என்னை தெரிகிறதா

நடந்தும்
கடந்தும்,ஓடியும்,தள்ளாடியும்
சென்றுக் கொண்டே இருங்கள்
அன்றுப்போலவே.......
எனது நெடுவளைவுகளிலும்
நீளுடலிலும்..
நொடிகளைத் தொலைத்துவிட்டு
சென்றீர்கள் அன்று...
இன்றும் அப்படியே...!!!

எரிந்து கரைந்தும்
புதைந்து துண்டங்களாயும்......
மாறிப்போனீர்கள்
உங்களைச் சுமந்தும் .....
நான் மட்டும்இன்னமும் அப்படியே...

பல்லக்கும் பரிவாரமும்
பிண பாடையும்,மண ஊர்வலமும்
யவ்வன சிங்காரமும் அலங்காரமும்
சிருங்காரமும்
சீறும் குளம்புகளின் அமிழ் வாதையும்....
எத்தனை ரகசியங்கள் இன்னமும் என்னுள்ளே..
அமுக்கங்களாய் ஆழத்தில்.....!!!!

நீங்கள் சொன்னவை
சொல்லாமல் சென்றவை
சொல்ல மறந்தவை...
என ,
இன்னமும் நெடுவளைவாய் நீளுடம்பாய்
மெளனமாய் கிடக்கிறேன்..
உங்களுக்கான இந்தப் பெயர்களுடன்
ராஜபார்ட்டை....
ஜமீன்ரஸ்தா......
பறையர் பாதை .....
சுடுகாட்டு வழி....
பிராமண அக்ரகாரம்....
தேரோடும் வீதி....
தாசி தெரு....
செட்டியார் முடக்கு....
களத்துமேட்டு சந்து...
................

எழுதியவர் : அகன் (20-Feb-15, 8:06 pm)
பார்வை : 73

மேலே