தோல்வி பாராட்டு
அதிரும் சத்தம்
அரங்கம் முழுதும்
குவிந்து கிடக்கும்
வெற்றி வாழ்த்துகள்
முன் பின் தெரியாமல்
முளைத்த உறவுகள்
இது எதையும் விரும்பாத
என் மனம்......
இந்த வெள்ளை
ஆடைக்குள் ஒளிந்திருக்கும்
தோல் போர்த்திய
உடல் தசைகள்
கிழிந்து கசியும்
சிகப்பு இரத்தம்...
எனக்கு மட்டுமே
தெரிந்த இரகசியம்...
ஏனோ மனம்
இழந்தவைகளை
மீண்டும் மீண்டும்
மென்று மென்று
புதியதாய் சேமித்துவிடுகிறது
செரித்து கழித்து
மறந்து விடத்தான் எண்ணுகிறேன்...
முடியவில்லை...முடிவும் இல்லை...
குழந்தையின் குதூகலத்தில்
வாழ்வு என் விரல் பிடித்து
பூக்கள் விரிந்த தெருக்களின்
வழியே வெற்றி மேடை
ஏற்றும் என்று
எண்ணம் கொண்டேன்...
அனால் அதுவோ...
தலை முடி பிடித்து
தர தரவென
கழிவுகளின் மேல் இழுத்து
கல்லிலும் முள்ளிலும்
தேகம் உரசி....
இரத்தம் சொட்ட சொட்ட
கடைசியில் விட்ட இடம்
காலனின் கால் அடியில்....
எழுந்த நிற்கவோ
எண்ணத்தில்
திராணி இல்லை....
சுற்றிலும் முழுதும் இருள்...
வெற்றிகளின் எக்களிப்பில்
என் செவி கிழித்த
அவர்களின் சிரிப்பொலிகள்....
விழுந்து விடலாம்
என்றுதான் எண்ணினேன்....
முளைத்துதான் பாரேன் என்று
முனகியது மனம்.....
என் பாதை ....
என் பயணம்...
என்ற விதை
என்னுள் விதைத்து....
கசிந்த குருதி ஊற்றி...
உறுதி தந்தேன்...
உடைந்த கால்கள் ஊன்றி...
மேல் படிந்த கழிவு துடைத்து...
நின்று விட்டேன் எழுந்து...
என் தவறுக்கு எனை கொட்டி
என் முதுகை நான் தட்டி
ஒவ்வொரு அடியிலும்
சறுக்கி வழுக்கி
விழுந்து எழுந்து
இதோ ஏறி விட்டேன்
எனக்கான மேடையிலே!
கரவொலிகள் கசக்கின்றன....
இந்த வெள்ளை ஆடைக்குள்
இன்றும் எனது கிழிந்த
அந்த அரை குறை ஆடைகள்..
தோல்விகளில் கற்கும் பாடத்தினை...
எந்த வெற்றியும் சொல்லி தருவதுஇல்லை....
நான் தோல்விக்கு நன்றியும்
தோற்றவனுக்கு வாழ்த்தும் சொல்லுகிறேன்....
அவனும் கற்க போகிறான்....