மனக்கவலை மாற்றல் அரிது

”ஆளுமை வளர்ச்சி” என்பது பல பரிணாமங்களைக் கொண்டது. உடல் சார்ந்த ஆளுமை, மனம் சார்ந்த ஆளுமை, அறிவு சார்ந்த ஆளுமை, ஆன்மீகம் சார்ந்த ஆளுமை என அதற்கு நான்கு அலகுகள். நான்காவது அலகு தேசத் தந்தை காந்தியடிகளால் சேர்க்கப்பட்டது. .

மனம் சார்ந்த ஆளுமையை வளர்த்துக் கொள்ளும்பொழுது, அதற்கு முக்கியத் தடையாக இருப்பது மன அழுத்தம். அதைத் தகர்க்க வேண்டியது, தவிர்க்க வேண்டியது ஒருவர் முழுமையான ஆளுமையை வளர்த்துக் கொள்வதில் இன்றியமையாதது.
கல்லாடர் என்ற கவிஞர் எழுதினார்:
ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றென
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி என்று.
அந்த ”அமுத மொழியில்” எல்லாப் பொருளும் உள, இல்லாத எப்பொருளும் இல்லையல்லவா?
. மனிதன் தன் வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை அழுத்தங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது; சமாளிக்க வேண்டியிருக்கிறது. இரத்த அழுத்தம். பண அழுத்தம், மன அழுத்தம், காற்று அழுத்தம். நெஞ்சழுத்தம்……………………..!

அதில் அதிகமாக மனிதனை வாட்டியெடுப்பது அவனது ’மன அழுத்தம்’. ஆங்கிலத்தில் “STRESS” என்றும் அதைச் சமாளித்தலை “STRESS MANAGEMENT” என்றும் தலைப்பிட்டு, எந்த நிலை ஆளுமை வளர்ச்சிப் பயிலரங்கத்திலும், உரை அரங்கத்திலும், வகுப்புக்களிலும் கையாளப்பட்டு வருவது.

அழுத்தம் என்றால் என்ன? மன அழுத்தம் என்றால் என்ன/ அது எப்படி, எப்போது, ஏன் ஏற்படுகிறது? அந்த அழுத்தம் ஒரு மனிதனை என்ன செய்கிறது? அதை எப்படிச் சமாளிப்பது? அதற்கு மருந்து எந்த மருத்துவர் கொடுப்பார், எந்தக் கடையில் கிடைக்கும்? இப்படியெல்லாம் நீங்களும் யோசித்திருக்கலாம்.!

அது என்ன மனக்கவலை? அதற்கும் மன அழுத்தத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்ன தொடர்பு, உறவு? அதை மாற்றுதல் அரிது என்று எல்லாம் உணர்ந்த, முற்றும் உணர்ந்த திருவள்ளுவப் பெருந்தகை ஏன் கூறினார்? அதற்கு என்ன மாற்று சொல்லியிருக்கிறார் என்பதையும் சற்று பார்ப்போம்.

மன அழுத்தம் என்பது இருவகைப் படும் என்பார்கள். மூளையின் செயல்பாடு குறைவினால் ஏற்படும் சைக்காட்டிக் (Psychotic) மன அழுத்தம் மற்றும் அவ்வப்போது வாழ்க்கையில் ஏற்படும் பாதகமான சூழலினால் ஏற்படும் நியூராட்டிக் (Neurotic) மன அழுத்தம்.. இவற்றுள் நியூராட்டிக் வகையே மிகவும் பொதுவாகக் காணப்படுவது. கடந்த காலத்தைக் குறித்த குற்ற உணர்வு, நிகழ்காலத்தைக் குறித்த உதவியற்ற நிலை, எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையின்மை இவையே இத்தகைய மன அழுத்தத்தின் முக்கிய காரணங்கள்.. எனவே அத்தகைய சூழ்நிலைக்குள் ஒருவனைத் தள்ளும் எந்தவொரு பாதகமான சூழ்நிலையும் அவனுக்கு மனஅழுத்தத்தைக் கொண்டுவருகிறது.

