யாருக்கு தெரியும் இப்படியும் இருக்கலாம்

தன்னையே வெட்டிக் கொண்டிருந்தவனுக்கு
நிழல் கொடுத்து
நிம்மதி அடைந்தது மரம்...

உணவு கிடைத்தும்
உண்ண விரும்பாமல்
வரிசையாக நின்று
ரசித்துக் கொண்டிருந்தது எறும்புகள்
வாசலில் யாரோ போட்ட
அழகான மாவு கோலத்தை...

கன்றுக் குட்டிக்கு
குறைவாக பால் கொடுத்தது
பசியில் அழுத குழந்தையை
பார்த்துக் கொண்டிருந்த பசு...

மழையில் நனைய
வாய்ப்புத் தந்ததற்கு
மனிதர்களிடம் நன்றி சொன்னது குடை...

அழுது முடித்தும்
அதிகமானது கவலை
அநாதையாகிப் போன
கண்ணீர்த் துளிகளைக் கண்ட கண்களுக்கு...

கொசுக்களைக் கொன்ற பாவத்திற்கு
தன்னையே எரித்து
தண்டனை இட்டுக் கொண்டது
கொசுவத்திச் சுருள்...

இறந்தாலும் உணவாகிறோமா?
வியப்பின் உச்சத்தில்
வலைகளைத் தேடியது
விதியை மறந்த மீன்கள்...

தன்மேல் தீ வைத்தவனுக்கே
ஒளிகொடுத்து உதவியதில்
மகிழ்ச்சியில் மரணித்தது மெழுகுவர்த்தி...

கிழிக்கப் பட்டதும்
விழித்துக் கொண்டது
விடிந்து விட்டதாய் நினைத்த நாட்காட்டி...

என்னிடம் படித்தவர்களில்
யாரோ ஒருவன் இப்போது
கவிதை எழுதிக் கொண்டிருக்கலாமென்று
ஏதோ ஒரு தமிழாசிரியர்
நம்பிக் கொண்டிருக்கலாம்...

எழுதியவர் : ஜின்னா (12-Feb-15, 2:31 am)
பார்வை : 233

மேலே