அரசியலும் - சாக்கடையும்

அரசியலும் - சாக்கடையும் ***
---------------------------------------

காட்சிக்கு இரண்டுமே
நிறமதில் ஒன்றாகவே

வழிகள் வேறாயினும்
கூடும் இடத்திலெல்லாம்
நாற்றம் உறுதியே

எத்தகைய
கைதேர்ந்த வித்தகனையும்
தோற்கடித்துவிடும்
சுத்தம் செய்ய எண்ணும் நேரங்களில்

புழுக்கள் உற்பத்தி
இரண்டிலும் உண்டு
ஒன்று உயர்திணையில்
மற்றொண்டு அஃறிணையில்

கழிவுகளுக்கு மட்டுமே
இரண்டிலும் அனுமதி

நல்ல நிலைகளையும்
நாற்றம் காணும் சகோதரர்கள்

அசுத்தம் மேலும் செய்வதே
இரண்டின் லட்சியம்

இரண்டின் பாதையிலும்
நேர்வழி குறைவே

இரண்டையும்
கடக்கும் நொடிகளில்
முகச்சுளிவு இயல்பே

கணக்கில் அடங்காது
ச(க)திகளின் எண்ணிக்கை

இரண்டிற்குமே
உற்ற நண்பன் - கடல்
ஒன்றின் கலப்பின் போதும்
ஒன்றின் சமாதியின் போதும்

பரப்புதல் இரண்டிற்குமே
பொதுவான குணம்
ஒன்று கொசுக்களையும்
ஒன்று கொள்கைகளையும்

ஆட்களை விழுங்குவதில்
இரண்டுமே வல்லவை

ஒன்று புழுக்களாக
பாசிகளையும்
ஒன்று தலைவர்களாக
விசுவாசிகளையும்

இப்படி எல்லா விதத்திலும்
இரண்டுமே ஒற்றுமை கொள்ளும்

ஒன்றைத்தவிர

சாக்கடையில்
கால் நனைத்தால் - நாற்றம்
கழுவும் வரை

அரசியலில்
கால் நுழைத்தால் - நாற்றம்
காலம் முடியும் வரை

-- கற்குவேல் .பா.

( *** குறிப்பு - இப்படைப்பு கவிஞர் வைரமுத்து அவர்களின் "காதலும் மரணமும்" என்ற கவிதையின் மேல் கொண்ட ஈர்ப்பில் , அதன் சாயலில் எழுதியது .)

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (21-Feb-15, 6:18 pm)
பார்வை : 104

மேலே