விரைந்து செல்லும் இந்த வேடிக்கையான உலகில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் இந்த மன அழுத்தம் தாக்கி துன்புறுத்துகிறது.
மூன்று வயதுக் குழந்தைக்குப் பள்ளிக்கூடம்! அதிகாலையில் எழுந்திருப்பது, பள்ளிக்குத் தயார் செய்து கொள்வது, சாப்பிடுகிறதோ இல்லையோ, பிடிக்கிறதோ இல்லையோ விளையாட்டுப் பள்ளிக் கூடமாக இருப்பினும் அந்த வயதில் பள்ளிக்குச் செல்வதே மன அழுத்தத்தைத் தருகிறது. அந்த மன அழுத்தம், வீட்டில் இருக்கும் பொழுது கூட விளையாட்டையோ, மற்றவர்களிடம் பழகுவதையோ கூடத் தடை செய்கிறது. பெற்றோர்களுக்குக் குழந்தைகள் மன அழுத்தத்தில் உள்ளனர் என்று கண்டு கொள்ளவோ, அதனைச் சரிசெய்யவோ மனமும் இல்லை, நேரமும் இல்லை!! வேடிக்கையான உலகம் இது!!

இந்த சூழ்நிலையில் வளர்ந்து பெரியவர்களான பிறகு, பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு, தொடர்ந்து வேலைக்குச் செல்லுதல், வேலையில் இடமாற்றம், பணி மாற்றம், பணி உயர்வு, பணியிலிருந்து ஓய்வு, முதுமை நோய், முதுமை வாழ்க்கை இப்படி ஒவ்வொரு நிலையிலும் மன அழுத்தம்!

இந்த விரைவு உணவுக் காலத்தில், காலையில் எழுந்திருத்தல், கல்வி, பணிக்குத் தயார் செய்து கொள்ளுதல் உணவு விடுதிகளில் காத்திருத்தல், உணவு அருந்துதல், ரயில்/ பஸ் பிடித்தல், அதற்காகக் காத்திருத்தல், தனது இரு சக்கர / நான்கு சக்கர வண்டியில் போக்குவரத்து நெருக்கடியில் பயணம் செய்தல், வீடு திரும்புதல், மருத்துவ மனையில் காத்திருத்தல், திரைப்பட அரங்கில் காத்திருத்தல், வெளியூர்பயணச் சீட்டுகளுக்காக பஸ் நிலையத்தில், ரயில் நிலையத்தில் காத்திருத்தல் / ஆன்லைன் பயணச்சீட்டு பதிவுசெய்வதற்காக வீட்டில் கணினி முன் காத்திருத்தல்- காத்திருந்து, காத்திருந்தே வாழ்வில் ஐம்பது சதவிகித நேரத்தை வீண் செய்தல் - அப்பப்பா ஒவ்வொன்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும் கொடுமை சொல்லில், சொல்லி மாளாது, எழுத்தில் வடித்து மாளாது!

நாம் இருக்கும் இந்த பிஸியான உலகில் stress எனப்படும் இந்த மன அழுத்தம் நமது வாழ்வில் அன்றாட சோதனையாக மாறிவிட்டது! கடன், வேலையின்மை, குடும்பத்தில் பிரச்சினைகள், பள்ளியில் பரீட்சை போன்றவை நமக்கு மன அழுத்தத்தை தருகின்றன.. ஆனால், இந்த மன அழுத்தம் நம்மையும் நமது உடலையும் பாதிக்கின்றது என்பது இன்னும் வேதனை. இதனால் சிலரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விடுகிறது..

