கி கறி திங்காத ஆளுங்க ரொம்ப ரொம்ப கம்மிடா. இனிமே கறி திங்கிறத கண்டிப்பா தடுக்க முடியாது, நீ அடுத்த விடயத்துக்கு வா என்றான் எனது நண்பன்.
ரயில் நூர் பாங்க் நிறுத்தத்தை கடந்து ஓடிக்கொண்டு இருந்தது.
மச்சான் இதுக்குமேல நான் சொன்னா உனக்கே பைத்தியம் பிடிச்சிடும், கடைசியா ஒரு விடயமட்டும் சொல்லிட்டு முடிச்சிடலாம்.
ஹேய்,,, ஏண்டா இப்படி சொல்ற, இன்னிக்கிதான் நான் உருப்படியான விடயத்தையே காதுல கேட்குறேன், நீ சொல்லுடா.
உனக்கு குமணனை தெரியுமா மச்சான்?
குமணனா......? எப்பவோ பேர் கேள்விப்பட்டமாதிரி நியாபகம் வருது மச்சான், ஆனா அவனபத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாதுடா.
ம்ம்... அவன் தன்னோட தலையவே தானமா கொடுத்தான் தெரியுமா?
என்னா மச்சான் சொல்ற.....!
ஆமாம் மச்சான், முதிர மலைநாட்டை இந்த குமணன்தான் ஆண்டு வந்தான். இவன் மிகுந்த ஈகை குணம் கொண்டவன். அரண்மனை வாசல் கதவை சாத்திடாமல் எப்பொழுதும் திறந்தே வைத்திருந்து, வருவோர்களுக்கு தேவையானதை இல்லை சொல்லாமல் வாரி வழங்கக்கூடிய வள்ளலாக இவன் இருந்தான்.
இந்த குமணனுடைய தம்பி பெயர் இளங்குமணன். இவன் தீயவர்களோடு சேர்ந்துகொண்டு தனது அண்ணனை எதிர்க்கிறான். இருக்கின்ற செல்வங்களை எல்லாம் ஊருக்கு வழங்கிவிட்டு எம்மை பிச்சை எடுக்க விடப்போகிறாயா என்று கூறுகிறான். தம்பிமேல் மிகுந்த பாசம் வைத்திருந்த குமணன் இதைகேட்டு மனம் உடைந்த போனான். முதிரமலை நாட்டை தனது தம்பி இளங்குமணனிடம் கொடுத்துவிட்டு வனவாசியாய் காட்டிற்கு சென்றுவிடுகிறான்.
ஆனாலும், தனது அண்ணனால் தனது ஏகபோக அரண்மனை வாழ்க்கைக்கு மீண்டும் ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சிய இளங்குமணன், தனது அண்ணன் குமணனின் தலையை கொய்து கொண்டு வருகிறவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படும் என்று தண்டோரா போட்டு அறிவித்தான்.
இந்த நிலையில், அரண்மனை வாயில் கதவு நிரந்தரமாக அடைக்கப்படுகிறது, அரண்மனையை நம்பி வாழ்ந்தவர்கள் வறுமையில் மெலிந்தார்கள்.
புலவர் பெருந்தலைச்சாத்தனார் ஒரு நாள் காட்டு வழியாக செல்கிறார், அப்பொழுது காட்டில் குமணனை கண்டு விடுகிறார். நானும் எனது பிள்ளைகளும் உணவருந்தி நீண்டநாள் ஆகிவிட்டது, அடுப்பிலே பூனை வந்து உறங்குகிறது, வறுமையில் நாங்கள் உறக்கமின்றி தவிக்கிறோம் என்று ஒரு பாடல்மூலம் தனது நிலையைக்கூற, குமணன் கலங்கிப்போய்விடுகிறான். அவருக்கு தருவதற்கு அவனிடம் ஒன்றுமே இல்லை, என்ன செய்வதென்று அவனுக்கும் புரியவில்லை. உடனே தனது இடுப்பில் இருந்த வாளை எடுத்து புலவரின் கையில் கொடுத்து, அய்யா தாங்களுக்கு தர தற்பொழுது என்னிடம் என் தலை மட்டுமே இருக்கிறது, தலையை வெட்டிச்சென்று என் தம்பியிடம் கொடுத்து கிடைக்கின்ற வெகுமதியை வைத்து உங்கள் வறுமையை போக்கிகொள்ளுங்கள் என்று குமணன் கூறினானாம்.
