கொஞ்சம் குறும்பு நிறைய கடுப்பு -சந்தோஷ்

செருப்பு தைத்துக்கொண்டிருக்கும்
அந்த மாமாவிற்கும்
கோயில் வாசலில் பூவிற்கும்
அந்த அத்தைக்கும்
கவிதை எழுத தெரியுமா....?
குறைந்த பட்சம்
வாசிக்க ரசிக்க தெரியுமா ?

முதலில் கேட்டுவருகிறேன்.
பின்பு படைக்கிறேன்
உலகத்தரமான இலக்கியத்தை...!

வயல்காட்டிலும் களத்துமேட்டிலும்
ஒட்டிய வயிற்றோடு
பசிவீக்கமெடுத்த அந்த கிழவனுக்கு
ஹைக்கூ சொன்னால் புரியுமா ?
இல்லை
சென்ரியு சொல்லி சிரிக்க வைக்கமுடியுமா?

முதலில் தெரிந்துக்கொள்கிறேன்
பின்பு எழுதுகிறேன்
மேதாவிகள் போற்றக்கூடிய
ஒரு காவியத்தை....!

பெரு நகரங்களிலும்
சிலபொழுது கிராமங்களிலும்
தலைவிரித்து செல்லும் கண்ணகிகளிடமும்
ஜீன்ஸ்போட்டிருக்கும் கம்பன்களிடமும்
பண்பாடு, கலாச்சாரம் , விழிமியம்
என்றால் எபபடியிருக்கும் என்று
அறிந்து தெரிந்துக்கொண்டு வருகிறேன்.

பின்பு சாதிக்க எழுதுகிறேன்.
ஒரு சாகித்திய அகாடமி விருதுக்கு.


புரியவில்லை மேதைகளே !
உள்ளூரில் உணரப்படாத ஒர் இலக்கியம்
தன் மக்களுக்கு பயன்படாத ஒரு மொழியறிவு
உலக அரங்கில் ரசிக்கப்பட்டு என்ன பயனனென்று ?

ஏசி அறையிலும், இலக்கியவட்டத்திலும்
எதுகையும் மோனையையும்
சந்தமும் தாளத்தினையும்
ரசித்து ரசித்து கைத்தட்டும் ஒலியில்தான்,
தமிழ்குடிமகன்களின், தமிழ் குடியானவர்களின் ,
சமூகப்பசியில் நலிந்தவர்களின் இருதயம் கிழிகிறதாம்..

இதற்கு பதிலும் மருந்தும் இருந்தால்...
உரைத்திடுங்கள் என்னிடம்
இப்போதே எழுத பயற்சி எடுக்கிறேன்
இனி எழுதப்போகும் படைப்புகளை
உலகத்தரமான இலக்கியமாக எழுதிட..!

-------------------------------------------

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (15-Feb-15, 6:05 am)
பார்வை : 127

மேலே