உயிரியல் ரீதியாக மன அழுத்தம் சில வேளைகளில் மிகவும் உபயோகமாக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. இரவு நேரத்தில். நாம் தனியாக நடந்து செல்கையில் ஒரு திருடன் நம்மைத் தாக்கவந்தால், நமது உடல் ஒரு விதமான அழுத்த நிலையை அடைந்துவிடும். நமது இருதயம் வேகமாகத் துடித்து, தசைகள் இறுகி அவனை நாம் தாக்குவதற்கோ அல்லது அந்த இடத்தை விட்டு உடனடியாக ஓடுவதற்கோ நமது உடல் தயாராகிவிடும்! ஆகவே, இப்படி ஆபத்தான நேரங்களில் மன அழுத்தம் நம்மைக் காப்பாற்றுகிறது.

ஆனால், இதே மன அழுத்தம் அன்றாட வாழ்க்கையில் தொடரும்பொழுது, அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஜப்பானில் இதற்கு Karoshi என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதன் நேரடி மொழிபெயர்ப்பு ”அதிக வேலைப்பளு மரணம்“ ஆகும். மிகவும் ஆரோக்கியமானவர்கள் என்று கருதப்படுபவர்கள் கூட திடீரென்று மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற நோய்கள் காரணமாக இறந்து விடுகிறார்கள். இதை ஆய்ந்தவர்கள் இந்த நோய்களுக்கும் மன அழுத்தத்திற்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்..

மன அழுத்தம் இருக்கும் போது நமது உடலில் என்ன நடக்கிறது? பொதுவாக Cortical எனப்படும் இயக்குநீர் (hormone) தான் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி உடலின் எந்த உறுப்புகளுக்கு சக்தி தேவையோ அந்த இடங்களுக்கு சக்தியை அனுப்ப உதவுகிறது. ஆனால், மன அழுத்தம் தொடர்ந்திருந்தால் பல பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு முற்றிலும் தனது பணியை நிறுத்திவிடும், அத்துடன் வெண்-ரத்த அணுக்களின் (white blood cells) எண்ணிக்கை குறைந்து, மேலும் நோய்கள் வருவதன் வாய்ப்பு அதிகரித்துவிடுகிரது. புற்றுநோய் வருவதற்குக் கூட வாய்ப்புகள் இருக்கிறது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்..

அது மட்டும் இல்லை… நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு உயிரணுவிலும் அடங்கி இருக்கும் ஒவ்வொரு நிறப்புரியின் (chromosome) நுனியிலும் telomeres எனப்படும் ஒரு பகுதி இணைந்திருக்கிறது. இந்த telomeresஇன் அளவு வயது போகப் போகக் குறைந்துகொண்டே போய் ஒரு கட்டத்தில் முற்றிலும் நீங்கி விடும். அத்துடன் அந்த உயிரணுவும் இறந்துவிடுகிரது.… ஆகவே அந்த telomeres இல்லாமல் போகும்போது மனிதனும் இறந்து விடுகிறான்.. இதில் முக்கியமான உண்மை என்னவென்றால், மன அழுத்தத்திற்கும் இந்த telomeresஇன் அளவு குறைவதற்கும் தொடர்பு இருக்கிறது. அழுத்தம் கூடக் கூட telomeresஇன் அளவு குறைவதின் வேகமும் அதிகரித்து விடுகிறது. ஆகவே, மனிதன் மரணத்தை நோக்கி வேகமாகச் செல்கிறான்!

அதற்காக அச்சப்படத் தேவையில்லை. ! மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் ஒரு இயக்குநீர் இருக்கிறது-அதுதான், நேசம், பாசம் அன்பு, சந்தோஷம் போன்ற உணர்வுகளுக்கும் காரணமாக இருக்கும் Oxytocin எனும் இயக்குநீர் தான். ஆகவே, மன அழுத்தம் உள்ள நேரத்தில் நாம் நமக்குப் பிடித்தவர்களுடன் பேசிக்கொண்டோ, பிடித்த வேலையில் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருந்தோம் என்றால் மன அழுத்தம் குறையும்.


