வேடிக்கை பார்க்கும் தலைமுறை
ஒரு தலைமுறையின் நகர்தலில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பதை பதிவிட விரும்பினேன்..இக்கால இளைஞர்களின் கவனத்திற்கும் புரிதலுக்கும்.
ஓர் நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு உள்ளாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சிலருக்கு வியப்பையும் ஏற்படுத்தக் கூடும்.1960,1970 களில் சினிமா என்பது பெரும்பாலும் கருப்பு வெள்ளை படங்கள்தான். தியேட்டர்களில் கடைசி வகுப்பு 25 பைசா அல்லது 40 பைசா ..நீள நீளமாக மர பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும்.ஆண்கள் பகுதியும் பெண்கள் பகுதியும் குறுக்காக பிரிக்கப் பட்டிருக்கும்.(ஆண்கள் பகுதியில் பீடி, சிகரெட் படம் பார்த்துக் கொண்டே பிடிப்பவர்களும் உண்டு ) குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க வேண்டுமென்றால் உயர் வகுப்பில் தான் முடியும் (Rs 1.50/1.80/2.10) .இடைவேளையில் இரண்டு மூன்று சிறுவர்கள் கையில் தட்டு ஒன்றில் முறுக்கு, கையில் சோடா, கலர் (கோலா போன்ற பானம்) எடுத்துக் கொண்டு உள்ளே மக்களின் நடுவில் "சோடா, கலர்,முறுக்கு,டீ" என்று கூவிக்கொண்டே வருவார்கள்..துயரமான படங்கள் (துலாபாரம் போன்றவை) பார்க்கும் போது பெண்களும், சில சமயங்களில் ஆண்களும் கூட அழுது கொண்டே படம் பார்ப்பது, MGR போன்ற ஹீரோக்களை கஷ்டப்படுத்தும், நம்பியார் போன்ற வில்லன் நடிகர்களை பார்த்து "டேய்..பாவி" , "நல்லா இருக்க மாட்டே ..நாசமா போவ " என்றெல்லாம் சப்தமாக திட்டி தீர்ப்பதும் சகஜமான நிகழ்வுகள்.
தென்னங்கீற்று கொட்டகை அல்லது டூரிங் டாக்கீஸ் என்ற வகை சினிமா கொட்டகைகள் தனி ரகம். உள்ளே மணலில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும்..
படம் ஆரம்பிக்கும் போது வெளியே லவுட் ஸ்பீக்கரில் பக்திப் பாடல்கள் போட்டு படம் முடியும் பொது தேசிய கோடி பறக்கும் காட்சியுடன் ஜன கன மன என்று தேசிய கீதம் (கட்டாயம்) ஒலிக்க எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திய பின்தான் வெளியேறுவார்கள்..
வாகனங்கள் பெரிதாக புழக்கம் இல்லாத படியால், இந்தியாவில் தயார் செய்யப் பட்ட மாடல்கள் மிகக் குறைவு. கார் என்றால் அம்பாசிடரும், பியட்டும் தான்.பைக் என்றால், ஜாவா,ராஜ்தூத்,புல்லட் அப்புறம் சுவேகா என்று ஒரே ஒரு மொபெட் மட்டும் தான். சைக்கிள்கள் அதிகம்..அதற்கு லைசன்சு இருக்க வேண்டும். முன்னாடி செருகி வைக்கப் பட்ட எண்ணெய் விளக்கு அல்லது டைனமோ எரியாமல் போனால் போலீஸ் காரர் பிடித்துக் கொள்வார். இருவர் (டபுள்ஸ்)போனாலும் தான்.தூரத்தில் போலீசை பார்த்ததும் இறங்கி தள்ளிக் கொண்டு போக வேண்டும்.
சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் வாடகை சைக்கிள் கடைகள் ஒரு மணி நேரத்திற்கு 15 பைசா வாடகைக்கு தருவார்கள்.
டெலிபோன் (தொலைபேசி) தந்தி கதை வேறு. நடுத்தர வர்க்கத்தினருக்கே கூட வீட்டில் தொலைபேசி இணைப்பு இருக்காது. வெளியூருக்கு பேச வேண்டுமென்றால் டெலிபோன் எக்சேஞ் அல்லது போஸ்ட் ஆபீஸ் போய் புக் செய்து விட்டு 1/2 மணி நேரமாவது காத்திருந்த பின் 'யார் சார் திண்டிவனம் கால் கேட்டது ,சீக்கிரம் வாங்க" என்று குரல் வந்தபின் தடுக்கி விழுந்து ஓடி போனை பேசி முடிப்பதற்குள் ராக்கெட்டில் நிலாவுக்கு போய் வந்த மாதிரி ஒரு சந்தோஷம் அடைவார்கள்.. துரிதமாக செய்தி அனுப்ப தந்தி வசதி போஸ்ட் ஆபீஸ் மூலம்..போஸ்ட்மேன் தந்தி என்று குரல் கொடுத்ததுமே அடி வயிறெல்லாம் பதற, பீதியோடு (சாவு சேதி ஏதாவதோ)போய் வாங்கும் அப்பாவிகள் தான் அதிகம்..
பிள்ளைகள் பரீட்சை முடிவு போஸ்ட் கார்டில் (10 பைசா) வீட்டுக்கு வரும் .தருகின்ற போஸ்ட்மேனுக்கு பத்து பைசா அன்பளிப்பு தருவார்கள் சிலர்..
வருடத்துக்கு ஒரு முறை ஊரில் சர்க்கஸ் , கண்காட்சி (பொருட்காட்சி) நடக்கும்..நாடகங்கள் போடுவார்கள்..சில சினிமா நடிகர்கள் வந்து நடிப்பதும் உண்டு.
கோயில் திருவிழாக்கள் முன்னிட்டு சித்திரை மாதம் இரவுகளில் தெருக் கூத்து (ராமாயணம்,,மகாபாரதம், நளன் கதை, போன்றவை) இரவு முழுதும் நடக்கும்..வீதிகளில் பொய்க்கால் குதிரை, புலி வேஷம் கட்டி சண்டை, கரகம்(ஆபாசமின்றி), காவடி போன்றவை சாமி ஊர்வலம் வரும் போது வீடுகளில் அர்ச்சனை செய்து கொள்வார்கள் ..
டிவி எல்லாம் கிடையாது என்பதால் இளசுகள் கில் பாக்கெட் ரேடியோவில் காது கிட்டே வைத்துக் கொண்டு (ஹெட் போனெல்லாம் இல்லை) கிரிக்கெட் கமென்ட்ரி கேட்டுக் கொண்டு ரோட்டை கடப்பார்கள்.. ஒரு நாள் மேட்ச் , 20-20 எல்லாம் கிடையாது ..5 நாள் டெஸ்ட் போட்டிகள் தான்.
வீடுகளில் பெரிய கிராமபோனில் டிஸ்க் சுழல ஊசி முனை ஒன்று தொட்டுக் கொண்டே இருக்க பாடல்கள் கேட்க முடியும் (டேப் ரெகார்டர் அப்போது புரட்சி)
இன்று MULTIPLEX THEATRES , MALLS , செல்போன், கம்ப்யூட்டர் , pizza , சாட், இன்டர்நெட்,YOUTUBE ,WHATSAPP , VIBER , SKYPE என்று இவ்வளவு மாற்றங்களைக் கண்ட தலைமுறை இவற்றால் மகிழ்ச்சியும், இழந்துபோன சில மகிழ்ச்சிகளை எண்ணி ஏங்கியும், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நேரம், அடுத்த தலைமுறை இன்னும் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.!