எங்கே நான் போய்கொண்டிருக்கிறேன் ஒரு தலைப்பும் கவிதையும்

நதியோடும் திசைகண்டே மீனோடும்
நடுவானின் தடம்கண்டு நிலவோடும்
கதிகொண்டு காற்றோடும் திசைமாறும்
கனவென்றே வாழ்வோடு விதியோடும்
மதிகொண்டே உணர்வோடு மயங்காமல்
மனங் கொண்டு நற்பாதை சென்றாலே
புதிதென்ற நல்வாழ்வும் உண்டாகும்
புவனத்தில் நம்முள்ளம் இருந்தாளும்

கருவாக இருந்திங்கு புவிகண்டேன்
கனவோடு பெருவாழ்வின் சுகம்கொண்டேன்
இருகாலும் விழிகாணா இருள் சென்றேன்
இடருக்குள் நடந்தோடி வலி கொண்டேன்
தெருவீதி கிடந்தும் உள் திமிர்கொண்டேன்
தினவோடு பழிகொண்டு தொலைகின்றேன்
ஒருநாளில் ஒளியொன்றின் திசை காண
உருகி மெய் உணர்வோடு தொடர்கின்றேன்

சதிகொண்டு பதிகாணும் இல்வாழ்வில்
சமமின்றி மனம்யாவும் துயர்காணும்
விதிகண்டு விளையாடி இடம் மாற்றும்
வேகங்கள் கொண்டுள்ளம் தடுமாறும்,
நதியோடிச் செல்பாதை பலவாகும்
நாளுமிப் புவிமீது காற்றோடும்
புதிதென்ற வழிநூறு பரந்தோடும்
போகின்ற பாதைகள் பலவாகும்

மொழியின்றி இனம் வாழ வழியில்லை
முயலாத செயலுக்கு முடிவில்லை
பழிகொண்ட பாவங்கள் உடன்கூடும்
பார்த்தே எம்வழிசேரும் துயர்காணும்
எழில்கொண்ட மலர்தூவி இறை வேண்டின்
இதயத்தின் நிலை இன்பவழி மாறும்
பொழில்நீவி வருந்தென்றல் பரந்தோடும்
போலும் நான் போகின்றேன் இருந்தாலும்

முதிர்கொண்டு கனிதூங்கி நிலம் வீழும்
முற்றுங் காய் வெடித்தே பஞ்செழுந் தோடும்
மதிவானில் பிறையாகி மறைந்தாலும்
மலரங்கு நிலை வாடிச் சோர்ந்தாலும்
கதியன்றி எனதுள்ளம் அலைந்தாலும்
கால் ஓடும் உள்ளன்பு இருந்தாளும்
புதிதாக அலைவந்து புகுந்தாலும்
போகாது மனமிங்கு மிதந்தாடும்

வனமோடும் விலங்காக மனமோடும்
வழிகண்ட உயிர்கொன்று மகிழ்வாகும்
இனங் கொண்ட உறவுக்குப் பகையாகும்
இருந்தாலும் முடிவொன்று நடந்தேறும்
தினமோடும் வயதோடு திடமோடும்
திரும்பாமல் முடிவாக உயிரோடும்
தனங் கொண்டா போனோம் நாம் தனிபோகும்
தருணத்தை நோக்கிநான் போகின்றேன்

எழுதியவர் : கிரிகாசன் (15-Feb-15, 5:52 pm)
பார்வை : 68

மேலே