சீழ் வடியும் தோல்விகள்
மூச்சுத் திணறி,
வெளிக்கசியும் உயிர்மறிக்கும்,
உத்திகளற்ற வேளையில்,
நினைவில் மின்னும் உன் முகம்
ஆக்சிஜனேற்றிப் போகிறது!
குரல்வற்றி-
மௌனம் அடர்ந்த சாலையில்
திகிலடைகிறது வாழ்க்கை!
உன் குறுஞ்செய்தி ஆற்றுகிறது....
எழுபிறவிக்கான சொற்பொழிவை!
புதியதொரு கிரகத்தினுள்
தொலைந்துபோன என் நினைவுகள்
பூமிக்கான வழியை
விசாரித்தபடி அலைகின்றன!
உன் கனவொன்று கரம்நீட்ட
நிஜத்திற்கு மீள்கிறது....
நமக்கான இடைவெளியில்
முட்டிக் கதறியபடி!
பொறுக்குவார் யாருமற்று,
சிதறிக் கிடக்கிறது...
உடைத்து நொறுக்கப்பட்ட இதயம்!
ஒவ்வொரு சில்லும்
சிறகு விரிக்கிறது!
உன் வளையல் கரங்களின்
வாசனை தேடி!
என் வலிகள் திரட்டி,
ஞாபகங்களுக்கப்பால் எறிந்துவிட
சக்தி திரட்டுகிறேன்!
சந்தோசம் நீர்த்துப்போனபின்,
நீ தந்த வலிகளுமற்று,
பிணமென உணர்வேன்...
என்னை நானே!
வில்லேந்தி-
வாள் தறித்து-
இனியும்... ம்.
எப்படியென்னைத்
தயாரித்துக்கொள்வது?....
தோற்கப்போகும் போருக்கு!
இயலாமையின்
பெருத்த வயிற்றுக்குள்,
இரையாகிப் போகின்றன....
இறக்கப்பிடிக்காத ஆசைகள்!
இன்றுன்,
ஒற்றைக் கேள்வியும்
அது உதிர்க்கப்பட்ட விதமும்,
என் ஆணவத்தின்
குடல் கிழிக்க-
எனக்கே தெரியாமல் அழுகிறேன்....
எனக்கான அடையாளங்களை
மீட்டெடுக்க முடியாமல்!
நீ எனக்காகவும்
நான் உனக்காகவும்
ஆக முடியாப் போதினிலும்,
எவரோடும்
பகிர்ந்துகொள்ள முயலுவதில்லை.....
உனக்கே உனக்கான காதலை!