ஏங்கும் நெஞ்சம்

பொருள்விளங்காப் பிரபஞ்சத்தில்
திளங்கும் உயிர்த்துளி ஒன்று
மரபின் இழையோடி
மண்ணில் பதிகையிலே
உருவிட்டது நெஞ்சம்;

காரிருள் கருவறையின்
மூன்றாம் பிறை தொட்டிலில்
தாலாட்டின் மயக்கத்தை
பூமிதன் பூபாளம் கலைக்க
விழித்தது நெஞ்சம்;

அறிவின் தீப்பந்த ஒளிபரப்பும்
ஆட்காட்டி விரலை இறுகப் பற்றி
ஆர்வமாய் அலைந்து தேடிக்
கண்டதொரு ஆழியில் முத்தெடுக்க
துடித்தது நெஞ்சம்;

முடிவற்ற பாதையிலே
மாரீச மாயத்தைத் தேடியோடி
காண்பதெல்லாம் கைப்பற்ற
பொருளுலகின் போதையிலே
உழன்றது நெஞ்சம்;

பிணைப்புக்கள் அற்றுப் போக
மெய்யுணரும் வேளைவர
மரணத்தின் அடிவானம் தெரிய
நனவும் நினைவுமற்ற நிலைதேடி
ஏங்குது நெஞ்சம் !

எழுதியவர் : ஜி ராஜன் (16-Feb-15, 3:21 pm)
Tanglish : yeengum nenjam
பார்வை : 108

மேலே