மழை

வரண்டு கிடக்கும்
வயல் வெளி தாண்டி
இருண்டு கிடக்கிறது
எட்டாத வானம்.
எங்கோ ஒலிக்கும்
ஆட்காடிக் குருவியின்
அலறலும்
இடைவிடாது
இரையும்
சிள் வண்டின்
கீச்சிடலும்
ஏழைக் கிழவனின்
தோளில் கிடக்கும்
கலப்பையின்
துயர்ப் பாட்டைத்
தூரச் சுமந்து செல்கிறது.
வரண்ட பாசிகளுடன்
சுருண்டு கிடக்கும்
வாய்க்காலில்
வாய் நனைக்க
வந்த எருதுகளை
இயலாமை
உணர்ச்சியுடன்
உள்வாங்கும்
நேற்றுக் காய்ந்த
சேற்றின் ஈரம்
கண்டு உழுத
களை நீங்க அவன்
குடிக்கும் கஞ்சித்
தண்ணீர்
கழுத்தை விட்டு
உள்ளிறங்க
மறுக்கிறது.
உருவமிழந்த
வேம்பொன்று
பருவமில்லாக்
காலத்தில்
உதிர்த்த
சருகுகுச் சிறகுகளை
உஷ்ணப் பிரம்பெடுத்து
ஓட விரட்டும்
ஒன்றுமறியாப்
புழுதிக்காற்று
ஒரு தடவை
எங்கோ ஒலித்த
இடியின்அதிர்வில்
ஒதுங்கி நிற்கிறது......
தொலைவில்
கூடி நகரும்
கோடி மேகங்கள்
கொட்டிக்
கொடுக்கின்ற
நீர்த்திவலைகளை
ஆவலுடன்
பருக துடிக்கின்ற
நாற்றுக்களின்
சந்தோச அசைவுகளில்
மகிழ்ந்து இசைக்கும்
நுணல்களின் சங்கீதத்தில்
லயித்துக் கிடக்கிறான்
வீடு திரும்ப மனமின்றி
விழித்துக் கிடக்கும்
வயற்பரப்பில்....