என் பயணத்தின் பக்கங்கள் - உதயா

அகன்ற என் மனதில்
ஆயிரம் எண்ணங்கள்
எண்ணங்கள் அனைத்தும்
வாழ்நாள் கனவுகள்
கனவுகள் அனைத்தும்
வாழ்கையின் பயணங்கள்

முன்னூறு நாட்களாய்
என் உடல்களும் உருவானது
ஓர் இருட்டறையில்
அதற்கு பெயர்தான்
கருவறையென்றனர்

ஆம் கருவறைதான்
என் வாழ்வின்
பயணம் தொடங்கும்
கடவுளறைதான்

முன்னூறு நாட்கள்
என்னை சுமந்தவள்
ஏனோ ?
நான் பிறந்த
முதல் நொடியிலே
எங்கோ பறந்துப் போனாள்

பறந்து போனவள்
மூன்றாண்டுக்குப்பின் திரும்ப வந்தால்
பெற்றெடுத்த என்னைக் பார்க்க அல்ல
என் தகப்பனையும் தன்னோடு
அழைத்துச் செல்ல

உறவென இருந்த
சொந்தங்களும்
காணாமல் போயின
என் சொத்துகளோடு

பெயரின்றி உறவின்றி
தெருக்களில் திரிந்த எனக்கு
இந்த சமுதாயம் வைத்தப்
பெயர் அநாதை

புத்தகம் சுமக்கவேண்டிய
என் முதுகு மூட்டைகளை சுமந்தன
பேனாவை ஏந்த வேண்டிய என் கரங்கள்
உணவு விடுதியில் எச்சை தட்டுகளை
ஏந்தி நின்றன

அறிவு பசிக்கு என் மூளை
செயலிழந்துப் போனது
வயிறு பசிக்கு என் முதுகு
உணர்வியந்துப் போனது

வெற்றியைக் கண்டுவிட
என் கால்கள் ஒருபடி மேலெழுந்தது
வெற்றியை சிறைபிடித்த தோல்விகள்
ஓராயிரம் படிகளில் அமர்ந்திருந்தது

நிலவான என் முகமோ
நிலவில்லா வானமானது
அதுவே எனக்கு வாழ்வானது

மலரும் பூவான என் மேனியோ
காய்ந்த கருவாடானது
அதுவே என் வாழ்வின் பரிசானது

இதயத்தின் துடிப்போடு
சில வசனங்கள் ஒலித்தது

நீ
உன் பயணத்தின் முடிவினை
நெருங்கி விட்டாய்யென்று

அகன்ற என் மனமோ
அணுவாய் போனது
அதில்
ஆயிரம் எண்ணங்களும்
அழிந்துப் போனது

உருவான இருட்டறையில்
திரும்பவும் புகுந்தேன்

புகுந்தப் பின் தான் சொன்னார்கள்
அது கல்லறையென்று

ஆம் கல்லறைதான்
என் வாழ்கை பயணத்தின்
ஓய்வறைதான்

எழுதியவர் : udayakumar (24-Feb-15, 4:26 pm)
பார்வை : 1000

மேலே