மன அழுத்தத்தின் அறிகுறிகள்:

தூக்கமின்மை, கவலை, சோர்வு, பயம், அடிக்கடி தலைவலி, மயக்கம், எரிச்சல், மன உளைச்சல், ஜீரணக் குறைபாடுகள், தனிமை, தாழ்வு மனப்பான்மை, குறைவாக அல்லது மிக அதிகமாக உணவு அருந்துதல் போன்றவை மன அழுத்தத்தின் சாதாரணமான அறிகுறிகள். மன அழுத்தத்தின் தொடர் தாக்குதலினால் உயர் இரத்த அழுத்தம், நெஞ்சுவலி, தோல் நோய்கள், ஒற்றைத் தலைவலி, வயிற்றுப் புண், ஆஸ்துமா மூச்சுத் திணறல் போன்ற நோய்கள் கூட உண்டாகலாம்.

மன அழுத்தத்திற்கான சில காரணங்கள்:

மனத்தில் ஏற்படும் சிறு சிறு கவலைகள் கூட மன அழுத்தத்திற்கு இட்டுச் செல்லுகின்றன.
அன்றாட வேலைப்பளு, போதிய நேரமின்மை, உறவினர் / நண்பர்களுக்கிடையே ஏற்படும் மிகச் சாதாரண கருத்து வேறுபாடுகள்; போதிய பொருளின்மை. போன்றவை மன அழுத்தத்திற்குக் காரணமாகின்றன.
எதிர்பார்ப்புக்கள் அதிகமாக அதிகமாக மன அழுத்தங்களும், ஏற்படவும், அதிகரிக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன.
வாழ்க்கையில் எதிர்பாராது ஏற்படும் நிகழ்வுகள். இழப்புகள் அதனால் ஏற்படும் வேதனை;, எதிர்பார்த்தவைகள் நடைபெறாத ஏமாற்றம். குற்ற உணர்வுகள், தேர்வில் தோல்வி, விளையாட்டில் தோல்வி, காதலில் தோல்வி, அலுவலகப் பணியில் தோல்வி இவற்றால் ஏற்படும் தோல்வி மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை, கடன்தொல்லை, போன்றவையும் மனஅழுத்தத்தை உண்டாக்குகின்றன..
நடந்த சில நிகழ்வுகள் பற்றிய சிந்தனைகள்; அதன் விளைவாகச் சரியாக உணவு எடுக்காது, தூங்காது இருத்தல். அப்படி இருக்கும் பொழுது, அதற்குத் துணையாய் இருக்கும் சில ஹார்மோன்கள் சுரந்து வேதனையை அதிகரித்து மூளையிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

. கடந்த காலத்தைக் குறித்த குற்ற உணர்வு, நிகழ்காலத்தைக் குறித்த உதவியற்ற நிலை, எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையின்மை இவையும் இத்தகைய மன அழுத்தத்தின் காரணங்கள்.. எனவே அத்தகைய சூழ்நிலைக்குள் ஒருவனைத் தள்ளும் எந்தவொரு பாதகமான சூழ்நிலையும் அவனுக்கு மன அழுத்தத்தைக் கொண்டு வருகிறது.

மன அழுத்தத்தின் விளைவுகள்:

அமைதி இழத்தல், கவலைப் படுதல், வாழ்கையில் விரக்தி அடைதல், அதனால் ஏற்படும் தற்கொலை நினைவுகள், கொலை செய்ய முயற்சித்தல், குடிபோதைக்கு அடிமையாதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம்.. இதை ஒரு நோயாகவே மனநலமருத்துவர்கள் கருதுகின்றனர்..

இந் நோயானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினருக்கும் ஏற்படலாம். ஒரு சிறு மன உளைச்சலும், மன அழுத்தத்தைத் தூண்டி விடுகிறது. இந்த மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவே கவலை, தனிமை, உதவியற்ற மற்றும் நம்பிக்கையற்ற உணர்வுகள்.. இந்த மன அழுத்தமானது கோபம், பயம், கவலை, நம்பிக்கையின்மை, குற்ற உணர்வு, அக்கறையின்மை, துக்கம் போன்ற பலதரப்பட்ட உணர்வுகளின் கலவை. இதன்போது செய்யக் கூடாதவற்றை செய்யத் தூண்டுவதும் கூட பொதுவானது.

