பெண்சிசு கொலையினைக் கொலை செய்வோம்
வெற்றிடத்தில் கோலம் போடும்
பஞ்சு விரல்கள்..!
அகல் விளக்கின் விளிம்பாய்
வளைந்த கனி இதழ்கள்..!
நகல் எடுத்த வைரங்களாய்
மின்னும் இரு கரு விழிகள்..!
கயல் நீந்தி கரை காணமுடியா
கண்ணக்குழிகள்..!
பிறை நிலவோ என எண்ணத் தோண்றும்
கண் இமைகள்..!
துருவங்கள் நேர் எதிரே எய்த
அம்பாய் வளைந்த புருவங்கள்..!
இவ்வாறெல்லாம்,
பெற்றெடுத்த தன் பெண் சேய்க்கு,
கரு மையினை கண்ணத்தில் இட்டு,
கண்ணே..! முத்தே..! கலையான
கண்மணியே..! என,
காண்பவர் கண் படா வண்ணம்
தன் கை விரல் சொடுக்கி
நெட்டை முறித்து,
ஆனந்த கண்ணீர் பொங்க
அழகு பார்ப்பாள் தாய்.
ஆனால்,
அரளி பூவிது அலங்கரிக்கத் தகாது என,
கிள்ளி எறியும் சில
கள்ளிக் காட்டு கயவர்களுக்கு
புரியுமா அந்த தாயின் உயர்ந்த உள்ளம்.