எண்ணுவார் எவருமில்லை

மிதிக்கிறேன் வண்டியை நகர்த்திட
-- மதிக்கிறேன் மக்களின் உணர்வுகளை !
மிதிக்கிறேன் வாழ்க்கையை நடத்திட
-- மதிக்கிறேன் உழைக்கும் உள்ளங்களை !

ஓயாது உழைத்தாலும் ஒருபோதும்
-- தேயாது என்பாதமும் இறுதிவரை !
வழியறியேன் நானும் வாழ்ந்திடவே
-- வலித்தாலும் வையத்தில் பிழைத்திடவே !

சாதிமதம் அறியாது என்வாகனமும்
-- சமமாகவே பாவிக்கும் என்மனமும் !
பேதமில்லை வயதிலும் அமர்ந்திட
-- பேசுவதில்லை வம்புகளை தவிர்த்திட !

வாதங்கள் செய்திடுவர் இல்லாமலில்லை
-- வாதித்து வென்றவரும் வரலாறாகவில்லை !
வரவுகள் கோடிகளாயினும் நினைப்பதில்லை
-- வாதிடுவது ஒருரூபாயினும் விடுவதில்லை !

சிந்தித்துப் பார்க்கிறேன் இவ்வுலகை
-- நிந்திக்கவும் இயலவில்லை என்னிலை !
காசுபணம் இருந்தால் மதிக்கின்றனர்
-- ஏசுகின்றனர் எதுவும் இல்லையெனில் !

தடமாறி ஈட்டுகின்றனர் தரமற்றோர்
-- இடமாறி உயர்கின்றனர் இடையிலே !
நடைஉடை மாற்றுகின்றனர் நாணயமிலார்
--நடைபிணமாய் உலவுகிறார் நல்லோர் !

ஒழுக்கமுடன் உள்ளோர் உயர்வதில்லை
-- ஒழுக்கமிலார் ஓங்கிநிற்கிறார் உலகிலே !
எண்ணுவார் எவருமில்லை இதனையிங்கு
-- ஏங்குகிறேன் தனிமையில் நானும்ஏனோ !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (15-Feb-15, 2:43 pm)
பார்வை : 134

மேலே