இவ்வாறு மன அழுத்தத்தின், குறிகளும், காரணங்களும், விளைவுகளும் பொதுவானவை என்றாலும், அனைவருக்கும் , அதே குறிகளும், காரணங்களும், விளைவுகளும் இருக்க வேண்டும் என்பதில்லை.

எனவே,மன அழுத்தத்தை நிர்வகிப்பது எப்படி?

வள்ளுவன் சொற்படி மன அழுத்தம் உள்ள ஒவ்வொருவரும்
”நோய் நாடி, நோய் முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” புரிய வேண்டும்.

மன அழுத்தம் என்பதும் ஒரு நோய் எனக்கருதி, இது இதனால் என ஆய்ந்து, அதன் அடிப்படைக் காரணத்தையும் ஆய்ந்து, அதனைத் தீர்க்கும் வழியை ஆய்ந்து, அதை மனத்திற்கு ஏற்றவாறு அறிந்து நிர்வகிக்க வேண்டும்!
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். ஏழை, பணக்காரர், கெட்டிக்காரர் முட்டாள், படித்தவர் படிக்காதவர், பணியில் இருப்பவர் பணியில் இல்லாதவர், ஆண், பெண், சிறுவர்கள் பெரியவர்கள் என்று எந்த வேற்றுமையும் கிடையாது பிரச்சினைகளுக்கு. அனைவரோடும் உறவும் தொடர்பும் கொண்டிருக்கும் பிரச்சினைகள்! அளவில் மாறலாம்; தன்மையில் மாறலாம்! .அவ்வளவே; பிரச்சினை என்பது பிரச்சினைதானே!

எனவே பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படாமல், எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஏதோ ஒரு தீர்வு உண்டு என்ற மனநிலையை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்; அப்பொழுது மன அழுத்தம் குறைந்து, படிப்படியாக குணமாகும். . தனிமையைத் தவிர்த்து நண்பர்களுடன் நேரத்தை கழிக்கலாம். நமக்கு என்ன பிடிக்குமோ அதை செய்யலாம். செடி வளர்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது, கோலம் போடுவது, புத்தகங்கள் படிப்பது, இசையை ரசிப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடலாம்.

எதிர்காலத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் நண்பர்களுடன் பழகுவது, நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களோடு உறவாடி உரையாடுவது மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாக இருக்கும்.

பல நேரங்களில், நேரமே நமது மன அழுத்தத்திற்கு காரணமாகிறது.
’நேர நிருவாகம்’ சரியாகச் செய்து பழகியவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகப் பாதிப்பதில்லை. அதிகாலையில் எழுந்திருப்பவர்களுக்கு எதற்கும், எவ்வளவு வேலைகளுக்கும் நேரம் கிடைக்கிறது என்பது வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களது, சாதனை படைத்தவர்களது அனுபவம்.

சோம்பேரித்தனம் என்பது நேர நிர்வாகத்தின் முதல் எதிரி. அதன் வயப்பட்டவன் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியாது; அவரது மன அழுத்தம் என்றும் குறையாது. எனவே, வள்ளுவன் அமுத மொழிப்படி
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் அந்த மரக்கலன்களில் –காலதாமதம், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் இவற்றில் - கால் வைக்காது பழகி விட்டால் மன அழுத்தம் இதனால் ஏற்படாது. இவற்றை ஒழிக்க சிறு வயது முதலே பழக வேண்டும்..

