ஞாயிற்றுக்கிழமையும் ரெண்டுரூபாயும் o0o குமரேசன் கிருஷ்ணன் o0o
ஞாயிற்றுக்கிழமையெனில்
படுசுறுசுறுப்பாகிவிடுவோம்
நானும் ...என் தங்கையும் !
தந்தை எங்களுக்கு
இரண்டு ரூபாயளிப்பார்
படம் பார்க்க ...
அவள் சிவப்பு பாவாடை சட்டை
நான் சிவப்பு டவுசர் சட்டையென
ஒன்றாக கிளம்பிவிடுவோம் ...
என்னைவிட ஒருவயது
இளையவள் அவள்
அவள் பேசிக்கொண்டே வருவாள்
நான் கவனமாய்
அவள் கைபிடித்திருப்பேன் ..
தியேட்டரில்...
மணல்குவித்து
உயர்மேடையாக்கி
உட்கார்ந்திருப்போம்
நாங்கள் ..
இடையில் ...யாரேனும்
அவளைவிட உயர்ந்தால்
அவன் மணல்மேடு
இறங்கியிருக்கும் ..என்னால் ?
அவன் முறைப்பான்
மறைக்குதண்ணா...
அவள் மொழியில்
அவனும் மௌனமாகிவிடுவான் ...
ஆளாளுக்கு ..நான்கு
முறுக்கு ..கடலைமிட்டாயென
காசை காலியாக்கிவிட்டு
வீடு திரும்புவோம் ..
மறுபடியும் அவள் பேசுவாள்
படம் பற்றி ...
அவள் விளக்கத்தில் நான் மறுபடி
படம் பார்ப்பேன் ...
ஆனாலின்று...
ஒன்னாவது படிக்கும் என்மகனிடம்
இரண்டு ரூபாய் கொடுத்து
மிட்டாய் வாங்கிக்கோடா
என நான் சொல்ல ...
வேண்டாம்ப்பா ...
""ஒன்னு போட்டு
ரெண்டு ஜீரோ போட்ட
நோட் கொடு ""
என அவன் கேட்க
கொஞ்சம் விக்கித்தான்
போகுது மனசு ?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
( இக்கவி பற்றிய நினைவுகளை என்னுள் கிளப்பிய நண்பர் குருச்சந்திரன் கவிக்கும் , அவருக்கும் என் நன்றிகள் -- குமரேசன் கிருஷ்ணன் )