அறிவுரையல்ல அனைத்தும்

பிறந்திட்ட மனிதா நீ
புரிந்திடல் வேண்டும்
இறப்பு என்பது நிச்சயம் !
வாழ்க்கைப் பயணம்
அறிந்திடல் வேண்டும்
முடிவு உண்டு நிச்சயம் !
இன்பம் நிலையன்று
துன்பமும் வீசிடும்
இணையாகக் கொள் நீயும் !
போதனை அல்ல
சோதனையும் வரும்
வேதனையை கடந்திடு நீ !
துயர்மிகு நேரங்களில்
அயராதே ஒருபோதும்
துணிவோடு நில் நீயும் !
பொறாமை தீப்பட்டு
பொசுங்கிடாதே நீயும்
பொறுமை காத்திடு என்றும் !
சாதிமத வெறியெனும்
சாக்கடையில் விழாதே
சந்தனமாய் மணந்திடு என்றும் !
அரசியலெனும் மாயையில்
அகப்பட்டு தவிக்காதே
ஆசைகளை அடக்கிடு நீயும் !
பகுத்தறிந்து உணர்ந்திடு
பயனுண்டு அதனாலே
வகுத்திடு வாழ்க்கையை நீயும் !
முடங்கிட வைத்திடும்
மூடநம்பிக்கைகளை ஒதுக்கிடு
முன்னேறும் பாதை தெரியும் !
அறிவுரையல்ல அனைத்தும்
ஏற்றமிகு வாழ்விற்கு ஏணிப்படிகள்
கொள்கையெனக் கொள் பயனுண்டு !
பழனி குமார்