நாம் முன்னரே கண்டவாறு, செய்ய நினைத்த செயலைச் செய்ய முடியாவிட்டாலோ, தவறாகச் செயல் பட்டாலோ அது நமது மன அழுத்தம் அதிகரிக்கும். திரு வள்ளுவர் வழி கூறுவார்:
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல் என்று. ஆம்! கிடைப்பதற்கு அரிய காலம் கிடைக்கும்பொழுது, அந்த நல்ல வாய்ப்பினைப் பயன்படுத்தி, செய்வதற்கு அரிய செயலையும் உடனடியாகச் செய்து முடிக்கலாம்; முடிக்க வேண்டும்.
மன அழுத்தத்திற்கு விடை சொல்ல வேண்டும்.

உணர்ச்சி என்பது இயற்கை கொடுத்த வரம்; இறைவன் தந்த பரிசு! உணர்ச்சி வயப்படுதல் என்பது மனித இயற்கை. ஆனால் ஒரு அளவைத் தாண்டும் பொழுது அது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே உணர்ச்சி வசப்படாதவாறு மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் பின்னர் பார்க்க இருக்கும் ஆன்மீகம் உதவும். . . .

சரியான திட்டமிடுதல், அவசர மற்றும் அவசியப் பணிகளை முதலில் முடித்தல், வேலைப்பளுவில் அவ்வப்போது ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், தனிமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், தியானம், உடற்பயிற்சிகள், பொழுதுபோக்குக் காட்சிகள் முதலானவை மன அழுத்தத்திற்கு மருந்துகளாக பலராலும் அவ்வப்போது பரிந்துரைக்கப் படுகின்றன.

நமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், உணர்வுகளைப் பற்றியும் நடந்தவைகள் பற்றி நாம் யாருடனாவது பேசவேண்டும்., நமது உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ இது பற்றிக் கூறுவதற்கு விரும்பாவிட்டால் இதற்காக தகுந்த ஆலோசனைகள் வழங்க காத்திருக்கும் மனநிலை (Counseling)) ஆலோசகரை அணுகலாம். .

எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, நாம் சம்பந்தப்பட்டவரிடம் மனம் திறந்து பேசினால் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

நம்முடைய பழக்கவழக்கங்களை சீராக்கிக் கொள்வதும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரு சிறந்த வழி. அதாவது, குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுவது, சத்தான உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என வாழ்க்கையை ஒரு வரைமுறைக்குள் வைத்திருந்தால் மன அழுத்தம் ஏற்படாது; ஏற்பட்டாலும் விரைவில் விலகிவிடும்..
வாழ்க்கையை அன்புடன் நட்பாக்கிக் கொண்டால்.. மனது தெளிவாகும்.. வாழ்க்கை வளமாகும்.!

மது அருந்துதல், போதைப் பழக்கம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள சிலர் இவற்றை நாடுகின்றனர். ஆனால் இவை அதிகரிக்கவே செய்யும். ஆரோக்கியமான உணவுக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்..

சர்க்கரை மற்றும் கபீன் அடங்கிய உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.. மன அழுத்த ஹார்மோன்களை இந்த கபீன் சுரக்கச் செய்வதோடு உணர்ச்சிகளை கூட்டிக் குறைப்பதில் சர்க்கரை முக்கிய பங்கு வகிக்கிறது.
மனஅழுத்தம் என்பது தொன்று தொட்டே இருந்து வரும் ஒன்று தான். அறிவியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் மனிதன் பெருவளர்ச்சி கண்ட பின்னரும் எதிர்பார்த்த ஏதோவொன்று இன்னமும் கிடைக்காத ஏமாற்றம், தோல்வி, வெறுமை உணர்வில் மன அழுத்தம் ஒருவனை நிலைகுலையச் செய்து விடுகிறது. வான்மழை பொய்த்தால் வறுமையின் கொடுமை தாங்காமல் உயிர்விடும் விவசாயிகள் முதல் பணவீக்க ஏற்றத்தாழ்வினால் பதவியிழந்து பரிதவிக்கும் படித்தவர்கள், காதல் தோல்வியுற்றால் வாழ்க்கையை வெறுக்கும் காதலர்கள் வரையிலும் அது எவரையுமே விட்டு வைப்பதில்லை.

