தற்கொலைக்கு சற்றுமுன்

அவனது விதியை அவளும்
அவளது விதியை அவனும்
சோடி சேர்த்து வைத்திருந்தார்கள்
ஒரு வாழ்க்கையாய் திரித்து
காலத்திடம் ஒப்படைக்கவென்று

ஆபரணங்கள் விருப்பமானவர்களுக்கு
தட்டான்களை பிடிப்பதுபோல்
கொல்லர்களை பிடிப்பதில்லை

இரும்படிப்பவனிடமிருக்கும் சம்மாட்டியும்
பொன் செய்பவனிடமுள்ள மஞ்சடி தராசும்
பொருந்தி வருவதில்தான்
சிக்கல்கள் சீர்தூக்குகின்றன
தும்பிகளை விரும்பிக் கொண்டிருப்பவர்கள்
வணணாத்திகளை வெறுக்கிறார்கள்

இறைவனின் விதிப்படியானது
மனிதர்களின் பாத்திரங்கள்
என்பதை மறந்து
ஒருவரின் வாழ்வை
நிர்ணயிப்பதில் பங்கற்றவர்கள்
சாவை தீர்மானிப்பதில் முன் நிற்கிறார்கள்

இருவரின் கனவுகளையும்
எரித்துவிட சுடலை
தயாராகவிருந்த நாளொன்றில்
இருவரின் விதியையும்
குடும்பமும்,ஊரும்சேர
இருபக்கமும் முறுக்கி
திரித்து விடுகின்றனர்
இருவருக்கும் பொருந்தக் கூடிய
தூக்கு கயிறினை
அப்போதிருந்து
அவ்விடத்தில் வெளிவந்து தொங்கின
நிறைய நாக்குகள்!



ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (23-Feb-15, 11:05 pm)
பார்வை : 139

மேலே