தூதொடு வந்த மழை - கார் நாற்பது 26
தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது!
இன்னிசை வெண்பா
நலம்மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகைஉடைய வாகி,
புலமெலாம் பூத்தன தோன்றி; சிலமொழி!-
தூதொடு வந்த மழை! 26
- கார் நாற்பது
பொருளுரை:
சிலவாகிய மொழியினையுடையாய்! தோன்றிப்பூக்கள் நன்மைமிக்க கார்த்திகைத் திருவிழாவில் நாட்டிலுள்ளோர் கொளுத்திவைத்த முதல் நாள் விளக்கைப் போல் அழகுடையன வாகி இடமெல்லாம் மலர்ந்தன; மழையும் தூதுடனே வந்தது!
கார்த்திகை நாளில் நிரை நிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் பண்டைநாள் தொட்டுள்ளது; தலைநாள் - திருவிழாவின் முதல் நாளாகிய கார்த்திகை; நலமிகு கார்த்திகை என்பதனைக் கார்த்திகைத் திங்கள் எனக் கொண்டு, தலைநாள் என்பதனை அத் திங்களிற் சிறந்த நாளாகிய கார்த்திகை எனக் கொள்ளலும் ஆம்; முன்பு நாட்கள் கார்த்திகை முதலாக எண்ணப்பட்டவாகலின் தலைநாள் என்றார் எனலுமாம். 1. தோன்றிசின் மென்மொழி என்றும் பாடம்.