மன அழுத்தம் தீர்ப்பதில் ஆன்மீகத்தின் பங்கு

”எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்” என்ற உமர்கய்யாம் சொற்களை நினைவில் கொள்ள வேண்டும்.

கணியன் பூங்குன்றனார் சொற்களான ”நீர் வழிப்படும் புணைபோல் ஆருயிர் முறைவழிப்படூஉம்” என்றதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வள்ளுவப் பெருந்தகை
“தெய்வத்தான் ஆகாதெனினும், முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்”
என்று முயற்சியின் சிறப்பை அருமையாகக் கூறியிருந்தாலும், அவர் எழுதிய “ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்”
என்ற அமுத மொழியினை நினைவில் வைப்பது மன அழுத்தத்தை குறைப்பதற்கு உதவும்.

மனநல மருத்துவத்துக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமில்லை என்று நினைத்தது ஒருகாலம். அப்போது மதம் மற்றும் ஆன்மீகச் செயல்கள் மன நோயாகக் கருதப்பட்டன. ஆனால் இன்றைய ஆய்வுமுடிவுகள் ஆன்மீகம், மனிதனின் நோய் மற்றும் அதனால் ஏற்படும் மன உளைச்சலுக்கு தீர்வாக அமைவதை உறுதிப் படுத்துகின்றன. இதன் விளைவாக இந்நாட்களில் உலகமெங்கிலும் பரவலாக பல நாடுகளின் மனநல மருத்துவத் துறையில் ஆன்மீகத்துக்கென்றே தனிப்பிரிவுகள் செயல்படத் தொடங்கியுள்ளன. தியானம், ஆலய வழிபாடு, பிரார்த்தனைகள் வாழ்க்கையில் நம்பிக்கையையும் தெம்பையும் கொடுக்கிறது. மனதை திடப்படுத்திக் கொள்ள உதவுகிறது. ஆம்! பாரதியின் கூற்றுப்படி ”இது இந்தியா உலகத்திற்கு அளித்த நன்முறை”..
இறைவன் மேல் வைக்கும் பக்தி நமது பிரச்சினைகளை சவாலாக ஏற்று, தைரியத்துடன் எதிர்கொள்ளத் தேவையான மன உறுதியையும், உடல் வலிமையையும் தருகிறது..

இவற்றைக் கருதியே, 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருவள்ளுவப் பெருந்தகை தனது முதல் அதிகாரத்திலேயே இறைவன்பால் வைக்க வேண்டிய பக்தியின் தேவையையும், சிறப்பினையும் அழகாகச் சுட்டிக் காட்டுகிறார்.
ஆம்! மனக்கவலை மாற்றல் அரிது என்றார். யாருக்கு? ”தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்” அதன் பொருள் என்ன?

அவன் தாள் சேர்ந்தவர்களுக்கு ”மனக்கவலை மாற்றல் எளிது!”

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்!

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு எப்பொழுதும் எங்கும் துன்பமில்லை - துன்பமில்லாதவர்க்கு மன அழுத்தம் எப்படி வரும்?

இவ்வாறாக இறைவன் / இயற்கை நமக்கு அளித்துள்ள அறிவு, வாய்ப்புக்கள் அனைத்தையும் நல்ல முறையில் பயன்படுத்தி, எழும் பிரச்சினைகளை எல்லாம் சவாலாக ஏற்று வளர்ச்சியுற்ற நமது ஆளுமைத் திறத்தினால் வையத்து வாழ்வாங்கு வாழ்வோம்! வானுறையும் தெய்வத்துள் வைக்கப் பெறுவோம்!

எழுதியவர் : என் வி சுப்பராமன், சென்னை (21-Feb-15, 3:29 pm)
பார்வை : 565

சிறந்த கட்டுரைகள்

மேலே