அறுத்த கைக்கு சுண்ணாம்பு தராத இந்த உலகத்தில், தலையையே தானம் தந்தவன் தமிழன் ஒருவனாகத்தான் இருக்க முடியும். ஒரு குடும்பத்தின் வறுமையை போக்க தனது தலையை தானம் தந்தவன் எங்கயாவது இருந்ததாக யாராவது கூறமுடியுமா?. பிறருக்கு எந்த வகையிலும் ஊறுவிளைவிக்காமல் பிறரை வாழவைக்க வேண்டும் என்பதே தமிழன் பண்பாடு, அதுவும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு தன்னையே இழந்தாவது உதவவேண்டும் என்ற மேலோங்கியப் பண்பு தமிழனின் பண்பு. இப்படிப்பட்ட இறையாண்மைக்கு தமிழன் மட்டும்தான் சொந்தக்காரனாக இருக்கமுடியும்.
நாம் நமது உன்னதங்களையும் தொன்மைகளையும் மறந்து நீண்ட தூரம் வந்துவிட்டோம். நமது பிற்கால தலைமுறை தமிழின் வரலாற்றினை மறந்துவிடும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது, இப்படிப்பட்ட அவலநிலையில் இருந்து நம் தமிழ் இனத்தின் இறையாண்மை கூறுகளையும் நெறிமுறைகளையும் காப்பாற்ற வேண்டியக் கடமை நம் ஒவ்வொருத் தமிழனுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
நான் மேலே சொன்ன எடுத்துக்காட்டுகளில் தமிழனின் மேதாவித்தனமான நெறிமுறைகளும், இந்த உலகத்தை சீர்தூக்கும் இறையாண்மையும் அடங்கி இருப்பதையே நான் காண்கிறேன். இதையே உனக்கும் கூறினேன். இதைபோல் கூறுவதற்கு இன்னும் பல விடயங்கள் குவிந்து கிடக்கின்றன.
மச்சான் உண்மையிலேயே இன்னிக்கி நான் நிறைய விடயங்கள் தெரிஞ்சிகிட்டேன் மச்சான். மனசுக்கு ரொம்ப மகிச்சியா இருக்குடா, தமிழன்னு நெனைச்சாலே ஒடம்புல ஒரு தெம்பு வருது மச்சான். நெஞ்சை அப்படியே நிமித்தி திமிரா நடக்கணும் போல இருக்குடா. இப்போ நீ சொன்ன விடயத்த எல்லாம் நான் இன்னும் பலபேருகிட்ட சொன்னாதான் மச்சான் எனக்கு மனசு அடங்கும் என்று எனது நண்பன் கூறினான்.
''த நெக்ஸ்ட் ஸ்டேஷன் ஈஸ் பிசினெஸ் பே'' என்று ஒலிப்பெருக்கி முழங்கி முடித்த இரண்டாவது நிமிடம், அந்த ரயில் பாம்பு பிசினெஸ் பே நிறுத்த கூட்டிற்குள் தனது உடலை நுழைத்து ஓட்டத்தை நிறுத்தியது.
சரி மச்சான் நான் வரேன் என்று இறங்கினேன்.
டே மச்சான் என்னாட என்னைய அப்படியே விட்டுட்டு போற...?
இன்னைக்கி இங்கதான் மச்சான் வேல. ஒரு நண்பரை சந்திக்கணும். நீ போயிட்டு வா என்று கையசைத்தேன். அவனும் கையசைத்தான். மீண்டும் ரயில் பாம்பு உயர்பெற்று ஓடியத் தொடங்கியது.
---------------------நிலாசூரியன். தச்சூர்.